கொந்தகைக்காரர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது

நமது கொந்தகை பழமையான ஊர்தான். இப்போது அருகிலுள்ள கீழடியில் அகழாய்வு நடப்பதால் மணலூரும், கொந்தகையும் அடிக்கடி செய்தியில் அடிபடக் காண்கிறோம்.

கொந்தகை பெயர்க்காரணம் பற்றி எனக்கு கொஞ்ச நாளாகவே ஐயம் உண்டு. குந்திதேவிச் சதுர்வேதி மங்கலம்தான் கொந்தகை ஆகிவிட்டது என்கிறார்கள். இருக்கலாம். சீதேவி பூதேவி உடனுறை தெய்வநாயகப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் அவ்வூரில்தான் திருமலை ஆழ்வார் எனப்படும் திருவாய்மொழிப்பிள்ளை பிறந்தார் என்கிறார்கள். அதிலும் குழப்பம் இல்லை.

ஆனால் தனியாக திருவாய்மொழிப் பிள்ளையின் அவதார ஸ்தலம் பற்றித் தேடினால் அது பாண்டிய நாட்டிலுள்ள குண்டிகை என்கிறார்கள். அதனால் இயல்பாகவே குண்டிகைதான் கொந்தகை ஆகிவிட்டதோ என்ற ஐயம் எழத்தான் செய்கிறது. சொல்லக் கூச்சப்பட்டுக்கொண்டு குந்திதேவியை மட்டும் சொல்கிறார்கள் போலும்.

கொந்தகை பெயர்க்காரணத்துக்கு இப்போது இழுத்துவிட்டவை ‘சிற்றிலக்கியங்கள்’ கட்டுரை நூலில் நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும் இந்த வரிகள்தான்:

பொருள் புரிந்தும் புரியாமலும் திகைத்து நிற்கும் பாடல்களும் உண்டு.

குறை கொண்டு, நான்முகன் குண்டிகை நீர்பெய்து

மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி – கறை கண்ட

கண்டத்தான் சென்னிமேல் ஏறக்கழுவினான்

அண்டத்தான் சேவடியை ஆங்கு

என்பது பாடல்.

‘நான்முகன் குண்டிகை நீர் பெய்து’ எனும் தொடரில் குண்டிகை எனில் கமண்டலம் என்று தமிழ் லெக்சிகன் கூறுகிறது. ‘நான்முகன் குண்டி கை நீர் பெய்து’ என்று பிரித்தால் அதற்கு ஆழ்வார் பொறுப்பில்லை…

(எனக்கு ஏன் இந்த அற்ப சந்தோசம்?)

கால்தூசு பெறாத ஒரு புள்ளிவிவரம்

சென்னையில் மகப்பேறியல் மருத்துவர் ஒருவரின் மனையில் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது பொழுதுபோகாமல், கழற்றிவிடப்பட்டிருந்த காலணிகள் பற்றி எடுத்த ஒரு கணக்கெடுப்பு: (எண்கள் சோடிகளில்)

  • பெண்கள் அணிகிற வகையிலான செருப்புகள் – 26; ஆண்களுக்குரியவை – 10 (அதில் ஒன்று மட்டும் ஷூ வகை); சிறுவர்களுடையது – 1; பிரித்தறிய இயலாதவை – 2
  • மிகவும் பிய்ந்து நைந்து கிடந்தவை – 3; குதிகாலின் வலது ஓரம் தேய்ந்தது – 1; குதிகாலின் இடது ஓரம் தேய்ந்தது -1
  • குதிகால் உயரமான செருப்பு ஒன்றே ஒன்று
  • அருகருகே இணையாகக் கழற்றி விடப்பட்டவை – 7; ஒரே சோடியில் ஒன்றன்மேல் ஒன்றாக – 1; வேறு சோடிச் செருப்பொன்றின்மீது – 3; ஒரு அடிக்கும் மேலான இடைவெளியில் -1
  • வலதுகால் செருப்பு சற்று முன்பாக – 2; இடதுகால் சற்று முன்பாக – 3; விரல் பகுதி ஒட்டியும் குதிப்பகுதி விரிந்தும் – 4; குதிப்பகுதி ஒட்டியும் விரல் பகுதி பிரிந்தும் – 3
  • சுரைவிதை வடிவில் இச்செருப்புகள் சிதறிப்பரவியிருந்த இடத்தின் பரப்பு தோராயமாக 20 சதுர அடி
  • ஒரே ஒரு சோடிச் செருப்பு மட்டும் ஏதோ நான்கைந்து நாட்களுக்கு முன்பு கழற்றிவிடப்பட்டுத் திரும்ப அணிந்துசெல்லப்படாததுபோல் புழுதிபாரித்துக் கிடந்தது.

பயிற்சிகள் பலவிதம்

கடந்தவாரம் மதுரையின் பொதுச்சுவர்களை அலங்கரித்த விளம்பரங்களில் ஒன்று. (செய்முறைப் பயிற்சி இருந்ததா என்ற தகவல்கள் கம்பெனியாரிடம் இல்லை)

Aanmeega Payirchi

வழிகாட்டிக் கொள்கைகள்

பதினோராவது படிக்கும்போதும் எங்கள் பள்ளிக்கு ஒருநாள் ஆய்வாளர் வருவதாக இருந்தது. எங்கள் ஆசிரியர் ஜான் தன்ராஜ் வகுப்பறையில் கிழக்கு பார்த்து சும்மாயிருக்கும் கரும்பலகையில் ‘நமது வகுப்பின் வழிகாட்டிக் கொள்கையை அழகாகப் பெரிதாய் வண்ணச் சாக்கட்டிகள் கொண்டு எழுது’ என்று பணித்தார். அது என்ன கொள்கை என்று அன்றுதான் எங்களுக்குத் தெரியும். “உன்னதமே நோக்குக” என்ற சுருக்கமான வாசகம்தான் அது. விவிலிய வசனமாக இருக்கக்கூடும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலின் ஒரு வடிவம் என்று மொழிமாற்றிப் புரிந்துகொண்டேன். அதுபோல “நீதியும் அன்பும் நிலைத்திடவே” என்று பள்ளிக்கும் ஒரு குறிக்கோள் செய்தி இருந்தது. அவற்றின் அருமை அப்போது புரியவில்லை.

அதுபோல படித்த கல்லூரியின் இலச்சினையில் “வினையே உயிர்” என்ற செய்தி இருக்கும். எத்தனை இன்றியமையாத செய்தி! ஒருநாள் மாற்று ஆசிரியராக வகுப்பறையைக் கட்டுக்குள் வைக்க வந்த இளையர் ஒருவர் ‘ஒவ்வொருவராய் உங்கள் இலட்சியத்தைச் சொல்லுங்கள்’ என்று நேரம்போக்கிக் கொண்டிருந்தார். ‘வெந்ததைத் தின்று விதிவந்தால் சாதல்’ என்று சொல்லிவிட்டுப் பெருமிதத்தோடு அமர்ந்தேன். “ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!” என்று துடிக்கவேண்டிய வயது. போகட்டும். படித்துமுடித்து பல ஆண்டுகள் கடந்துபின்னும் பள்ளியும் கல்லூரியும் செயலின்மையை விரட்ட இதோ வழிகாட்டுகின்றன. வினையே உயிர்! உன்னதமே நோக்குக!

என்ன காரணம்?

பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போவதாகச் சொல்லப்படும் தேசிய ஒளியிழை வலையமைப்பில் முதல்கட்டத்தின்போது மாநில வாரியாக எத்தனை சிற்றூராட்சிகள் இணைக்கப்படுகின்றன என்ற தகவல்கள் இணைப்பில். தமிழகத்தில் குறைவாக இருக்க என்ன காரணம்?

https://e.infogr.am/---nofn--------23

இடிக்கும் அர்ச்சுனனுக்கும் என்ன தொடர்பு?

வனவாசத்தின்போது அர்ச்சுனன் காளபைரவ வனத்தில் கடுந்தவம் செய்யத் தொடங்கினான். எழுபதடிக் கம்பம் ஒன்றை நட்டு அதன்மேல் இளநீர் ஏழை வைத்து அவற்றின்மேல் ஏழு விளாம்பழங்களை வைத்தான். விளாம்பழங்களுக்குமேல் ஏழு எலுமிச்சைகளை வைத்து அவற்றின்மேல் ஏழு கொட்டைப்பாக்குகளையும் அதற்குமேல் ஏழு குன்றிமணிகளையும் வைத்தான். குன்றிமணிகளுக்குமேல் ஏழு கடுகுகளை வைத்தான். இவையும் போதாதென்று கடுகுகளுக்குமேல் ஏழு செப்பூசிகளை வைத்து அதன்மேல் ஏறிநின்று செய்த கோரத்தவம் அது. தவத்தின் உக்கிரத்தால் வெப்பம் தகித்தது. பொறுக்க முடியாத தேவர்கள் அவனது தவத்தைக் கலைக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போதுதான் மேகராசன் அவனுக்குத் தன் மகள் மின்னொளியாளை மணமுடித்துக் கொடுத்து, இடி அஸ்திரமும் கொடுத்து, கலியுகத்தில் அர்ச்சுனன் பெயரைச் சொன்னாலே காததூரம் தள்ளிப்போய் இடிவிழும் என்ற வரத்தையும் கொடுத்தான்.

மன்னன்  படத்தில் விஜயசாந்தி ஏன் “அர்ஜூனன்தான் அஞ்சுகின்ற அல்லிராணி என் ஜாதகம்” என்று பாடுகிறார்?

அல்லி மதுரைக்காரி. குழந்தையில்லாத பாண்டியனுக்கு அல்லிமலர்ப் பொய்கையில் கிடைத்தவள். நீள்முகனைக் கொன்று ஆட்சியைப் பிடித்த வீரப்பெண். பேரழகி. ஆண்வாடையே ஆகாதவள். அவளிடம் மயங்கிய அர்ச்சுனன் சூழ்ச்சிசெய்து அவளுக்குத் தெரியாமலேயே அவள் கழுத்தில் தாலிகட்டிவிட்டுப் பயந்து ஓடிவிட்டான். அவனுக்குப் பரிந்துவந்த வீமனும், கண்ணனும் வெட்கங்கெட்டுப் புறமுதுகு காட்டி ஓடினர். பிறகு இன்னொரு சூழ்ச்சிமூலந்தான் அவளைச் சிறைப்பிடித்து அர்ச்சுனன் மணந்தான். அவனுக்கு இதுபோக பாஞ்சாலன் மகள் திரௌபதி, நாகராசன் மகள் நாககன்னி, சித்தாயன் தங்கை சுபத்திரை, மேகராசன் மகள் மின்னொளி, அகஸ்தியன் பெண் போகவலி, சேராம்பூ ராசன் மகள் பவளக்கொடி என ஏழு மனைவிகள்.

Alliyum Archunanum

இதுபோல இன்னும்பல சுவையான கதைகளுக்கு அ.கா.பெருமாள் அவர்கள் அரிதின் முயன்று தொகுத்தளித்துள்ள “அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்” படியுங்கள். காலச்சுவடு வெளியிட்டுள்ளது.

த்ருஷ்ட்த்யும்னன் என்பதுபோல வாயில் நுழையாத பல்லுடைக்கும் பெயர்கள்தானே பாரதக் கதைகளில் பார்த்திருப்பீர்கள்! பல்வரிசை, பொன்னுருவி, பவளக்கொடி, பெருந்திருவாள், நீள்முகன், மின்னொளியாள் போன்ற கதைமாந்தர்களெல்லாம் மகாபாரதங்களில் உண்டு. படித்து மகிழுங்கள்.

புத்தகம் என்றாலே ஒதுங்கி ஓடுபவர்கள்கூட ஒரேமூச்சில் படித்துவிடலாம்.

விளம்பரம்போல இருந்தாலும் இப்படித்தான் இந்த நூலைப்பற்றி என்னால் எழுதமுடியும்.

பள்ளிகளில் உறையும் முனிகளும் மொழிகளும்

நமது சமூக வழக்கப்படி தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவை ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புவரை எனக்கும் தெரியாது. அ.முத்துக்கிருஷ்ணன் ஒருங்கிணைக்கும் ‘பசுமை நடை’யொன்றில் பாறைப்பள்ளியில் அவரிடம் பாடம் கேட்டேன்.

அறுபது ஆனபின்னும் இன்னும் இளைஞர். மலைக்காது மலை ஏறுகிறார். மலைகள் என்றால் மரங்களடர் சோலைகள் அல்ல. வழுக்கும் மொட்டைப்பாறைகள். அலுவலராக ஓய்வு பெற்றுவிட்டாலும் அறிஞராகத் தொடர்ந்து செயலாற்றுகிறார். ‘கல்’வர்களிடமிருந்து யானைமலையைக் காப்பாற்றியதில் அவருக்கும் பெரும்பங்கு உண்டு. ‘பாண்டிய நாட்டு வரலாற்றுப் பேரவை’ மூலமும் ‘பசுமை நடை’ மூலமும் அடுத்த தலைமுறைக்கு நமது அறிவுச்சொத்துகளை எடுத்துச்செல்கிறார்.

வலிக்காத கிண்டலும் வாய்திறக்காச் சிரிப்புமாய் இளைஞர்களை ‘ஓட்டுவதிலும்’ வல்லவர். உதாரணத்திற்கு ஒன்று. மூன்று தன்னார்வலர்கள் நிகழ்வொன்றில் கையைக் கட்டிக்கொண்டு தீவிர முகபாவத்துடன் நிற்கிறார்கள். இதை ஒருவர் நிழற்படம் எடுத்து முகநூல் பக்கத்தில் இடுகிறார். மற்றவர்கள் ‘வாவ்’ ‘நைஸ்’ ‘சூப்பர்’ என்று கருத்துரைக்கிறார்கள். இவர் தனக்கேயுரிய பாணியில் ‘இந்த மூணு பேருக்கும் 28ம் தேதி வாய்தா’ என்று கமெண்ட் போடுகிறார். (திரும்ப அந்த படத்தைப் பார்க்கையில் அவர்கள் காவலர்களிடம் அகப்பட்ட குற்றவாளிகள் போலவே இருந்தார்கள். 28ம் தேதிக்கும் முக்கியத்துவம் உண்டு. அன்று இன்னொரு நிகழ்வு இருந்தது).

இப்போது நாம் பேசவந்தது அவர் எழுதியுள்ள ‘மதுரையில் சமணம்’ நூல் குறித்து. மதுரை சமணப் பண்பாட்டு மன்றத்தின் சார்பில் ஜனவரி 2013ல் இந்நூல் முதலில் வெளிவந்தது. அதன் இரண்டாம் பதிப்பை இப்போது கருத்து=பட்டறை வெளியிட்டுள்ளது. வாசிக்க வசதியான நல்ல வடிவமைப்பு. ஓரிரு எழுத்துப்பிழைகளே உள்ளன. புராதன தோற்றமோ பொடிப்பொடியாகும் தாளோ இல்லை. வழுவழு தாளில் வண்ணப்படங்கள் பதினெட்டு இறுதியில் தரப்பட்டுள்ளன (கீழவளவு சமணர் படுக்கையில் ஆறுமுகமும் சந்திரலேகாவும் சிவப்புப் பெயிண்டில் படுத்திருக்கின்றனர்). இறுதியில் ஒருபடத்தில் மதுரையில் சமணச்சிற்பங்களும் படுக்கைகளும் உள்ள இடங்கள் கூகல் வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டுள்ளன.

மதுரையில் சமணம்

சாந்தலிங்கம் இதை சமணப் பண்பாட்டு மன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு வழிகாட்டி நூலாக ஆக்கியுள்ளதால் அடிக்குறிப்புகளோ, குறிப்புதவி நூல் பட்டியலோ இல்லை. பயங்கொள்ளற்க. மூன்று இயல்கள் உள்ளன. சமண சமயத்தின் தோற்றமும் தென்னகப் பரவலும் பற்றிய அறிமுகம் முதலில். மதுரையைச் சுற்றியுள்ள சமணச் சின்னங்களின் விளக்கமான வழிகாட்டுதல் அடுத்த இயலில். இயல் மூன்றில் இக்குகைகள் ஆசிவகத்தைச் சார்ந்தவையா என்ற விவாதத்தைப் பரிசீலித்து சமணச் சின்னங்களே என்று நிறுவுதல். பின்னிணைப்பாக பாண்டி நாட்டு (தென் தமிழகத்தின்) சமணத் தலங்களின் பட்டியலும், அயிரைமலை, உத்தமபாளையம், கோவிலாங்குளம், தொப்பலாக்கரையில் உள்ள சமணச்சின்னங்கள் பற்றிய விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

இதை சமணம் என்றொரு சமயம் சார்ந்த நூலாகக் கருதி எளிதில் புறந்தள்ளக்கூடாது. சமணத்தின் சாதிபாராட்டாமை, அகிம்சை, அன்ன தானம், அறிவு தானம், அடைக்கல தானம், ஔசத தானம் என்ற விழுமியங்களின் இன்றைய தேவை ஒருபுறம் இருந்தாலும் இச்சின்னங்கள் உள்ள இடங்களுக்கு வேறொரு இன்றியமையாப் பண்பு  உண்டு. அது தமிழி எழுத்துக்களைத் தன்னகத்தே கொண்டு நம் தொன்மைக்கு சான்று பகர்வதே அது. மேலும் இவ்விடங்களின் மிச்சங்கள் கனிமச்சுரண்டலின் கொடுங்கரங்களுக்கு இரையாகாமல் இருக்க இவைபற்றிய விழிப்புணர்வும் தொடர்ந்து இவ்விடங்களில் மக்கட் புழக்கமும் அவசியம். தமிழிக் கல்வெட்டுகள் பற்றிய விரிவான தகவல்களை இந்நூலில் தந்துள்ளார்.

எழுத்தில் இருந்தால்தான் எதையும் வரலாறு என்று ஏற்றுக்கொள்ளும் சிலர் இருக்கலாம். சில நாட்டார் வழக்காற்றியல்காரர்கள் முற்றாக தொல்லியலாளர்களைப் புறக்கணிக்கலாம். அரச வரலாறுகள் என்று கல்வெட்டுக்களைச் சிலர் புறக்கணிக்கலாம். தொல்லியலாளர் சிலர் இலக்கியப் பரிச்சயமே இல்லாதிருக்கலாம். சாந்தலிங்கம் இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறவராகவே தெரிகிறார். பழந்தமிழ் இலக்கியங்களையும், சிற்றிலக்கியங்களையும் மேற்கோள்காட்டி இணைப்புக் கண்ணிகளால் வரலாற்றை நெய்ய அவருக்கு முடிகிறது. அறிவுலகின் சமகாலப் போக்குகளுக்கு முகம்கொடுக்கிறார். ஆசிவகமா என நடக்கும் விவாதத்தில் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து தனது முடிவுகளை உறுதிபட உரைக்கிறார். சமணர் கழுவேற்றத்துக்கான சமகாலத் தொல்லியல் ஆதாரங்கள் இல்லை என்பதைத் தெளிவுபடச் சொல்லுகிறார். பெண்மணிகள் சிற்பங்கள் செய்துவித்திருப்பதையும், மாணாக்கர் முன்னொட்டு (இனிஷியல்)போல தங்கள்  ஆசிரியர்கள் பெயர்களை பெருமையாகப் பொறித்திருப்பதையும் சுட்டுகிறார். நமது அண்டை மாநிலங்களில் வரலாறு எழுதுவோர் பிறமொழியில் (குறிப்பாக தமிழில்) ஒரு கல்வெட்டு தங்கள் பகுதியில் இருந்தால் கல்வெட்டுச் செய்தியை மட்டும் வசதிப்படி சொல்லி அதன் மொழியை மறைத்துவிடுவர். அய்யா அத்தகைய சாய்வுகளுக்கு உட்படாதவர். கன்னடக் கல்வெட்டோ வடசொல்லோ அதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

வடதமிழகத்திலும் ஜைன இளைஞர் மன்றத்தினர் அகிம்சை நடை செல்கின்றனர் என அறிகின்றேன். அவர்களுக்கும் வழிகாட்ட அய்யாவோ, அறிஞர் பிறரோ இன்னொரு நூல் எழுதட்டும்.

மதுரையில் சமணம் – முனைவர் சொ.சாந்தலிங்கம், விலை ரூ. 100/-

கருத்து = பட்டறை,

2, முதல் தளம், மிதேஸ் வளாகம், 4வது நிறுத்தம், திருநகர், மதுரை – 6. பேசி: 9842265884

இருட்டடிப்பு செய்தல் (அல்லது) வெளிச்சம் பாய்ச்சுதல்

‘ஜேக்கே’ என்று சுருக்கமாகவும், அப்பா பெயரையும் சேர்த்து ‘ஜெகதீசன் கார்த்திகேயன்’ என்று நீளமாகவும் அழைக்கப்படும் கார்த்திக் அப்போது முக்கியமான முடிவொன்றை எடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான். கிளம்புமுன் இங்கேயே இரண்டுக்குப் போய்விட்டுப் போகலாமா அல்லது வீட்டுக்குப்போய் பார்த்துக்கொள்ளலாமா என்பது பற்றித்தான் முடிவெடுக்க வேண்டியிருந்தது.

வீச்சமெடுக்கும் காலுறையைக் கழற்றுவது, ஈரக்காலுடன் மறுபடியும் அணிவது அல்லது நடுவழியில் பேருந்தில் பதற்றம் நடுக்க வியர்த்திருப்பது எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான். “சரி, முதலில் சிறுநீர் கழித்துவிட்டு வந்துவிடலாம்” என்று ‘ஓய்வறை’ என்று எழுதப்பட்டிருந்த கழிப்பறைக்குள் நுழைந்தான். வீட்டுக்குப் போகுமுன் முகம்கழுவி, தலைமுடி, மீசையெல்லாம் சீவிமுடித்துச் சிங்காரித்துக் கிளம்புகிற தமிழ் ஆளான ராதாகிருஷ்ணன் உள்ளே வந்தார். அவருக்கு அது ஒப்பனை அறை.

வந்தவர் சும்மாயில்லாமல், பேசி ஓரிரு நாட்களாகிவிட்ட அக்கறையில் “என்னப்பா, எப்படிப் போயிக்கிட்ருக்கு?” என்றார். மூத்தவர்தான் என்றாலும் கொஞ்சம் இயல்பாக அவரிடம் பேசலாம். “தண்ணி வேற நெறையாக் குடிச்சனா, நல்லா பன்னீர் மாதிரி வெள்ளையாப் போகுது சார்” என்றான். மென்னகை அணிந்து தன்னை மேலும் அழகாக்கிக்கொண்டார்.

திரும்பிவந்து பார்த்தால் மும்பையிலுள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து சுடச்சுட அப்போதுதான் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. நாளை காலை நடுவண் அமைச்சரை சந்திக்க நிறுவனத்தின் செயல் தலைவருக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. பேசவேண்டிய விஷயங்கள் பற்றி ஒவ்வொரு அலகும் இரவுக்குள் குறிப்பு அனுப்பவேண்டும். “இவன்ய்ங்களுக்கு இதெல்லாம் ஆறரை மணிக்குத்தான் தெரியும்” என்று திட்டும்போதே மேலதிகாரி அலைபேசியுடன் இவனது அமர்விடத் தடுப்புக்கு ஓடிவந்தார்.

“நல்ல வேளை, கெளம்பிட்டேன்னு நெனைச்சேன். நல்லதா நாலு பாய்ண்ட் போட்டு சீக்கிரம் கொடுப்பா. நான் ஒரு தடவை பார்த்ததும் அனுப்பிச்சிரலாம்” என்று நயந்தார். நாமாக அப்படி எதையும் செய்துவிடமுடியாது. நாளை இதை ஏன் போடவில்லை, அதை ஏன் போடவில்லை என்று துணை அலகுகளிலிருந்து போட்டுக்கொடுப்பார்கள். அவர்களுக்கு அதே அஞ்சலை முன்னனுப்பி, நியதிப்படி அலைபேசியிலும் அழைத்து ஏழரை மணிக்குள் அனுப்பிவிடும்படி வேண்டுகோள் விடுத்தான். ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மொழி பேசுபவன். அவனவனது பண்பாட்டுச் சூழலுக்கிணங்க அவனவன் வண்ணமயமான வசவுகளை உதிர்த்திருப்பான்கள். அப்படியும் சொல்லமுடியாது. இந்தக்கால இளைஞர்களுக்கு “சாலா, ச்சூத்தியா”வை விட்டால் என்ன தெரிகிறது?

எப்படியும் பத்துமணி ஆகிவிடும். மேலதிகாரி தமிழ் ஆள்தான். எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டில்போய் தயிர் சாதம் சாப்பிடுகிறவர். நாம் அப்படியிருக்க முடியாது.  ஒப்பந்தப்புள்ளி தயாரிக்கும் குழு தினமும் ஒன்பது மணி வரையாவது உட்கார்ந்து இருக்கும். ஏனெனில் அவர்களது தலைவர் உட்கார்ந்திருப்பார். ஏனெனில் அவரது குடும்பம் மும்பையில் இருக்கிறது. அந்தக் குழுவிடம் சொல்லிவிட்டால் நமக்கும் சேர்த்து பீஸ்ஸாவும், பழச்சாறும் தருவிப்பார்கள்.

பத்துமணிக்கு மேல் நேருப்ளேசிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரமேயுள்ள முனிர்க்காவுக்குப் போவது ஒரு பெருநாட்டின் தலைநகரத்தில் சிரமமாக இருக்கக்கூடாதுதான். ஆனால் பொதுப்போக்குவரத்தை நம்பி இருப்பவனுக்கு, குறிப்பாக அந்த தனியார் நகரப்பேருந்துகளை நம்பி இருப்பவனுக்கு பொருட்படுத்தத்தக்க சிரமந்தான்.

கார் வாங்கச்சொல்லி வீட்டில் ஒரே தொந்தரவு. “உங்களுக்குப் பரவாயில்லை. எங்க பிள்ளைகளையும் ஏன் சிரமப்படுத்திறீங்க?” என்று மாமனாரின் நண்பர் கேட்டார். நண்பரின் மாமனாரும்கூட அப்படித்தான் கேட்டார். இவர்களுக்கு எவனாக இருந்தாலும் முதலில் வீடு வாங்கவேண்டும். அப்புறம் கார் வாங்கவேண்டும். “அனுபவத்தில சொல்றேன். அன்னைக்கே சுதாரிச்சு அந்த எடத்தை எட்டு லட்ச ரூபாய்க்கு நான் முடிச்சிருந்தா இன்னைக்கு அதோட மதிப்பு பத்து கோடி” என்று அவர்கள் சொல்வதை நாம் சிரத்தையுடன் கவனிப்பதாக நடிக்கவேண்டும்.

அழுத்தம் வீட்டிலிருந்து மட்டும் இல்லை. வேலைசெய்யும் நிறுவனத்திலும் சம்பளத்தின் ஒரு பகுதியை சலுகையாக வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பணிநிலைப் பிரிவை எய்தியதும் கார் வாங்க இரண்டரை லட்சம் ரூபாய் தருவார்கள். வாங்கினால் உண்டு. இல்லாவிட்டால் இல்லை. எப்படி விடமுடியும்? கண்டது கடியதைப் படித்து பொதுப்போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தும் ஒரு சமூக அக்கறையாளனாகத் தன்னை நம்புபவனுக்கு தர்ம சங்கடமான நிலைதான். இப்படித்தான் ஏற்கனவே சம்பளத்தில் கணிசமான பகுதியை நிறுவனப் பங்குகளாக கொடுத்தார்கள். இத்தகைய சூதாட்டத்தில் ஈடுபடவே கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தவனை இழக்கவிருந்த தொகையின் மதிப்பு மசியவைத்தது.

காலையிலேயே எதிர்ப்பட்ட பக்கத்துவீட்டு பர்ன்வால் கார்வாங்கிக் கொள்ளலாமே என்று கேட்டார். மத்திய பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் துவக்கநிலை பொறியாளர் வேலை பார்க்கிறார். அவரது அலுவலகம் மூன்றே கி.மீ தூரத்தில் கட்வாரியா சராயில்தான் இருக்கிறது. பொடிநடையாகவே போய்விடலாம். ஆனால் காரில்தான் போகிறார். ‘தில்லியில் கார் இல்லாதவனை எவன் மதிப்பான்’ என்பவர். கொஞ்சம் சென்டிமென்டும் பார்க்கிறவர். இவனைப் பார்த்துவிட்டுப்போன ஒரு நாளில் ஏதோ நல்லது நடந்துவிட்டது என்று சந்தோசமாகச் சொன்னதிலிருந்து எப்போது எதிர்ப்பட்டாலும் அன்று அவருக்கு நல்லது நடக்கவேண்டுமே என்று பதற்றமாக இருக்கிறது. இன்றைய நாள் அவருக்காவது இனிய நாளா தெரியவில்லை.

 **********

இரவுப்பணியில் பர்ன்வால் இருந்தார். இரவு பத்தே முக்காலாக இரண்டு நிமிடம் இருந்தது. மின் தொகுப்பில் இணைந்துள்ள பளு அளவை தேசிய அளவில் ஒழுங்குபடுத்தும் வேலை. இந்த மின்சாரத்தை சேமித்துவைத்து பிறகு பயன்படுத்துகிற தொழில்நுட்பம் எல்லாம் வீட்டளவுக்குத்தான் வந்திருக்கிறது. இன்னும் நாட்டளவுக்கு அதிகம் வரவில்லை. உற்பத்திக்குத் தகுந்த நுகர்வு இல்லையென்றால் வேறு பக்கம் திருப்பிவிடவேண்டும். இல்லையென்றால் உற்பத்தியை நிறுத்திவிடவேண்டும். இங்கு தேவை இல்லாமல் இல்லை. எல்லாருக்கும் கொண்டுபோய் சேர்க்கிற உள்கட்டமைப்புதான் இல்லை.

 கிழக்கு மண்டலத்திலிருந்து அபயக்குரல் ஒலித்தது.

 “இந்த அஞ்சு லைனும் ஓவர்லோடா இருக்கு. ஏதாவது ஒண்ணு ட்ரிப் ஆனாலும் பெரிய சிக்கலாகிரும்”

 பர்னவால் “அச்சா, அச்சா” என்றார்.

 “அதுனால நீங்க மேற்கு மண்டலத்துல சொல்லி – கண்டிப்பா அவங்ககிட்ட சொல்லி – கொஞ்சம் உடனடியா அவங்களோட உற்பத்தியைக் குறைக்கச் சொல்லுங்க”

 “அச்சா, அச்சா”

 “இல்லைன்னா, முடிஞ்சா நம்ம வடக்கு மண்டலம் வழியா பவரை பாஸ் ஆன் பண்ணச் சொல்லுங்க”

 “வடக்கு வழியா முடியாது. குவாலியர் – ஆக்ரா லைன் ஒண்ணு அவுட்டு”

 “ஆங். அப்ப முடியாதுன்னா மேற்கு மண்டலம் உற்பத்தியை நிறுத்தணும்”

 “அச்சா, சரி, சரி”

 “சரிதானே?”

 “ஓகே. ஓகே”

 “அப்படி இல்லைன்னா இன்னைக்கு கண்டிப்பா சிஸ்டம் போயிரும்”

 “சரி சார். செய்றேன்.”

 “இதை சீரியஸா எடுத்துக்குங்க”

 வாங்கிய மின்சாரத்துக்கு காசு கொடுக்க முடியாமல் திணறும் மாநிலங்கள் ஊரகப் பகுதிகளில் மின்சாரத்தை அணைத்துப் போட்டுவிட்டு சொன்ன அளவு மின்சாரத்தை எடுத்துக்கொள்ளாமல் திணற அடிக்கிறார்கள். தேர்தல் நேரம் அது இதுவென்று சொன்ன அளவைவிட அதிகமாக இழுத்து சில மாநிலங்கள் திணறடிக்கின்றன. உற்பத்தி செய்வது ஓரிடம். நுகர்வு குவிந்திருப்பது வேறிடம். சமநிலை இல்லாவிட்டால் நாடே இருளில் மூழ்கிவிடும். இடையில் ஓரிரு இணைப்புகளை வைத்து ஒப்பேற்றுகிறார்கள். கோடிகோடியாய் கொள்ளை அடிக்கிறவர்கள் எல்லாம் சேர்ந்து செய்கிற கூட்டுச்சதிகளுக்கு எங்களை மாதிரி ஆட்களைப் பாடாய்ப்படுத்துகிறார்கள் என்று நொந்துகொண்டார்.

மேற்கு மண்டலத்தில் பணியில் இருப்பவர் மூத்த அதிகாரி. பர்னவால் பெரிய அளவில் வலியுறுத்தமுடியாது. அவர் இந்த அலுவலகம் வந்து பொதுமேலாளராக, செயல் இயக்குனராக உட்காரும் நாளில் இவருக்கு சிக்கலாகிவிடும்.

சரியாக முக்கால் மணிநேரம் கழித்து மறுபடியும் கிழக்கு மண்டலத்தில் பணியில் இருப்பவர்.

 “ஜனாப், மேற்கே இருந்து ஒரு வித்தியாசமும் இல்லை. பேசினீங்களா..”

 “மேற்கு மண்டலம் ஒரு..”

 “நீங்க கொஞ்சம் அவங்க என்ன பண்றாங்கன்னு விசாரிங்க”

 “சார். அவங்ககிட்ட…”

 “அப்படியெல்லாம் விட்டா நடக்காது சார். அவங்களுக்குத் திரும்பத் திரும்ப மெசேஜ் கொடுங்க”

 “சரி, சரி, நான் பேசுறேன்”

 “இல்லை, இல்லை. பேசினா ஒண்ணும் நடக்காது. திரும்பத் திரும்ப மெசேஜ் கொடுங்க”

 “கொடுக்கிறேன், கொடுக்கிறேன்”

 “எங்கெல்லாம் குறைவா இழுக்கிறாங்களோ அங்கெல்லாம் குறைக்கச் சொல்லுங்க”

 “சரி, சரி”

 தயங்கித் தயங்கி பர்ன்வால் மேற்கு மண்டலத்தில் இருப்பவரைக் கூப்பிட்டார்.

 “சார். வந்து உங்களோட இந்த அண்டர்டிராயல் கொஞ்சம் குறைக்கமுடியுமா, சார்”

 “ம்ம்”

 “ஏன்னா சார். குவாலியர் ஆக்ரா ஒண்ணு ஷட்-டவுன்ல இருக்கு. அதுல ஓவர்லோடு ஆகுது. இந்த கிழக்கு மண்டலத்துல எல்லா லைனும் ஓவர்லோடுல இருக்கு சார்”

 “உங்க ஃப்ரீக்வென்சியும்தான் கம்மியா இருக்கு”

 “அது ஒரு பக்கம் சார். கொஞ்சம் சிஸ்டம் கன்ஸ்ட்ரைன்ட் ..என்ன பண்றது சார் இந்த கிழக்கு லைன் எல்லாம்..”

 “வடக்கை ஓவர்ட்ராயல் பண்ணவேணாம்னு சொல்லவேண்டியதுதான”

 “அவருக்கும் மெசேஜ் கொடுத்துருக்கேன் சார். நீங்களும் கொஞ்சம் முடியுமான்னு பாருங்க சார்”

அவர் ஒன்றும் செய்யவில்லை. சொன்னமாதிரியே இரவு வடக்கு மண்டலம் முழுமையும் பிடுங்கிக்கொண்டது. மறுநாள் தொகுப்பில் முழுமையாக இணைக்கப்படாத தெற்கு மண்டலம் தவிர்த்து நாடே மின்சாரம் இன்றித் ‘தவித்தது’ (என்று தில்லியில் இருப்பவர்கள் சொன்னார்கள்). வல்லரசுக் கனவுகளில் மிதந்தவர்கள் மின்சாரம் தாக்கியதுபோல குதித்தார்கள். குய்யோ முறையோ என்று கொந்தளித்தார்கள்.

 பர்னவால் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

 ********************************

 ஒன்பதுமணி வரை துணை அலகுகளில் இருந்து பதில் வராமல் போகவே கார்த்திக் ஒவ்வொருவராகக் கூப்பிட ஆரம்பித்தான். துணை அலகு ஒன்றில் வேலையில் இருப்பவன் நேரடியாக தலைமை அலுவலகத்தில் இருந்த தமது ‘நம்பத் தகுந்த வட்டாரத்தில்’ பேசியிருக்கிறான். உண்மையில் நாளை மறுநாள்தான் செயல் தலைவர் அமைச்சரைச் சந்திக்கப்போகிறாராம். எங்கே தாமதம் செய்துவிடுவார்கள் என்றுதான் மறுநாள் என்று பொய்சொல்லி இரவோடு இரவாக நம்மிடம் கேட்டிருக்கிறார்கள். இந்த தகவலைக் கார்த்திக் ஓடோடி மேலதிகாரியிடம் சொன்னான். அவர் தலைமை அலுவலகத்தில் உள்ள ‘தமது நம்பத்தகுந்த வட்டாரத்தை’ விசாரித்து உறுதிப்படுத்திக்கொண்டார். ‘சரி, கிளம்புவோம். நாளைக் காலை முதல் வேலையாக அனுப்பிக்கொள்ளலாம். இந்த விஷயத்தை நீ மற்ற துணை அலகுகளில் சொல்லவேண்டாம். அவர்கள் இரவே அனுப்பட்டும்.’ என்றார்.

 மறுநாள் உற்சாகமாக இருந்தார். வலுவான ‘பாய்ண்ட்’ ஒன்று கிடைத்துவிட்டது. வேறெதுவும் விஷயமே தேவையில்லை. மின் தொகுப்பு மொத்தமாக செயலிழந்த இந்த ஒன்றே போதும். இப்படி எல்லாம் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அறுபதாயிரம் கோடி முதலீடு வேண்டும். அதில் எங்களுக்கு சில ஒப்பந்தங்கள் வேண்டும் என்று சொன்னாலே போதும்.

 *************************

பர்ன்வால் பெரிதாகக் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. அவருக்கு விசாரணை அறிக்கைகள் மீது ஏதோ நம்பிக்கை இருந்தது. “மின்சாரம் இல்லாம ரெண்டு நாளா ரொம்ப சிரமாப் போச்சுல்ல” என்று கார்த்திக் பொதுவாகச் சொன்னபோது “எங்க சொந்த ஊரு உ.பி- யில ஆசம்கர் மாவட்டத்துல. ஒருநாளைக்கு ஆறு மணிநேரம் மின்சாரம் கிடைச்சா அதுவே பெருசு. இன்னைக்குவரைக்கு அப்படித்தான். இந்தியாவில முப்பது கோடிப் பேருக்கு இன்னும் மின்சாரமே போய்ச்சேரல” என்று சற்று எரிச்சலாகச் சொன்னார். “அதுதானே, ஏன் இந்த ஆங்கில ஊடகங்களும் மேலை நாட்டு ஊடகங்களும் இப்படிக் குதித்தன” என்று கார்த்திக் ஆச்சரியப்பட்டான்.

 பேச்சு மறுபடியும் காருக்கு வந்தது. இவன் ‘பொதுப்போக்குவரத்தா? சொந்தக் காரா?’ குழப்பத்தை சொன்னான். “எதுக்கு கவலைப் படுற? கார் பூலிங் பண்ணிக்க. கூட வேலை செய்ற யாரையாவது கூட்டிக்கிட்டுச் சேர்ந்துபோங்க’ என்றார். சரிதான். கொஞ்சம் மனச்சான்றுக்கு மருந்திட்ட மாதிரி இருக்கும். ஃபெர்னாண்டோ சோரன்டினோவின் கதையில் வரும், கதைசொல்லியை சதா தலையில் குடையால் அடித்துக்கொண்டேயிருக்கும் ஒருவனை சற்று அமைதிப்படுத்தியதைப் போலிருந்தது.

வக்காலத்து

ஒரே வளாகத்துக்குள் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் இருவர் வசித்தனர். ஒருவன் நலங்குன்றி நோஞ்சானாகிவிட, அதுதான் சமயம் என்று வீட்டைப் பிடுங்கிக்கொண்டு இவனை  அடித்துத் துரத்திவிடப் பார்த்தான் வலுவாக இருந்தவன். யாரும் உள்ளே வரமுடியாதபடி வளாகத்தின் கதவை இழுத்துச் சாத்திவிட்டு இவனை அடிக்கத் தொடங்கினான். வேடிக்கை பார்க்க ஆட்கள் சூழ்ந்தனர். சிலர் நமுட்டுச் சிரிப்புடன் கமுக்கமாக சிரித்தனர். சிலர் ‘அல்லையில் போடு’, ‘டங்குவாரை அத்துரு’ என்று உற்சாகப்படுத்தினர். இன்னும் சிலரோ ‘ஒரே போடாய்ப்போட்டுவிடு’ என்று ஆயுதங்களை அள்ளிவீசினர். இளைத்த நேரத்தில் எளியவனை வலியவன் தாக்குதல் காணப்பொறாது பலர் கண்ணீர் சிந்தினர். கதறி அழுதனர். அடிப்பதை நிறுத்துமாறு கூக்குரல் எழுப்பினர். ரசித்து பார்த்துக்கொண்டிருந்த சிலர் எரிச்சலாகி இவர்கள் பக்கம் திரும்பி நைச்சியமாய் ‘நீங்கள் இங்கிருந்து கத்தி என்ன ஆகப்போகிறது?’ என்று தர்க்கம் பேசினர். இன்னும் சிலர் “‘அய்யோ, கொல்கிறானே’ என்று கத்துகிறீர்கள். அதற்குள் நீங்களாக அவ்வாறு கற்பிதம் செய்வது தவறு. அடிக்கிறான் அல்லது தாக்குகிறான் என்றுதான் சொல்லவேண்டும்” என்று தொழில் நுணுக்கம் பேசினர். இவர்களோ “கதவை சாத்திக்கொண்டால் நாங்கள் கத்துவது கேட்காமல் போகாது. அவன் வெளியே வராமலேயே இருந்துவிட முடியாது. எல்லாவற்றுக்கும் மேல் நாங்கள் மனிதர்கள். கொடுமை கண்டு பொறாது எங்களால் முடிந்ததையாவது செய்வோம்” என்றனர். அதுஅது அததுபாட்டுக்கு நடந்துகொண்டுதான் இருந்தது.

அதியுயர் மின்னழுத்த அதிர்ச்சி

நைஜீரியாவில் நடந்திருக்கிறது இது. நைஜீரிய மின்திறன் முதன்மை நிறுவனத்துக்காக 2003 முதல் 2007 வரை இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள மின்கருவிகள் உரிய இடங்களுக்கு எடுத்துச்சென்று நிறுவப்படாமல் அபாபா உள்ளிட்ட துறைமுகங்களில் அப்படி அப்படியே கிடந்திருக்கின்றன. இவ்வாறு கிட்டத்தட்ட 248 சரக்குப்பெட்டகங்கள் நிறைய சாதனங்கள் 11 ஆண்டுகள் வரை முடங்கி இருந்திருக்கின்றன. இவை 330கி.வோ வரை அதிஉயர் மின்னழுத்தத்தில் செயல்படக்கூடிய மின்னோட்ட / மின்னழுத்த மாற்றிகள் உள்ளிட்டவை. இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளார்கள்.

மின்துறை தனியார்மயமாக்கப்பட்டு இப்போது நைஜீரிய மின்திறன் முதன்மை நிறுவனம் செயல்பாட்டில் இல்லாத நிலையில் இவையெல்லாம் நைஜீரிய மின்கடத்துகை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உரிய இடங்களில் நிறுவப்படும் என்றிருக்கிறார் கூட்டரசின் மின்துறை அமைச்சர். சுங்கத்துறை பெரிய மனது பண்ணி சுணக்கக் கட்டணம் எல்லாம் எதுவும் இல்லாமல் 248 பெட்டகங்களில் உள்ள கருவிகளை ஒப்படைக்க சம்மதித்துள்ளதாம்.

பல கேள்விகள் எழுகின்றன. இவை குறிப்பிட்ட திட்டங்களுக்காக வாங்கப்பட்டவை. அத்திட்டங்களை செயல்படுத்தப் பொறுப்பானவர்களை யாருமே கேள்வி கேட்கவில்லையா? ஏற்றுமதி செய்தவர்களுக்கான முழுப்பணமும் பொருள் உரிய விதத்தில் நிறுவப்படும் முன்பே போய்ச்சேர்ந்துவிட்டதா? இந்தக் கருவிகள் இத்தனை ஆண்டுகள் இவ்விதம் கேட்பாரற்றுக் கிடந்த நிலையில் இனியும் வேலை செய்யும் நிலையில் இருக்குமா? இவை இயங்குவது பாதுகாப்பானதா? இன்னும் பல.

கடைசியாக ஒரு கேள்வி. இம்மாதிரியெல்லாம் நமது நாட்டில் நடப்பதே இல்லையல்லவா?!