‘பஃன்றி’ என்றொரு அழகிய மிருகம்

அந்தப் படத்தின் கடைசிக் காட்சியில் ஜபியா வீசும் கல் நம்மை நோக்கியே பறந்து வருவது வெளிப்படை. நாகராஜ் மஞ்சுளேயின் ‘பஃன்றி’ என்ற மராத்திய படம் பற்றி பலரும் ஏற்கனவேயே எழுதி இருக்கிறார்கள். நேற்றுகூட தமிழ் ‘தி இந்து’வில் அழகியபெரியவனின் கட்டுரை வெளிவந்தது. அன்று மாலையே அவரது உரையைக் கேட்கவும், அந்தப் படத்தைப் பார்க்கவும் வாய்ப்பு கிடைத்தது.

 தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைபார்க்கும் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து சாப்ளின் டாக்கீஸ் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக மாதம் ஒரு படம் திரையிட்டு திரைக்கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் அழைத்து நேயர்களுடன் உரையாட வைக்கிறார்கள். பொதுவாக திரைப்படம் பற்றி நாம் பேசும்போது கதை, அழகியல் பற்றிப் பேசுகிற அளவுக்கு உள்ளடக்கம் பற்றிப் பேசுவதில்லை என்ற ஆதங்கத்தைப் போக்குவதற்கான முயற்சி இது. தமக்குப் பிடித்த படங்களைத் திரையிட்டு அதன் சாரம், ஆன்மா, அரசியல் பற்றிக் கதையாடுகிற நிகழ்வு [இது அவர்கள் ஆங்கிலத்தில் கொடுத்த கைப்பிரதி கொண்டு அறிந்துகொண்டது. தமிழில் தேடி கைப்பிரதியின் பின்புறம் பார்த்தேன். வெள்ளையாக இருந்தது.]

இந்த மாதம் அடையாறு இந்திரா நகர் 3வது நிழற்சாலையில் உள்ள மாநகராட்சி வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள நிலா கொண்டாட்ட அரங்கில் ‘பஃன்றி’ திரையிடலும் தொடர்ந்து எழுத்தாளர் அழகிய பெரியவன், ‘அட்டகத்தி’ இயக்குனர் ரஞ்சித் ஆகியோருடன் உரையாடலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மாலை 4.30க்குத் தொடங்குவதாக அறிவித்திருந்தது நல்ல முடிவு. ஐந்தே காலுக்காவது தொடங்கி 8.30 வரை தொடர முடிந்தது. இல்லாவிட்டால் ஏழுமணிக்கு வந்துவிட்டு 8 மணிக்குக் காலில் சுடுநீர் ஊற்றிக்கொண்டு எல்லாரும் ஓடுவார்கள். [அடுத்தமுறை இதே இடத்தில் நடந்தால் பேருந்தில் வருபவர்களுக்காக ஒரு குறிப்பு: அருகிலுள்ள லேண்ட் மார்க் இந்திராநகர் ரயில்நிறுத்தம் என்று போட்டிருந்தாலும் அடையாறு டெப்போதான் மிக அருகிலுள்ள பேருந்து நிறுத்தம்]

நல்ல படம் என்பதைத் தவிர நுட்பங்களை விளக்கிச் சொல்கிற அளவுக்கு எனக்கு அவ்வளவாகத் தெரியாது. முதல் காட்சியிலேயே நம்மூர் படங்களுக்கும் இந்தப் படத்திற்கும் உள்ள வேறுபாடு தெரிந்துவிடுகிறது. கவட்டை வார் கொண்டு கரிச்சான் குருவியைத் துரத்தும் ஜாபியா எறிந்த களிமண் குண்டு (?) குத்தவைத்து வெளிக்கிருக்கும் ஒருவனைத் தொந்தரவு செய்கிறது. வெறுமனே தொந்தரவு செய்கிறது. நாம் புன்னகைக்க அது போதுமானதாயிருக்கிறது. அவனுக்குப் ‘படக்கூடாத’ இடத்தில் படுவதில்லை. அவன் ஓங்கி ஓலமிட்டு நமக்குச் சிரிப்பு மூட்டுவதில்லை.

 அந்தப் பையனின் கையெழுத்து முத்துமுத்தாக இருக்கிறது. சகோதரியின் கல்யாணத்திற்கு மண்வீட்டுக்கு வர்ணம் ‘மொத்தி’ கும்பம் வரைந்து ‘சுப விவாஹ’ அன்று அழகாக எழுதுபவை அவனது கரங்கள். கவண் வில் கொண்டு அவன் கரிச்சானைத் துரத்துவது அதன் சாம்பலை ஷாலு மீது தூவிவிட்டு அவளை வசியம் செய்வதற்காக. அவனது அம்மா ‘ஏன் பள்ளிக்கூடம் பக்கம் வந்தாய்’ என்று இவன் கோபமாகக் கேட்கும்போது ‘நாலெழுத்துப் படிச்சு என்னையும் எல்லாரும் மேடம்னு கூப்பிடட்டும்னுதான்’ என்று நக்கலாகப் பதில்சொல்பவள். ‘இவனைத் தலையில் வைத்துக்கொண்டு ஆடும்’ சைக்கிள்கடைக்காரன் நடைமுறை வாழ்வின் ஆற்றாமைகளை மந்திரதந்திர உலகில் நம்பிக்கை வைப்பதன்மூலம் ஆற்றிக்கொள்ள நினைப்பவன். கேரம் விளையாட்டைப் பார்க்கிற சாக்கில் சைக்கிள்கடையில் அமர்ந்து ஜாபியா ஷாலுவைப் பார்க்கும்போது மேலே தொங்கும் மண்காப்புத் தொங்கல் (mud flap)களில் ‘லவ் கே சக்கர் மே’ என்று எழுதியிருக்கிறது. ஜாபியாவின் கூட்டாளி பீர்யா பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் ஜாலியாகத் திரிபவன். அந்த நிலப்பரப்பு மராட்டிய மாநிலத்தில் கோட்டையோ பௌத்த குகைகளோ பார்க்கப்போய் குன்றேறி நிற்கும்போது கண்முன் விரியும் அதே வெளிர்மஞ்சள் செம்பரப்பு. அசலான படம்.

அழகிய பெரியவன் சிறுவயதிலேயே தமிழ்ப் படங்களையும் தனது கல்லூரி காலங்களிலேயே வேலூர் ‘தினகரன்’ அரங்கில் வெளிநாட்டுப் படங்களையும் பார்க்கத் தொடங்கி இத்தனை வருடங்களாகியும் தமது வாழ்வோடு ஒன்றிப் பார்க்கமுடிகிற வகையில் மிகச்சில படங்களே இருந்தன என்றும் இப்படம் அதில் ஒன்று என்றும் குறிப்பிட்டார். விறகுக்கு குச்சி ஒடிக்கப்போய் விரட்டுப்படும் காட்சியைக் குறிப்பிட்டுத் தானும் அதுபோல தாங்கல் ஏரிக்கரையில் விறகுவெட்டப்போய் விரட்டப்பட்டிருப்பதாக நினைவுகூர்ந்த ரஞ்சித்தும் அதையே வழிமொழிந்தார். ‘அட்ட கத்தி’யும் தலித் வாழ்வைப் பேசும் படந்தான் என்று ரஞ்சித் சுட்டிக்காட்டியபோது அழகிய பெரியவன் அது ஒரு விதிவிலக்கு என்றும் அப்போதே அப்படக்குழுவினரை அழைத்து ஆம்பூரில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் கலந்துகொண்டு பேசியதையும் நினைவூட்டினார். கதையைத் தேடி எங்கெல்லாமோ அலையத் தேவையில்லை, உங்களைச் சுற்றியே உங்கள் வாழ்விலேயே ஏராளம் இருக்கிறது. அதை நேர்மையாகச் சொன்னால் போதும். இலக்கியத்துடனான தொடர்பை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று திரைத்துறை சார்ந்தவர்களுக்குச் சொன்னார். ரஞ்சித் தலித் வாழ்வைக் காட்டும் படங்களைத் தொடந்து எடுப்பேன் என்றது வரவேற்பைப் பெற்றது.

நாகராஜ் அடிப்படையில் ஒரு கவிஞர் என்பதை படம் முழுக்க வரும் குறியீடுகளில் இருந்து உணர முடிகிறதென்பதை, ஷாலு திருவிழா ஊர்வலத்தின்போது நுரைக்குமிழிகளை ஊதிவிடுவது, ஜாபியாவின் வாடகை மிதிவண்டியை சரக்குந்து நசுக்குவது, பின்புலத்தில் சுவரில் அம்பேத்கர், பூலே தம்பதியர், காட்கே மஹாராஜ் ஓவியங்கள் இருக்க பன்றி தூக்கிச்செல்லப்படுவது போன்ற காட்சிகளைச் சொல்லி அழகியபெரியவன் விளக்கினார். ஒரு காட்சியில், பிடிக்க முயல்கையில் போக்குகாட்டிய பன்றியை ஒருவழியாய் ஜாபியாவும் அவனது அப்பாவும் நெருங்கிவிடுகிறார்கள். அப்போது பார்த்து அருகிலுள்ள பள்ளியில் நாட்டுப்பண் இசைக்கப்படுகிறது. வெளிக்கிருந்து கொண்டிருப்பவன் உட்பட எல்லாரும் அப்படியே சங்கடமாய் நிற்கிறார்கள். பன்றி மட்டும் புட்டத்தை ஆட்டிக்கொண்டு அழகாக ஓடிவிடுகிறது. இக்காட்சியில் பொதிந்துள்ள ‘கலக அழகியல்’ மனங்கொள்ளத்தக்கது என்றார்.

நாகராஜ் ஒரு பேட்டியில் திறமை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, பகுதிக்கோ மட்டும் உரியதல்ல என்று சொல்லியிருக்கிறாராம். அதைச்சொல்லி தமிழ் சினிமாவின் மதுரை பற்றிய கற்பிதங்களை அழகியபெரியவன் லேசாகக் கோடிகாட்டினார் (யேய்… இந்த மதுரைப்படம்லாம் எடுக்கிறத கொஞ்ச நாளைக்கு நிறுத்துங்கப்பா..அங்கிட்டிருக்கவன்ய்ங்களும் நம்ம படம்னு சொல்ல முடியல. இங்கிட்டிருக்கவன்ய்ங்களுக்கும் கடுப்பேத்துது.)

பிறகு பலரும் ஆவலுடன் கலந்துகொண்ட விவாதமும் நடந்தது. சாதிய மனோபாவமானது கல்வியறிவு அதிகரிக்கும்போது மாறிவிடும் என்றும், பொருளாதாரம் மேம்பட்டால் மாறிவிடும் என்றும் சிலர் வாதிட்டார்கள். நாடார்கள் வணிகத்தைக் கைக்கொண்டு தம்மீது செலுத்தப்பட்ட அடக்குமுறையை வென்றது, ஒருவரின் சொந்த வாழ்வில் அவரது தந்தை புறவாசலில் வைத்தே தலித்துகளை அனுப்பி வந்தவர் ஒருவர் கல்விபெற்று உடன்பணியாற்றும் ஆசிரியர் ஆனவுடன் வீட்டுக்குள் அனுமதித்து சமமாக நடத்தியது போன்றவை சுட்டிக்காட்டப்பட்டன. அப்படியெல்லாம் மாறிவிடாது என்பதற்கான உதாரணங்களும் அவையிலிருந்தே கிடைத்தது. தலித்துகளின் பொருளாதார முன்னேற்றத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நிகழ்த்தப்படும் வன்முறைகள் சுட்டிக்காட்டப்பட்டன. சாதி இருக்கலாம்; ஆனால் ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்பதுபோன்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது.

அழகிய பெரியவன் பேசும்போது கல்வி கிடைக்கும்போது மாறிவிடும், பொருளாதாரம் மேம்படும்போது மாறிவிடும், அரசியல் அதிகாரம் கிட்டினால் மாறிவிடும் என்ற நம்பிக்கைகளெல்லாம்  பொய்த்துப்போனதையும், அவ்வாறு ஆனதற்கு சாதிக்கு இங்குள்ள மத அங்கீகாரம் அடிப்படையான காரணங்களில் ஒன்று என்றும் சொன்னார். அருவமான பிசாசாக விரவியிருக்கும் சாதிய மனோபாவத்தை கருத்தியல்ரீதியாகத் தொடர்ந்து செயல்படுவதன்மூலமே விரட்ட முடியும் என்றும் அதற்கு இதுபோன்ற படங்கள் உதவும் என்றும் சொன்னார்.

குடும்பம் என்ற அமைப்பு இருக்கும்வரை சாதியை ஒழிக்கமுடியாது என்று சாதாரணமாகவே தொடங்கிய ஒருவர் நான் இயற்கை உணவுப் பழக்கமுடையவன், புலால் உண்ணும் உங்கள் உடல்களில் இருந்து எழும் வாடைகூட எனது நாசியைத் தொந்தரவு செய்கிறது என்கிறரீதியில் தொடர்ந்தபோது அவை சற்று நெளியத்தொடங்கியது. எனக்குத் தமிழ் அவ்வளவு சுத்தமாக வராது என்பதைப் பெருமிதத்தோடு அல்லாமல் சற்று குற்ற உணர்ச்சியோடு சொல்லித் தொடங்கியவர்கள் இருந்தார்கள். சாதியை ஒழிப்பதற்கு எல்லாரும் லவ் பண்ணுங்க என்று சொல்லும்போது, சிலரிடம் வெளிப்படும் பெண்ணை சமூக உடைமையாகப் பார்க்கும் ஒருவித கிளுகிளுப்பான ஆணாதிக்க மனோபாவம் இடித்துரைக்கப்பட்டது. காமிராவின் கண்கள் ஒரு ஆணின் உறுத்த பார்வையாகவே இன்னும் இருக்கிறது என்ற ஷபனா ஆஸ்மியின் கருத்து வழிமொழியப்பட்டது. இந்தப் படத்திலும்கூட ஜாபியாவின் பார்வையிலும், அவனது தந்தையின் பார்வையிலுமே கதை நகர்கிறது என்பதும் அந்த குடும்பத்துப் பெண்களின் துயரங்கள் அவ்வளவாகப் பதிவாகவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

சாதி மட்டுமன்றி நமது சமூகத்தில் ஒரு வளரிளம்பருவ இளைஞன் பொதுவெளியில் அவமானப்படுத்தப்படுவதன் வலியை இப்படம் காட்டுகிறதென்பதை ஒருவர் எடுத்துக்கூறினார். இப்போதும்கூட பத்தாம் வகுப்பிலோ, பன்னிரண்டாம் வகுப்பிலோ மதிப்பெண் அதிகம் எடுக்காத பிள்ளையைத் தெருவில்வைத்து அசிங்கப்படுத்துவதை நாம் பார்க்கமுடிகிறதென்றார். இவையன்றி இன்னும் பல அடுக்குகள் கொண்ட படம் இஃதென்பது வெளிப்பட்டது. நிகழ்ச்சி முடிந்தபின்னும் இருவர், மூவராக வெளியே நின்று விவாதத்தைத் தொடர்ந்தார்கள்.

பாட்சோர்ஸிங் (botsourcing)

‘அவுட்சோர்ஸிங்’கை புறந்தருவித்தல் என்றால் ‘பாட்சோர்ஸிங்’கை பொறிதருவித்தல் என்றோ பொறிவழிசெய்வித்தல் என்றோ சொல்லலாமா? இந்தக் கேள்வியைவிட தலைபோகிற பிரச்சினை ஒன்று இருக்கிறது. ஆண்டுக்கு கிட்டத்தட்ட ஏழு லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையைத் தலைகீழாகப் புரட்டிப்போடக்கூடிய தனிப்பெரும் அச்சுறுத்தல் ஒன்று உண்டென்றால் அது இந்த பாட்சோர்ஸிங்தான் என்று சொல்கிறார்கள்.

இரத்தமும் தசையுமாய் உலவும் மனிதனின் வேலையை எந்திர மனிதன் பறிக்கும் அதே பழைய கதைபோலத்தான். வளர்ந்த நாடுகளில் ஊழியர்களின் ஊதியச் செலவு அதிகம் என்று சொல்லி சம்பளம் குறைவாக உள்ள வளர்முக நாடுகளில் மலிவாக உற்பத்தியையோ சேவையையோ பெற்றுக்கொள்வதுதான் புறந்தருவித்தலின் அடிப்படை. அதை தேவையற்றதாக்கும் விதத்தில், திரும்பத்திரும்ப செய்யப்படும் ஒரே மாதிரியான வேலைகளை சற்று அறிவுக்கூர்மையுடன்  தானாகச் செயல்படும் ரோபாட்டுகளைப் பயன்படுத்தி முடித்து தொழிற்கூடத்தில் ஆள்தேவையைக் குறைத்துவிடுவது சாத்தியமாகியிருக்கிறது. மனிதனைவிட விரைவாக இவை செயல்படும் என்பது பலம். இதற்கு இணையாக மென்பொருள் ரோபாட்டுகளும் உண்டென்பது கூகிள் விஷயத்தில் நாம் கண்கூடாகக் காண்கிற ஒன்றே. இப்போது நாம் ஏழுலட்சம் கோடி ரூபாய் என்பது எத்தனை பில்லியன் டாலர் என்று கேள்வியாகக் கேட்டாலே அது புரிந்துகொண்டு சரியான விடையைத் தருவது ஆங்கிலத்தில் மட்டுமாவது ஏற்கனவே சாத்தியமாகிவிட்டது.

இதுபோல வன்பொருளிலோ மென்பொருளிலோ பணிச்செயல்முறைகளை தானாக இயங்கும் வகையில் செய்து ஆட்தேவையைக் குறைப்பது பழைய கருத்துருதான். இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால் இவ்வாறு செய்வது இந்தியா போன்ற நாடுகளில் இருந்து உற்பத்தி செய்வதையோ, சேவைகளைப் பெற்றுக்கொள்வதையோவிட மலிவாகி வருகிறது என்றும் அதனால் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்ட வேலைவாய்ப்புகள் வளர்ந்தநாடுகளுக்கு மீண்டும் திரும்புவதாகவும் சொல்கிறார்கள்.

சதர்லேண்ட் நிறுவனத்தினர் சொல்வதன்படி தகவல் தொழில்நுட்ப வேலைகளை இந்தியாவுக்கு மாற்றுவதன்மூலம் ஒரு அமெரிக்க நிறுவனம் 20% – 30% சேமிக்க முடியும் என்றால் அவர்களது தானியக்க மென்பொருளையும் குறைந்த அளவில் உள்நாட்டு ஆட்களையும் பயன்படுத்தி 70%வரை செலவைக் குறைக்கலாமாம். இவ்வாறு எந்திரனும் மனிதனும் சேர்ந்து பணிபுரியும் அமைப்புக்கு ‘கோபாட்’ (cobot) என்று பெயரும் சூட்டிவிட்டார்கள். ஒப்பந்த அடிப்படையில் ஐஃபோன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் செய்துதரும் ஃபாக்ஸ்கான் பென்சில்வேனியாவில் அதிநவீன தொழிற்கூடம் அமைக்க முடிவுசெய்திருப்பது, டெஸ்லா மோட்டார்ஸ் தனது மின்சார மகிழுந்துகளை அமெரிக்க ஐக்கிய நாடுகளிலேயே முழுக்கத் தயாரிக்கத் திட்டமிட்டிருப்பது என்பன போன்றவை இத்தகைய போக்கிற்கு உதாரணங்களாக சுட்டப்படுகின்றன. மேற்கூறிய எல்லாவற்றுக்கும் அடிப்படை இந்தக் கட்டுரைதான்.  ஆர்வமுள்ளவர் மேற்கொண்டு ஆய்க.

 நெருங்கிய நட்பிலும், சுற்றத்திலும் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும், மருத்துவத்துறையில் குறிமுறையேற்றம் (coding) செய்பவர்களும், அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகை (PCB) வடிவமைப்பவர்களும், அல்லது இவர்கள் சார்ந்த சேவைத்தொழில்களுள் ஒன்றான ஒப்பந்த உந்து ஓட்டுனர்களும் உண்டு. நான் நடக்கும் பாதையில் சாரிசாரியாக கூட நடப்பவர்கள் ஏற்றுமதிக்கான காலணி, ஆயத்த ஆடை உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் பெண்கள். எத்தகைய விளைவுகளை பாட்சோர்ஸிங் ஏற்படுத்தக் காத்திருக்கிறது? இந்தியப் பெருநிறுவனங்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளலாம். பிறர்? எதிர்கொள்வதற்கான திட்டம் ஏதாவது நம்மிடம் இருக்கிறதா?

இன்னும் எதிலிருந்தெல்லாம் மின்சாரம் எடுக்கலாம்?

தேசிய மின்திறன் பயிற்சியகத்தின் இணையதளத்தில்  அன்றாடம் நாளிதழ்களில் வெளியாகும் மின்னாற்றல் துறை சார்ந்த செய்திகளின் நறுக்குகளை ஒளிமேவல் (ஸ்கேன்) செய்து தொகுத்து அளிக்கிறார்கள். ஆங்கில வணிகச் செய்தி இதழ்களில் வரும் பெருநிறுவனங்கள் பத்திரிக்கை வெளியீடாகத் தரும் ‘செய்தி’களும், இந்தி இதழ்களில் வரும் தில்லி / ஃபரீதாபாத் உள்ளூர் மின்பகிர்மானச் செய்திகளும் (எ.கா: “பிஎஸ்இஎஸின் மீட்டர் ரீடர் லஞ்சம் பெறும்போதே அரேஸ்ட்”) கலந்த கலவையாக இது இருக்கும். பணிநிமித்தம் அடிக்கடி பார்ப்பேன்.

 Power from Wavesஅப்படித்தான் கடந்த ஏப்ரல் 16 அன்று படித்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. மொட்டையாக ஒரு துணுக்கில் சென்னை மாநிலம் மின் உற்பத்திக்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி ஓய்ந்துவிட்ட நிலையில் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்போவதாகவும், ஃபிரான்ஸ் செல்லுகிற தொழில் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதற்கான வழிமுறைகளை நேரில் கண்டறிந்து வருவார் எனவும் போட்டிருந்தது.

 முதல்பார்வைக்கு இவ்வளவு மோசமாகவா தகவல்பிழைகளுடன் வெளியிடுவார்கள் என்றிருந்தது. தமிழ்நாட்டை சென்னை மாநிலம் என்று ஏன் சொல்கிறார்கள்? ஒழுங்காக வசூல் இலக்குகளை எய்திவரும் நத்தத்தை மாற்றிவிட்டார்களா? என்று கணநேரக்குழப்பம். வடவர்கள் செய்யக்கூடியவர்கள்தான். அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சென்னைப் பதிப்பு தொடங்கியிருக்கவில்லை. தில்லி பதிப்பில் ஒருநாள் ‘தென்னிந்தியாவிலிருந்து’ என்ற பக்கத்தின் வெற்றிடத்தை நிரப்ப ஐந்து வருடம் பழைய செய்தி ஒன்றை (ஜெயாவின் காலில் விழுந்து வணங்கினார்கள் அல்லது ரஜினி கட்-அவுட்டுக்கு பால்முழுக்கு செய்தார்கள் போன்ற ஒன்று) இட்டு நிரப்பியிருந்தார்கள்.

 பிறகுதான் புரிந்தது. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில்  அந்த நாள் ஞாபகம் பகுதியில் (From the archives) ஏப்ரல் 16, 1964ன் செய்தியை மறுபதிப்பு செய்திருக்கிறார்கள் என்பதுவும், அதைப் பற்றிய பிரக்ஞையின்றியே என்.பி.டி.ஐகாரர்கள் தொகுத்திருக்கிறார்கள் என்பதுவும். ஓத ஆற்றல் (tidal energy) பற்றியெல்லாம் நம்மாட்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே பரிசீலிக்கத் தொடங்கியும் நமது ஆற்றல் பஞ்சம் இன்னும் தீரவில்லை என்பதுபற்றி வருத்தம்தான்.

 ஜப்பான்காரர்கள் விண்வெளியில் ராட்சத கதிரொளி சேகரிப்புக் கலங்கள் நிறுவி அதன் மூலம் நுண்ணலைக் கதிர்களை அனுப்பி 1கிகாவாட் மின்சாரம் தயாரிப்பார்களாம். அதற்காக இங்கு ஒரு தீவின் மேல் 500 கோடி உணர்விகள் கொண்ட 3 கிமீ நீளத்துக்கான வலையமைவு ஏற்படுத்தப்படுமாம்.     “அவன்லாம் தெளியக் கடைஞ்சவன்யா. சித்தெறும்புப் **த்தியிலிருந்தே வெண்ணய் எடுப்பான்” என்பார்கள். சிற்றெறும்பின் சிறுநீரிலிருந்து மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையா?

ஈரம்பிரியன் மதுரைக்காரன்

அல்லது ஈரம்பிரியை மதுரைக்காரி. நேற்றைய தமிழ் ‘தி இந்து’ நாளிதழில்  அழிவின் விளிம்பிலுள்ள நன்னீர் தாவரங்கள் பற்றி ஒரு கட்டுரை வந்தது. அதில் ஒரு சிற்றினத்தின் அறிவியல் பெயர் ‘மதுரையைச் சேர்ந்தது’ என்பதைக் குறிக்கும்விதமாக ஹைக்ரோஃபிலா மெஜுரென்சிஸ் (மதுரென்சிஸ்?) என்று இடப்பட்டிருப்பதை அறிந்து ஆர்வம் மிகுந்தது.

கூடுதல் விவரங்கள் தேடியதில் அந்தச்செடி இயற்கையைப் பேணுதற்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் “உய்ய அச்சுறுத்த நிலை” (critically endangered)- யில் உள்ள ஒன்று எனத் தெரிகிறது. அதாவது மிகவும் அருகிப்போய், அழிவின் விளிம்பில் உள்ள நிலையில் இருந்து இல்லாதொழியும் நிலைக்கு மாறுவதான கட்டம்.

1958ல் பாலகிருஷ்ணனும், சுப்பிரமணியமும் மதுரை அழகர்மலையில் நல்லகுளம் என்ற இடத்தில் இச்சிற்றினத்தைக் கண்டறிந்து வகைப்படுத்தினராம். இவர்கள் ஸ்பெயினில் பிறந்து பம்பாய், பூனா, ஆக்ரா, கல்கத்தாவில் தாவரவியல் பயிற்றுவித்து இந்திய தாவரவள அளவைநிறுவனத்தின் இயக்குனராக உயர்ந்த பத்மஸ்ரீ மறைதிரு.சாந்தாபாவ் நினைவாக சாந்தாபாவுவா என்றொரு பேரினம் உருவாக்கி சாந்தாபாவுவா மதுரென்சிஸ் (santapaua madurensis) என்று பெயரிட்டிருக்கிறார்கள். பிறகு கார்த்திகேயனும் மூர்த்தியும் 2010ல் இதை ஹைக்ரோஃபிலா பேரினத்தில் இணைத்து ஹைக்ரோஃபிலா மதுரென்சிஸ் என்று மாற்ற அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டு வழங்கிவருகிறது. இரவிக்குமார் என்பவர் 1984ல் கடைசியாக இச்செடிகளைச் சேகரித்திருக்கிறார். பிறகு எங்காவது அடையாளம் காணப்பட்டதா என்பது பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை. கடைசியாகப் பார்த்த இடத்தில் சுமார் 50 செடிகள்தான் இருந்தனவாம். எனவே இப்போதும் இவ்வினச் செடி இருக்குமா என்பதே ஐயத்திற்கிடமானது. இதை அழியாது பேணுவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லையென்றும், இதன் தற்போதைய பரவலைக் கண்டறிவது உடனடித் தேவை என்றும் தெரியவருகிறது. மேலும் விவரங்கள் கேட்டு ஒரு தாவரவியல் பேராசிரியருக்கு மின்மடல் அனுப்பியிருக்கிறேன். ஏதாவது சொல்கிறாரா பார்க்கலாம்.

அது அப்படியே இருக்க, வேறெந்த உயிரினங்களுக்கெல்லாம் இவ்வாறு மதுரைக்காரர்களாக அறியப்படும் வாய்ப்பு கிட்டியிருக்கிறதென்று தேடினேன். பழைய மதுரை மாவட்டத்தின் பழனி மலையில் கொடைக்கானலில் கண்டறியப்பட்ட ப்ளாட்டிப்ளெக்ட்ரூரஸ் மதுரென்சிஸ் (platyplectrurus madurensis)-இன்ஆங்கிலப் பொதுப்பெயரை சொல்லுக்கு சொல் பெயர்த்தால் திருவிதாங்கூர் மலை முள்வால் பாம்பு என்று வருகிறது. ஊட்டிப் பாம்பு போலத் தோற்றமளிக்கிறது. தெரிந்தவர்கள் விளக்கலாம். குரோடலேரியா மதுரென்சிஸ் (crotalaria madurensis) என்ற மூலிகைச்செடி மற்றொன்று. (பகன்றை அல்லது கிலுகிலுப்பைச் செடியோடு தொடர்புடையதாக இருக்கலாம்). இன்னும் பல பாசிச்செடிகளும் (ப்ளாட்டிடிக்டியா, ராம்ஃபீடியம், பர்த்ராமியா, ஃபேப்ரோனியா, ப்ளாஜியோதீசியம்) பழைய மதுரை மாவட்டத்திற்குரியனவாக பெயரிடப்பட்டுள்ளன.

இதில் ஒரு குழப்பம் என்னவென்றால் இந்தோனேசியாவின் மதுரா தீவுகளில் கண்டறியப்பட்டதை அடிப்படையாக வைத்தும் மதுரென்சிஸ் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இப்படித்தான் பால்பிஃபர் மதுரென்சிஸ் (palpifer madurensis) என்றொரு விட்டில்பூச்சியும், ரைனோலோஃபஸ் மதுரென்சிஸ் (Rhinolophus madurensis) என்றொரு வவ்வாலும், அபோக்ரிப்டோடோன் மதுரென்சிஸ் (apocryptodon madurensis) என்றொரு கடல்வாழ் உறிஞ்சுமீனும், சிட்ரஸ் மதுரென்சிஸ் என்றொரு எலுமிச்சை / ஆரஞ்சு வகையும்   மதுராக்காரர்களாகியிருக்கின்றன.

 எது எப்படியோ, மெட்ராஸ் ஐ,  நியூ டெல்லி மெடல்லோ-பீட்டா-லாக்டமேஸ் -1 என்றெல்லாம் கெட்ட பெயர் வாங்காமல் மதுரைக்கார உயிரினங்கள் சிற்றினம் சேர்ந்தமை ஆறுதலுக்குரியதே. ஆனால் இவ்வுயிர்களில் பலவும் அழிவின் விளிம்பில் இருப்பது வருத்தத்துக்கும், உடனடி செயல்பாட்டுக்கும் உரியது.

மொழியின் வளர்சிதைமாற்றம்

கடந்த மாதம். வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்து தாங்கள் போட்டியிடுவது உறுதியான மறுநாள் காலையில் வேட்பாளர்கள் வீதிவீதியாக முழுவீச்சில் பரப்புரை செய்யத் தொடங்கியிருந்தனர். திமுக வேட்பாளர் வந்த வாகன அணிவகுப்பு  பரங்கிமலை – பூவிருந்தவல்லி சாலையில் ஒரு இடத்தில் அப்படியே அரைவட்டமடித்துத் திரும்பவேண்டியிருந்தது. எல்லாரும் வேலைக்கோ வேறு எங்கேயோ விரைந்துகொண்டிருந்த நேரம். அணிவகுப்பின் முன்வரிசையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் நொடிக்குள்ளாக வளைந்து நடுப்பாதையில் நின்றுகொண்டு   பிற வாகனங்களை நிறுத்தி தமது வாகனங்கள் செல்ல வழியமைத்தார். ஒலிவாங்கி தாங்கி திறந்த ஜீப்பில் வந்தவர் உரத்த குரலில் திரும்பத் திரும்ப சொன்னார்: “Thank you very much, sir!”, “Sorry for the disturbance, sir!”. இதுவரையில் நானறிந்த திமுகவினரின் மொழி இதுவல்லவே. எனக்குப் புதியதாக இருந்தது. குறிப்பாக இன்றைய திமுக பற்றியும்  இன்றைய சென்னை பற்றியும், பொதுவாக பெரிய கட்சிகள் பற்றியும், பெரிய நகரங்கள் பற்றியும் எதையோ உணர்த்துவதாகப்பட்டது.

நமது மொழி வளர்சிதைமாற்றத்துக்கு உள்ளாவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. வளர்மாற்றத்தைவிட சிதைமாற்றத்தை? ஆச்சி அழகர் இறங்குவது பற்றி இயல்பாகச்  சொல்லிக்கொண்டிருந்தது: “சீர் கொண்டுவந்த அழகர்கிட்ட தல்லாகுளத்தை மீனாட்சி கேட்கும். மதுரையில பாதி தந்துருக்கேன். மானாமதுரையை முழுசாத் தந்திருக்கேன். தல்லாகுளத்தையும் கேட்டா தரமுடியுமான்றுவாரு. வாங்காமக் கோவிச்சுட்டுப் போயிருச்சேன்னு வப்பாட்டி வீட்டுக்குப் போய்ருவாரு” என்று. மோனையறியுமா? மொழிநயம் கருதுமா? ஆச்சியிடம் வளமான மொழியிருக்கிறது. மழை பெய்ததா என்று அம்மாவிடம் கேட்டால் “பேஞ்ச பாடுமில்லை, ஓஞ்ச பாடுமில்லை. புனுபுனுன்னு விழுந்துக்கிட்டே இருக்கு” என்கிறது. “என்னம்மா, மே மாசம். அப்படியே ஒரு டூர் அடிக்க வேண்டியதுதானே?” என்று கேட்டால் “பெறந்து வளந்து பேரன் பேத்தி எடுத்தாச்சு. ஒருநா ஒருபொளுது இந்தாருக்க மகாலுக்குப் போனதில்ல”  என்று பதில்சொல்ல முடிகிற அளவுக்கு அம்மாவின் தலைமுறைவரை வளமான மொழி மிச்சமிருக்கிறது. இதே கேள்விகளுக்கு நாம் என்ன வார்த்தைகளில் பதில் சொல்லியிருப்போம்?

 அதுநிற்க. அலுவலக நண்பர் சொந்தஊர் பக்கம் மாற்றலாகி உத்திரப்பிரதேசம் செல்கிறார். அது இந்த அலுவலகத்தில் அவருக்குக் கடைசி நாள். ஒரு கோடுபோட்ட அரைகுயர் நோட்டுப் புத்தகத்தை நீட்டி தமிழில் இருப்பதை ஆங்கிலத்தில் எழுதித்தரச்சொன்னார். பார்த்தால் அது ஒரு நாடிஜோதிட ஏடு. காண்டம் அது இது என்று ஓரிரு வார்த்தைகள்தான் புரிந்தன. இதற்குமுன் நண்பன் ஒருவன் சொல்லக்கேட்டிருக்கிறேன். அவங்கப்பா பெயர் சுந்தரராஜன் என்பதை ‘அழகுக்கே அரசனான’ போன்ற தொடர்மூலமும் இதுபோலவே இன்னபிற தகவல்களையும் ஏடெடுத்து எழுதிப் பாடிக்காட்டினார்கள் என்று. இவர் போனபோது என்ன சொன்னார்களோ, இவருக்கு என்ன புரிந்ததோ. ஓடுகிற கையெழுத்து. பாடுவதற்கான நடை. பூடகமான மொழி. இயல்வது யாதுளது? கையை விரித்துவிட்டேன்.

தற்செயல் என்பது…

இன்று தற்செயலாக இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டேன். மதியம் நமது அபிமான எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் ‘கடவுச்சொல்’ சிறுகதையைப் படித்தபோது:

 யூதர்கள் குளம்பு பிளந்த, இரை மீட்கும் மிருகத்தின் இறைச்சியை மட்டுமே உண்பார்கள். ஆடு, மாடு, மான், மரை. பன்றிக்கு பிளவுபட்ட குளம்பு ஆனால் இரை மீட்காது. ஆகவே அது தள்ளி வைக்கப்பட்ட உணவு. ஒட்டகம் இரை மீட்கும் ஆனால் குளம்பு பிளவு படவில்லை. அதுவும் தள்ளிவைக்கப்பட்ட உணவு. நீரில் வாழும் பிராணிக்கு செதிளும் செட்டையும் இருக்கவேண்டும். ஆகவே மீன் ஏற்கப்பட்ட உணவு. நண்டு, கணவாய், றால் தள்ளிவைக்கப்பட்டவை.

சற்று நேரத்திலேயே ஜொஸே சரமாகோவின் “ஏசுகிறிஸ்து எழுதின சுவிசேஷம்” நாவல் வாசிப்பதைத் தொடர்ந்தபோது இந்த பக்கத்துக்கு வந்திருந்தேன்.

Behold what you may eat of the various aquatic species, you may eat anything which has fins and scales in the waters, seas and rivers, but everything in the seas and rivers which has neither fins nor scales, whether they be creatures that breed or live under water, you will shun and abhor for all time, you will refrain from eating the flesh of everything in the water which has neither fins nor scales and treat them as abominable.

(The Gospel According To Jesus Christ, José Saramago)

(இரு மேற்கோள்களிலும் அழுத்தம் நான் தந்தது)

இவ்வாறு ஒரே விஷயத்தை சில நிமிட இடைவெளிக்குள் எதிர்பாராத இருவேறு இடங்களில் படிக்க வாய்த்த தற்செயல் பற்றி எழுதிவிட்டதால் இந்த இடத்தில் இப்படியொரு சுயவிளம்பரமும் செய்துகொள்ள முடிகிறது.