அந்தப் படத்தின் கடைசிக் காட்சியில் ஜபியா வீசும் கல் நம்மை நோக்கியே பறந்து வருவது வெளிப்படை. நாகராஜ் மஞ்சுளேயின் ‘பஃன்றி’ என்ற மராத்திய படம் பற்றி பலரும் ஏற்கனவேயே எழுதி இருக்கிறார்கள். நேற்றுகூட தமிழ் ‘தி இந்து’வில் அழகியபெரியவனின் கட்டுரை வெளிவந்தது. அன்று மாலையே அவரது உரையைக் கேட்கவும், அந்தப் படத்தைப் பார்க்கவும் வாய்ப்பு கிடைத்தது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைபார்க்கும் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து சாப்ளின் டாக்கீஸ் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக மாதம் ஒரு படம் திரையிட்டு திரைக்கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் அழைத்து நேயர்களுடன் உரையாட வைக்கிறார்கள். பொதுவாக திரைப்படம் பற்றி நாம் பேசும்போது கதை, அழகியல் பற்றிப் பேசுகிற அளவுக்கு உள்ளடக்கம் பற்றிப் பேசுவதில்லை என்ற ஆதங்கத்தைப் போக்குவதற்கான முயற்சி இது. தமக்குப் பிடித்த படங்களைத் திரையிட்டு அதன் சாரம், ஆன்மா, அரசியல் பற்றிக் கதையாடுகிற நிகழ்வு [இது அவர்கள் ஆங்கிலத்தில் கொடுத்த கைப்பிரதி கொண்டு அறிந்துகொண்டது. தமிழில் தேடி கைப்பிரதியின் பின்புறம் பார்த்தேன். வெள்ளையாக இருந்தது.]
இந்த மாதம் அடையாறு இந்திரா நகர் 3வது நிழற்சாலையில் உள்ள மாநகராட்சி வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள நிலா கொண்டாட்ட அரங்கில் ‘பஃன்றி’ திரையிடலும் தொடர்ந்து எழுத்தாளர் அழகிய பெரியவன், ‘அட்டகத்தி’ இயக்குனர் ரஞ்சித் ஆகியோருடன் உரையாடலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மாலை 4.30க்குத் தொடங்குவதாக அறிவித்திருந்தது நல்ல முடிவு. ஐந்தே காலுக்காவது தொடங்கி 8.30 வரை தொடர முடிந்தது. இல்லாவிட்டால் ஏழுமணிக்கு வந்துவிட்டு 8 மணிக்குக் காலில் சுடுநீர் ஊற்றிக்கொண்டு எல்லாரும் ஓடுவார்கள். [அடுத்தமுறை இதே இடத்தில் நடந்தால் பேருந்தில் வருபவர்களுக்காக ஒரு குறிப்பு: அருகிலுள்ள லேண்ட் மார்க் இந்திராநகர் ரயில்நிறுத்தம் என்று போட்டிருந்தாலும் அடையாறு டெப்போதான் மிக அருகிலுள்ள பேருந்து நிறுத்தம்]
நல்ல படம் என்பதைத் தவிர நுட்பங்களை விளக்கிச் சொல்கிற அளவுக்கு எனக்கு அவ்வளவாகத் தெரியாது. முதல் காட்சியிலேயே நம்மூர் படங்களுக்கும் இந்தப் படத்திற்கும் உள்ள வேறுபாடு தெரிந்துவிடுகிறது. கவட்டை வார் கொண்டு கரிச்சான் குருவியைத் துரத்தும் ஜாபியா எறிந்த களிமண் குண்டு (?) குத்தவைத்து வெளிக்கிருக்கும் ஒருவனைத் தொந்தரவு செய்கிறது. வெறுமனே தொந்தரவு செய்கிறது. நாம் புன்னகைக்க அது போதுமானதாயிருக்கிறது. அவனுக்குப் ‘படக்கூடாத’ இடத்தில் படுவதில்லை. அவன் ஓங்கி ஓலமிட்டு நமக்குச் சிரிப்பு மூட்டுவதில்லை.
அந்தப் பையனின் கையெழுத்து முத்துமுத்தாக இருக்கிறது. சகோதரியின் கல்யாணத்திற்கு மண்வீட்டுக்கு வர்ணம் ‘மொத்தி’ கும்பம் வரைந்து ‘சுப விவாஹ’ அன்று அழகாக எழுதுபவை அவனது கரங்கள். கவண் வில் கொண்டு அவன் கரிச்சானைத் துரத்துவது அதன் சாம்பலை ஷாலு மீது தூவிவிட்டு அவளை வசியம் செய்வதற்காக. அவனது அம்மா ‘ஏன் பள்ளிக்கூடம் பக்கம் வந்தாய்’ என்று இவன் கோபமாகக் கேட்கும்போது ‘நாலெழுத்துப் படிச்சு என்னையும் எல்லாரும் மேடம்னு கூப்பிடட்டும்னுதான்’ என்று நக்கலாகப் பதில்சொல்பவள். ‘இவனைத் தலையில் வைத்துக்கொண்டு ஆடும்’ சைக்கிள்கடைக்காரன் நடைமுறை வாழ்வின் ஆற்றாமைகளை மந்திரதந்திர உலகில் நம்பிக்கை வைப்பதன்மூலம் ஆற்றிக்கொள்ள நினைப்பவன். கேரம் விளையாட்டைப் பார்க்கிற சாக்கில் சைக்கிள்கடையில் அமர்ந்து ஜாபியா ஷாலுவைப் பார்க்கும்போது மேலே தொங்கும் மண்காப்புத் தொங்கல் (mud flap)களில் ‘லவ் கே சக்கர் மே’ என்று எழுதியிருக்கிறது. ஜாபியாவின் கூட்டாளி பீர்யா பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் ஜாலியாகத் திரிபவன். அந்த நிலப்பரப்பு மராட்டிய மாநிலத்தில் கோட்டையோ பௌத்த குகைகளோ பார்க்கப்போய் குன்றேறி நிற்கும்போது கண்முன் விரியும் அதே வெளிர்மஞ்சள் செம்பரப்பு. அசலான படம்.
அழகிய பெரியவன் சிறுவயதிலேயே தமிழ்ப் படங்களையும் தனது கல்லூரி காலங்களிலேயே வேலூர் ‘தினகரன்’ அரங்கில் வெளிநாட்டுப் படங்களையும் பார்க்கத் தொடங்கி இத்தனை வருடங்களாகியும் தமது வாழ்வோடு ஒன்றிப் பார்க்கமுடிகிற வகையில் மிகச்சில படங்களே இருந்தன என்றும் இப்படம் அதில் ஒன்று என்றும் குறிப்பிட்டார். விறகுக்கு குச்சி ஒடிக்கப்போய் விரட்டுப்படும் காட்சியைக் குறிப்பிட்டுத் தானும் அதுபோல தாங்கல் ஏரிக்கரையில் விறகுவெட்டப்போய் விரட்டப்பட்டிருப்பதாக நினைவுகூர்ந்த ரஞ்சித்தும் அதையே வழிமொழிந்தார். ‘அட்ட கத்தி’யும் தலித் வாழ்வைப் பேசும் படந்தான் என்று ரஞ்சித் சுட்டிக்காட்டியபோது அழகிய பெரியவன் அது ஒரு விதிவிலக்கு என்றும் அப்போதே அப்படக்குழுவினரை அழைத்து ஆம்பூரில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் கலந்துகொண்டு பேசியதையும் நினைவூட்டினார். கதையைத் தேடி எங்கெல்லாமோ அலையத் தேவையில்லை, உங்களைச் சுற்றியே உங்கள் வாழ்விலேயே ஏராளம் இருக்கிறது. அதை நேர்மையாகச் சொன்னால் போதும். இலக்கியத்துடனான தொடர்பை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று திரைத்துறை சார்ந்தவர்களுக்குச் சொன்னார். ரஞ்சித் தலித் வாழ்வைக் காட்டும் படங்களைத் தொடந்து எடுப்பேன் என்றது வரவேற்பைப் பெற்றது.
நாகராஜ் அடிப்படையில் ஒரு கவிஞர் என்பதை படம் முழுக்க வரும் குறியீடுகளில் இருந்து உணர முடிகிறதென்பதை, ஷாலு திருவிழா ஊர்வலத்தின்போது நுரைக்குமிழிகளை ஊதிவிடுவது, ஜாபியாவின் வாடகை மிதிவண்டியை சரக்குந்து நசுக்குவது, பின்புலத்தில் சுவரில் அம்பேத்கர், பூலே தம்பதியர், காட்கே மஹாராஜ் ஓவியங்கள் இருக்க பன்றி தூக்கிச்செல்லப்படுவது போன்ற காட்சிகளைச் சொல்லி அழகியபெரியவன் விளக்கினார். ஒரு காட்சியில், பிடிக்க முயல்கையில் போக்குகாட்டிய பன்றியை ஒருவழியாய் ஜாபியாவும் அவனது அப்பாவும் நெருங்கிவிடுகிறார்கள். அப்போது பார்த்து அருகிலுள்ள பள்ளியில் நாட்டுப்பண் இசைக்கப்படுகிறது. வெளிக்கிருந்து கொண்டிருப்பவன் உட்பட எல்லாரும் அப்படியே சங்கடமாய் நிற்கிறார்கள். பன்றி மட்டும் புட்டத்தை ஆட்டிக்கொண்டு அழகாக ஓடிவிடுகிறது. இக்காட்சியில் பொதிந்துள்ள ‘கலக அழகியல்’ மனங்கொள்ளத்தக்கது என்றார்.
நாகராஜ் ஒரு பேட்டியில் திறமை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, பகுதிக்கோ மட்டும் உரியதல்ல என்று சொல்லியிருக்கிறாராம். அதைச்சொல்லி தமிழ் சினிமாவின் மதுரை பற்றிய கற்பிதங்களை அழகியபெரியவன் லேசாகக் கோடிகாட்டினார் (யேய்… இந்த மதுரைப்படம்லாம் எடுக்கிறத கொஞ்ச நாளைக்கு நிறுத்துங்கப்பா..அங்கிட்டிருக்கவன்ய்ங்களும் நம்ம படம்னு சொல்ல முடியல. இங்கிட்டிருக்கவன்ய்ங்களுக்கும் கடுப்பேத்துது.)
பிறகு பலரும் ஆவலுடன் கலந்துகொண்ட விவாதமும் நடந்தது. சாதிய மனோபாவமானது கல்வியறிவு அதிகரிக்கும்போது மாறிவிடும் என்றும், பொருளாதாரம் மேம்பட்டால் மாறிவிடும் என்றும் சிலர் வாதிட்டார்கள். நாடார்கள் வணிகத்தைக் கைக்கொண்டு தம்மீது செலுத்தப்பட்ட அடக்குமுறையை வென்றது, ஒருவரின் சொந்த வாழ்வில் அவரது தந்தை புறவாசலில் வைத்தே தலித்துகளை அனுப்பி வந்தவர் ஒருவர் கல்விபெற்று உடன்பணியாற்றும் ஆசிரியர் ஆனவுடன் வீட்டுக்குள் அனுமதித்து சமமாக நடத்தியது போன்றவை சுட்டிக்காட்டப்பட்டன. அப்படியெல்லாம் மாறிவிடாது என்பதற்கான உதாரணங்களும் அவையிலிருந்தே கிடைத்தது. தலித்துகளின் பொருளாதார முன்னேற்றத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நிகழ்த்தப்படும் வன்முறைகள் சுட்டிக்காட்டப்பட்டன. சாதி இருக்கலாம்; ஆனால் ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்பதுபோன்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது.
அழகிய பெரியவன் பேசும்போது கல்வி கிடைக்கும்போது மாறிவிடும், பொருளாதாரம் மேம்படும்போது மாறிவிடும், அரசியல் அதிகாரம் கிட்டினால் மாறிவிடும் என்ற நம்பிக்கைகளெல்லாம் பொய்த்துப்போனதையும், அவ்வாறு ஆனதற்கு சாதிக்கு இங்குள்ள மத அங்கீகாரம் அடிப்படையான காரணங்களில் ஒன்று என்றும் சொன்னார். அருவமான பிசாசாக விரவியிருக்கும் சாதிய மனோபாவத்தை கருத்தியல்ரீதியாகத் தொடர்ந்து செயல்படுவதன்மூலமே விரட்ட முடியும் என்றும் அதற்கு இதுபோன்ற படங்கள் உதவும் என்றும் சொன்னார்.
குடும்பம் என்ற அமைப்பு இருக்கும்வரை சாதியை ஒழிக்கமுடியாது என்று சாதாரணமாகவே தொடங்கிய ஒருவர் நான் இயற்கை உணவுப் பழக்கமுடையவன், புலால் உண்ணும் உங்கள் உடல்களில் இருந்து எழும் வாடைகூட எனது நாசியைத் தொந்தரவு செய்கிறது என்கிறரீதியில் தொடர்ந்தபோது அவை சற்று நெளியத்தொடங்கியது. எனக்குத் தமிழ் அவ்வளவு சுத்தமாக வராது என்பதைப் பெருமிதத்தோடு அல்லாமல் சற்று குற்ற உணர்ச்சியோடு சொல்லித் தொடங்கியவர்கள் இருந்தார்கள். சாதியை ஒழிப்பதற்கு எல்லாரும் லவ் பண்ணுங்க என்று சொல்லும்போது, சிலரிடம் வெளிப்படும் பெண்ணை சமூக உடைமையாகப் பார்க்கும் ஒருவித கிளுகிளுப்பான ஆணாதிக்க மனோபாவம் இடித்துரைக்கப்பட்டது. காமிராவின் கண்கள் ஒரு ஆணின் உறுத்த பார்வையாகவே இன்னும் இருக்கிறது என்ற ஷபனா ஆஸ்மியின் கருத்து வழிமொழியப்பட்டது. இந்தப் படத்திலும்கூட ஜாபியாவின் பார்வையிலும், அவனது தந்தையின் பார்வையிலுமே கதை நகர்கிறது என்பதும் அந்த குடும்பத்துப் பெண்களின் துயரங்கள் அவ்வளவாகப் பதிவாகவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
சாதி மட்டுமன்றி நமது சமூகத்தில் ஒரு வளரிளம்பருவ இளைஞன் பொதுவெளியில் அவமானப்படுத்தப்படுவதன் வலியை இப்படம் காட்டுகிறதென்பதை ஒருவர் எடுத்துக்கூறினார். இப்போதும்கூட பத்தாம் வகுப்பிலோ, பன்னிரண்டாம் வகுப்பிலோ மதிப்பெண் அதிகம் எடுக்காத பிள்ளையைத் தெருவில்வைத்து அசிங்கப்படுத்துவதை நாம் பார்க்கமுடிகிறதென்றார். இவையன்றி இன்னும் பல அடுக்குகள் கொண்ட படம் இஃதென்பது வெளிப்பட்டது. நிகழ்ச்சி முடிந்தபின்னும் இருவர், மூவராக வெளியே நின்று விவாதத்தைத் தொடர்ந்தார்கள்.