தேசிய மின்திறன் பயிற்சியகத்தின் இணையதளத்தில் அன்றாடம் நாளிதழ்களில் வெளியாகும் மின்னாற்றல் துறை சார்ந்த செய்திகளின் நறுக்குகளை ஒளிமேவல் (ஸ்கேன்) செய்து தொகுத்து அளிக்கிறார்கள். ஆங்கில வணிகச் செய்தி இதழ்களில் வரும் பெருநிறுவனங்கள் பத்திரிக்கை வெளியீடாகத் தரும் ‘செய்தி’களும், இந்தி இதழ்களில் வரும் தில்லி / ஃபரீதாபாத் உள்ளூர் மின்பகிர்மானச் செய்திகளும் (எ.கா: “பிஎஸ்இஎஸின் மீட்டர் ரீடர் லஞ்சம் பெறும்போதே அரேஸ்ட்”) கலந்த கலவையாக இது இருக்கும். பணிநிமித்தம் அடிக்கடி பார்ப்பேன்.
அப்படித்தான் கடந்த ஏப்ரல் 16 அன்று படித்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. மொட்டையாக ஒரு துணுக்கில் சென்னை மாநிலம் மின் உற்பத்திக்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி ஓய்ந்துவிட்ட நிலையில் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்போவதாகவும், ஃபிரான்ஸ் செல்லுகிற தொழில் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதற்கான வழிமுறைகளை நேரில் கண்டறிந்து வருவார் எனவும் போட்டிருந்தது.
முதல்பார்வைக்கு இவ்வளவு மோசமாகவா தகவல்பிழைகளுடன் வெளியிடுவார்கள் என்றிருந்தது. தமிழ்நாட்டை சென்னை மாநிலம் என்று ஏன் சொல்கிறார்கள்? ஒழுங்காக வசூல் இலக்குகளை எய்திவரும் நத்தத்தை மாற்றிவிட்டார்களா? என்று கணநேரக்குழப்பம். வடவர்கள் செய்யக்கூடியவர்கள்தான். அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சென்னைப் பதிப்பு தொடங்கியிருக்கவில்லை. தில்லி பதிப்பில் ஒருநாள் ‘தென்னிந்தியாவிலிருந்து’ என்ற பக்கத்தின் வெற்றிடத்தை நிரப்ப ஐந்து வருடம் பழைய செய்தி ஒன்றை (ஜெயாவின் காலில் விழுந்து வணங்கினார்கள் அல்லது ரஜினி கட்-அவுட்டுக்கு பால்முழுக்கு செய்தார்கள் போன்ற ஒன்று) இட்டு நிரப்பியிருந்தார்கள்.
பிறகுதான் புரிந்தது. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் அந்த நாள் ஞாபகம் பகுதியில் (From the archives) ஏப்ரல் 16, 1964ன் செய்தியை மறுபதிப்பு செய்திருக்கிறார்கள் என்பதுவும், அதைப் பற்றிய பிரக்ஞையின்றியே என்.பி.டி.ஐகாரர்கள் தொகுத்திருக்கிறார்கள் என்பதுவும். ஓத ஆற்றல் (tidal energy) பற்றியெல்லாம் நம்மாட்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே பரிசீலிக்கத் தொடங்கியும் நமது ஆற்றல் பஞ்சம் இன்னும் தீரவில்லை என்பதுபற்றி வருத்தம்தான்.
ஜப்பான்காரர்கள் விண்வெளியில் ராட்சத கதிரொளி சேகரிப்புக் கலங்கள் நிறுவி அதன் மூலம் நுண்ணலைக் கதிர்களை அனுப்பி 1கிகாவாட் மின்சாரம் தயாரிப்பார்களாம். அதற்காக இங்கு ஒரு தீவின் மேல் 500 கோடி உணர்விகள் கொண்ட 3 கிமீ நீளத்துக்கான வலையமைவு ஏற்படுத்தப்படுமாம். “அவன்லாம் தெளியக் கடைஞ்சவன்யா. சித்தெறும்புப் **த்தியிலிருந்தே வெண்ணய் எடுப்பான்” என்பார்கள். சிற்றெறும்பின் சிறுநீரிலிருந்து மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையா?