‘அவுட்சோர்ஸிங்’கை புறந்தருவித்தல் என்றால் ‘பாட்சோர்ஸிங்’கை பொறிதருவித்தல் என்றோ பொறிவழிசெய்வித்தல் என்றோ சொல்லலாமா? இந்தக் கேள்வியைவிட தலைபோகிற பிரச்சினை ஒன்று இருக்கிறது. ஆண்டுக்கு கிட்டத்தட்ட ஏழு லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையைத் தலைகீழாகப் புரட்டிப்போடக்கூடிய தனிப்பெரும் அச்சுறுத்தல் ஒன்று உண்டென்றால் அது இந்த பாட்சோர்ஸிங்தான் என்று சொல்கிறார்கள்.
இரத்தமும் தசையுமாய் உலவும் மனிதனின் வேலையை எந்திர மனிதன் பறிக்கும் அதே பழைய கதைபோலத்தான். வளர்ந்த நாடுகளில் ஊழியர்களின் ஊதியச் செலவு அதிகம் என்று சொல்லி சம்பளம் குறைவாக உள்ள வளர்முக நாடுகளில் மலிவாக உற்பத்தியையோ சேவையையோ பெற்றுக்கொள்வதுதான் புறந்தருவித்தலின் அடிப்படை. அதை தேவையற்றதாக்கும் விதத்தில், திரும்பத்திரும்ப செய்யப்படும் ஒரே மாதிரியான வேலைகளை சற்று அறிவுக்கூர்மையுடன் தானாகச் செயல்படும் ரோபாட்டுகளைப் பயன்படுத்தி முடித்து தொழிற்கூடத்தில் ஆள்தேவையைக் குறைத்துவிடுவது சாத்தியமாகியிருக்கிறது. மனிதனைவிட விரைவாக இவை செயல்படும் என்பது பலம். இதற்கு இணையாக மென்பொருள் ரோபாட்டுகளும் உண்டென்பது கூகிள் விஷயத்தில் நாம் கண்கூடாகக் காண்கிற ஒன்றே. இப்போது நாம் ஏழுலட்சம் கோடி ரூபாய் என்பது எத்தனை பில்லியன் டாலர் என்று கேள்வியாகக் கேட்டாலே அது புரிந்துகொண்டு சரியான விடையைத் தருவது ஆங்கிலத்தில் மட்டுமாவது ஏற்கனவே சாத்தியமாகிவிட்டது.
இதுபோல வன்பொருளிலோ மென்பொருளிலோ பணிச்செயல்முறைகளை தானாக இயங்கும் வகையில் செய்து ஆட்தேவையைக் குறைப்பது பழைய கருத்துருதான். இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால் இவ்வாறு செய்வது இந்தியா போன்ற நாடுகளில் இருந்து உற்பத்தி செய்வதையோ, சேவைகளைப் பெற்றுக்கொள்வதையோவிட மலிவாகி வருகிறது என்றும் அதனால் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்ட வேலைவாய்ப்புகள் வளர்ந்தநாடுகளுக்கு மீண்டும் திரும்புவதாகவும் சொல்கிறார்கள்.
சதர்லேண்ட் நிறுவனத்தினர் சொல்வதன்படி தகவல் தொழில்நுட்ப வேலைகளை இந்தியாவுக்கு மாற்றுவதன்மூலம் ஒரு அமெரிக்க நிறுவனம் 20% – 30% சேமிக்க முடியும் என்றால் அவர்களது தானியக்க மென்பொருளையும் குறைந்த அளவில் உள்நாட்டு ஆட்களையும் பயன்படுத்தி 70%வரை செலவைக் குறைக்கலாமாம். இவ்வாறு எந்திரனும் மனிதனும் சேர்ந்து பணிபுரியும் அமைப்புக்கு ‘கோபாட்’ (cobot) என்று பெயரும் சூட்டிவிட்டார்கள். ஒப்பந்த அடிப்படையில் ஐஃபோன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் செய்துதரும் ஃபாக்ஸ்கான் பென்சில்வேனியாவில் அதிநவீன தொழிற்கூடம் அமைக்க முடிவுசெய்திருப்பது, டெஸ்லா மோட்டார்ஸ் தனது மின்சார மகிழுந்துகளை அமெரிக்க ஐக்கிய நாடுகளிலேயே முழுக்கத் தயாரிக்கத் திட்டமிட்டிருப்பது என்பன போன்றவை இத்தகைய போக்கிற்கு உதாரணங்களாக சுட்டப்படுகின்றன. மேற்கூறிய எல்லாவற்றுக்கும் அடிப்படை இந்தக் கட்டுரைதான். ஆர்வமுள்ளவர் மேற்கொண்டு ஆய்க.
நெருங்கிய நட்பிலும், சுற்றத்திலும் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும், மருத்துவத்துறையில் குறிமுறையேற்றம் (coding) செய்பவர்களும், அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகை (PCB) வடிவமைப்பவர்களும், அல்லது இவர்கள் சார்ந்த சேவைத்தொழில்களுள் ஒன்றான ஒப்பந்த உந்து ஓட்டுனர்களும் உண்டு. நான் நடக்கும் பாதையில் சாரிசாரியாக கூட நடப்பவர்கள் ஏற்றுமதிக்கான காலணி, ஆயத்த ஆடை உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் பெண்கள். எத்தகைய விளைவுகளை பாட்சோர்ஸிங் ஏற்படுத்தக் காத்திருக்கிறது? இந்தியப் பெருநிறுவனங்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளலாம். பிறர்? எதிர்கொள்வதற்கான திட்டம் ஏதாவது நம்மிடம் இருக்கிறதா?