வழிகாட்டிக் கொள்கைகள்

பதினோராவது படிக்கும்போதும் எங்கள் பள்ளிக்கு ஒருநாள் ஆய்வாளர் வருவதாக இருந்தது. எங்கள் ஆசிரியர் ஜான் தன்ராஜ் வகுப்பறையில் கிழக்கு பார்த்து சும்மாயிருக்கும் கரும்பலகையில் ‘நமது வகுப்பின் வழிகாட்டிக் கொள்கையை அழகாகப் பெரிதாய் வண்ணச் சாக்கட்டிகள் கொண்டு எழுது’ என்று பணித்தார். அது என்ன கொள்கை என்று அன்றுதான் எங்களுக்குத் தெரியும். “உன்னதமே நோக்குக” என்ற சுருக்கமான வாசகம்தான் அது. விவிலிய வசனமாக இருக்கக்கூடும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலின் ஒரு வடிவம் என்று மொழிமாற்றிப் புரிந்துகொண்டேன். அதுபோல “நீதியும் அன்பும் நிலைத்திடவே” என்று பள்ளிக்கும் ஒரு குறிக்கோள் செய்தி இருந்தது. அவற்றின் அருமை அப்போது புரியவில்லை.

அதுபோல படித்த கல்லூரியின் இலச்சினையில் “வினையே உயிர்” என்ற செய்தி இருக்கும். எத்தனை இன்றியமையாத செய்தி! ஒருநாள் மாற்று ஆசிரியராக வகுப்பறையைக் கட்டுக்குள் வைக்க வந்த இளையர் ஒருவர் ‘ஒவ்வொருவராய் உங்கள் இலட்சியத்தைச் சொல்லுங்கள்’ என்று நேரம்போக்கிக் கொண்டிருந்தார். ‘வெந்ததைத் தின்று விதிவந்தால் சாதல்’ என்று சொல்லிவிட்டுப் பெருமிதத்தோடு அமர்ந்தேன். “ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!” என்று துடிக்கவேண்டிய வயது. போகட்டும். படித்துமுடித்து பல ஆண்டுகள் கடந்துபின்னும் பள்ளியும் கல்லூரியும் செயலின்மையை விரட்ட இதோ வழிகாட்டுகின்றன. வினையே உயிர்! உன்னதமே நோக்குக!