சக்தி விபத்து நடந்த இடத்திலேயே இறந்துவிட்டான் என்பது தெரிந்தபிறகு கவலையெல்லாம் சுரேஸ் பிழைத்துக்கொண்டானா என்பதிலேயே இருந்தது. மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருந்தன. பனங்கூட்டத்திலிருந்து திண்டுக்கல்லுக்குப் பேருந்தில் வந்துகொண்டிருந்தபோது திருப்பூரில் இருக்கும் செல்வக்குமார்தான் முதலில் அலைபேசியில் கூப்பிட்டுச் சொன்னான்: “அண்ணே, கேள்விப்பட்டியா, சுரேசும், வெள்ளையன் மகன் சக்தியும் வண்டில போகும்போது பஸ்ஸுல அடிபட்டுட்டான்ய்ங்களாம்ல”. சுரேசுக்குக் காலில்தான் அடி என்று முதலில் சொன்னார்கள். பிறகு அவனும் இறந்துவிட்டான் என்றார்கள். கவலைக்கிடமாக இருப்பதாக ஒருவரும், பேசிவிட்டானாம் என்று இன்னொருவரும் விசாரித்தபோது கூறினர். ஷேர் ஆட்டோவில் ஊரை நெருங்குகையில் ஓட்டுனர் அதே இருக்கையில் பக்கத்தில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தவரிடம் “இன்னைக்கு அய்யங்குடியில நல்ல ஓட்டம். பூராம் அய்யங்குடி – பெரியாஸ்பத்திரி. ரெண்டு பயலுக ஆக்ஸிடெண்ட் ஆயிட்டான்ய்ங்களாம், ஒருத்தன் அவுட்டாம்” என்றார். பக்கத்தில் இருந்தவர் “ரெண்டு பேரும் காலியாம்ணே. பாலஜோதியில ஓடுறவரு அய்யங்குடிக்கார்தான. அவர் சொன்னாரு” என்றார்.
**************
தெருவுக்குள் நுழைந்தபோது வேறு சாதிக்காரர்களைத் தவிர நடமாட்டம் தெரியவில்லை. எல்லாரும் அரசு மருத்துவனையில் இருப்பார்கள். அப்போதுதான் ஏதோ திருமண வரவேற்புக்குப் போய்விட்டு வந்த ஆறுமுகம் டி.வியைப் போட்டு ‘நீயா நானா’ வைத்த சத்தம் கேட்டது. அவரது மனைவி ஒலியளவைக் குறைத்துவைத்துப் பார்க்கச் சொல்லிக்கொண்டிருந்தார். இரண்டு மூன்று நாட்களுக்கு சன்னமாக வைத்துதான் பார்ப்பார்கள்.
பூவாயம்மன் கோயில் தெருவின் பெயரில் நிதி ஒதுக்கப்பட்டு மேலத்தெருவில் வைக்கப்பட்டிருந்த சிறு மின்விசை நீர்த்தொட்டியின் குழாயைத் திருகிவிட்டு யாரோ குளிக்கும் சத்தம் கேட்டது. முரளிதான் மருத்துவமனையிலிருந்து திரும்பியிருந்தான். அருகில் சென்றபோது உதட்டைப் பிதுக்கி தலையை ஆட்டி ஓசை வெளிவராமல் ‘முடிஞ்சிருச்சு’ என்பதுபோல ஏதோ சொன்னான். அதற்குள் நான்கைந்து பேர் கூடிவிட்டார்கள். அவர்கள் வீட்டு மொட்டைமாடியில் இருந்து சூர்யாவும் எட்டிப்பார்த்தது. “அப்பயே ஒண்ணும் இல்ல மாமா. இவன்ய்ங்க சும்மா மூக்கில குழாயை மாட்டிவிட்டு வயிறு மட்டும் மேல போய்க்கிட்டு வந்துக்கிட்டு இருந்துச்சு. அப்புறம் ஏழு மணிக்கு இவனையும் மார்ச்சுவரிக்கு எடுத்துட்டுப் போய்ட்டான்ய்ங்க” என்றான்.
அவனுக்குக் கோரத்தை விவரிப்பதில்தான் ஆர்வம் இருந்தது. இருசக்கர வண்டியிலிருந்து தூக்கிவீசப்பட்டு மோதியதில் எப்படி சக்தியின் ஒருபக்க கன்னச்சதை, தலைமுடி, சட்டையெல்லாம் பேருந்திலேயே ஒட்டிக்கொண்டது, அவனைத் தூக்கியபோது உறைந்திருந்த ரத்தக்கட்டி எப்படி ‘பொளக்’கென்று சாலையில் சிந்தியது, பிணவறையில் கொலையுண்டு கிடந்த ஒருவனின் வாயில் நுழைந்த ஈ எப்படி அறுபட்ட கழுத்து வழி வெளியேறியது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான்.
******
“பாவம், பிள்ளைகளைலாம் அப்படித் தூக்கிக்கொஞ்சுவான். அவள் அக்கா அக்கானு கையைப் பிடுச்சுகிட்டு விடவேயில்லை. ‘தினமும் மூணு சட்டை மாத்துவானே. செண்ட் போடாம வெளிய கெளம்பமாட்டானே. இப்ப கண்ணாடிகூட அவனை எங்கே எங்கேனு கேட்குமே’னு அழுதுக்கிட்டு கெடக்கா”
“அவனுக்குப் பெறந்தநாளாம். கத்திரிக்காய் புடிங்கிக்கிட்டுர்ந்தவன இவந்தானாம்ல கூட்டிட்டுப்போனான்”
“இங்க கடலங்குளத்துக்கும், சடையநல்லூருக்கும் ஊடால இருக்க சந்தனமாரியம்மன் கோயில் வளைவுகிட்டயாம்ல. அந்த மேட்டுல சும்மாவே எதுக்க வர்ற வண்டி தெரியாது”
“உரப்பொடி வாங்கப் போனான்றாக. காசெடுக்கப் போனான்றாக. இங்கனக்குள்ள சந்தைகிட்டப் போயிருக்கலாம். எதுக்குத்தான் சடையநல்லூருக்குப் போனான்ய்ங்களோ?”
“ஞாயித்துக்கிழம வந்தாலே இந்த குடியிலதானத்தா கூடிர்றான்ய்ங்க”
யாரும் தூங்கப்போகிற மாதிரி தெரியவில்லை.
******
எதிர்ப்பட்ட கே.ஜே வை நிறுத்தி பாஸ்கரன் விசாரித்துக்கொண்டிருந்தார். “ஞாயித்துக்கெழமைண்ணே. இனிமே எங்க? நாளைக்குத்தான் கொடுப்பாங்க. அதிலயும் இன்னைக்கு ஒரே நாள்ல பதினேழு கேசு. இருக்க தலவலி பத்தாதுன்னு இவன்ய்ங்க வேற பஸ்ல கல்ல விட்டு கண்ணாடியை ஒடைச்சுப்புட்டான்ய்ங்க”
“அடங்கொ*** **டைகளா. யாரு?”
“பத்து பதினைஞ்சு பேரு கடலங்குளம் பார்ல இருந்தவன்ய்ங்க. எவன் ஒடச்சான்னு தெரியல. எஸ். ஐ அம்மா ஏதோ உணர்ச்சிவசப்பட்டு செஞ்சுட்டான்ய்ங்கன்னு விடுற மாதிரிதான் இருந்துச்சு. கதிரவன் மகன் லோகு முண்டிக்கிட்டு நாந்தான் ஒடச்சேன். யார் என்ன செய்வான்னு சலம்புன்னான். இப்ப மூணு பேத்த புடிச்சு வைச்சிருக்காங்க. பி.ஆர்.சி மேனேஜர் 13,000 ரூபாயைக் குடுத்திட்டுப் போயிருங்கன்னு அப்பயே சொன்னாரு. ரொம்ப ஆடுறான்ய்ங்கண்ணே.”
“மில்லுல கூட வேலைபார்த்தவர் காலையிலயே போன் பண்ணாப்ல. என்னண்ணே கடலங்குளம் டாஸ்மாக்ல உங்க ஊர்க்காரன்ய்ங்க ஆட்டம் ஓவராயிருக்குன்னு”
“நேத்து நன்றி தெரிவிக்க வந்தார்ல”
“ஓஹோ. அப்படிச் சொல்லுங்க. என்னத்தையோ காசைக்கொடுத்து எப்.ஐ.ஆர், ரிமாண்டுனு இல்லாமக் கூட்டிட்டுவந்துருங்கண்ணே. படிக்கிற பயலுக”
*******
மறுநாள் சுடுகாட்டிலும் ஒரே அலப்பரையாகத்தான் இருந்தது. ‘தண்ணி’ தாராளமாகப் புழங்கியது. வேனிலிருந்து நாங்கள்தான் இறக்குவோம் என்று பதினைந்து இருபது பையன்கள் முண்டியடித்து உள்ளே ஏறினார்கள். அழுதுகொண்டு சுடுகாட்டுக்கூரையைப் பிய்க்க முயன்றார்கள். ‘அவன்ய்ங்களே போய்ட்டான்ய்ங்க. ஒனக்கு செல்ஃபோன் எதுக்கு?’ என்று எவனது செல்போனையாவது பிடுங்கி சிதையில் போட்டுவிட்டால் சும்மா இருப்பார்கள் என்று தோன்றியது.
சுரேசின் அப்பாவிடம் உடன் வேலைசெய்பவர்களுக்கெல்லாம் தகவல் சொல்லிவிட்டதாக ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். தலையில் துண்டை போட்டு குத்தவைத்து உட்கார்ந்திருந்த சக்தியின் அப்பா ஒருவரிடம் ‘கல்யாணம் ஆகாத இளவட்டப் பயலுகளுக்கெல்லாம் பால் தொளிக்கிற வழக்கமில்லையாம். எல்லாரும் சொல்றாக’ என்று விளக்கிக்கொண்டிருந்தார்.
****
மனோகரன் தினத்தந்தி மாவட்டச்செய்திகளில் விஷயம் வந்திருப்பதைச் சொல்லி சத்தமாக வாசித்தார்:
‘அய்யங்குடி கிராமம் வெள்ளையன் மகன் சக்திவேல் (24). அதே கிராமத்தைச் சேர்ந்த குமரப்பன் மகன் சுரேஸ் (23). இவர்கள் இருவரும் கடலங்குளம் சடையநல்லூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். சுரேஸ் அரசுப் பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே 108 ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால் ஆத்திரமடைந்த பொதுமக்களில் சிலர் அந்த வழியாக வந்த நகரப் பேருந்துமீது கல்லெறிந்ததில் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து சடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்’
அதே பக்கத்தில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அய்யங்குடி, இப்ராகிம்சந்தை, சந்தோஷ் நகர், முதலைக்குளம் பகுதிகளில் அதற்கு முந்தைய தினம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் போயிருந்த செய்தியும் வெளிவந்திருந்தது.