ஒரே வளாகத்துக்குள் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் இருவர் வசித்தனர். ஒருவன் நலங்குன்றி நோஞ்சானாகிவிட, அதுதான் சமயம் என்று வீட்டைப் பிடுங்கிக்கொண்டு இவனை அடித்துத் துரத்திவிடப் பார்த்தான் வலுவாக இருந்தவன். யாரும் உள்ளே வரமுடியாதபடி வளாகத்தின் கதவை இழுத்துச் சாத்திவிட்டு இவனை அடிக்கத் தொடங்கினான். வேடிக்கை பார்க்க ஆட்கள் சூழ்ந்தனர். சிலர் நமுட்டுச் சிரிப்புடன் கமுக்கமாக சிரித்தனர். சிலர் ‘அல்லையில் போடு’, ‘டங்குவாரை அத்துரு’ என்று உற்சாகப்படுத்தினர். இன்னும் சிலரோ ‘ஒரே போடாய்ப்போட்டுவிடு’ என்று ஆயுதங்களை அள்ளிவீசினர். இளைத்த நேரத்தில் எளியவனை வலியவன் தாக்குதல் காணப்பொறாது பலர் கண்ணீர் சிந்தினர். கதறி அழுதனர். அடிப்பதை நிறுத்துமாறு கூக்குரல் எழுப்பினர். ரசித்து பார்த்துக்கொண்டிருந்த சிலர் எரிச்சலாகி இவர்கள் பக்கம் திரும்பி நைச்சியமாய் ‘நீங்கள் இங்கிருந்து கத்தி என்ன ஆகப்போகிறது?’ என்று தர்க்கம் பேசினர். இன்னும் சிலர் “‘அய்யோ, கொல்கிறானே’ என்று கத்துகிறீர்கள். அதற்குள் நீங்களாக அவ்வாறு கற்பிதம் செய்வது தவறு. அடிக்கிறான் அல்லது தாக்குகிறான் என்றுதான் சொல்லவேண்டும்” என்று தொழில் நுணுக்கம் பேசினர். இவர்களோ “கதவை சாத்திக்கொண்டால் நாங்கள் கத்துவது கேட்காமல் போகாது. அவன் வெளியே வராமலேயே இருந்துவிட முடியாது. எல்லாவற்றுக்கும் மேல் நாங்கள் மனிதர்கள். கொடுமை கண்டு பொறாது எங்களால் முடிந்ததையாவது செய்வோம்” என்றனர். அதுஅது அததுபாட்டுக்கு நடந்துகொண்டுதான் இருந்தது.