வழிகாட்டிக் கொள்கைகள்

பதினோராவது படிக்கும்போதும் எங்கள் பள்ளிக்கு ஒருநாள் ஆய்வாளர் வருவதாக இருந்தது. எங்கள் ஆசிரியர் ஜான் தன்ராஜ் வகுப்பறையில் கிழக்கு பார்த்து சும்மாயிருக்கும் கரும்பலகையில் ‘நமது வகுப்பின் வழிகாட்டிக் கொள்கையை அழகாகப் பெரிதாய் வண்ணச் சாக்கட்டிகள் கொண்டு எழுது’ என்று பணித்தார். அது என்ன கொள்கை என்று அன்றுதான் எங்களுக்குத் தெரியும். “உன்னதமே நோக்குக” என்ற சுருக்கமான வாசகம்தான் அது. விவிலிய வசனமாக இருக்கக்கூடும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலின் ஒரு வடிவம் என்று மொழிமாற்றிப் புரிந்துகொண்டேன். அதுபோல “நீதியும் அன்பும் நிலைத்திடவே” என்று பள்ளிக்கும் ஒரு குறிக்கோள் செய்தி இருந்தது. அவற்றின் அருமை அப்போது புரியவில்லை.

அதுபோல படித்த கல்லூரியின் இலச்சினையில் “வினையே உயிர்” என்ற செய்தி இருக்கும். எத்தனை இன்றியமையாத செய்தி! ஒருநாள் மாற்று ஆசிரியராக வகுப்பறையைக் கட்டுக்குள் வைக்க வந்த இளையர் ஒருவர் ‘ஒவ்வொருவராய் உங்கள் இலட்சியத்தைச் சொல்லுங்கள்’ என்று நேரம்போக்கிக் கொண்டிருந்தார். ‘வெந்ததைத் தின்று விதிவந்தால் சாதல்’ என்று சொல்லிவிட்டுப் பெருமிதத்தோடு அமர்ந்தேன். “ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!” என்று துடிக்கவேண்டிய வயது. போகட்டும். படித்துமுடித்து பல ஆண்டுகள் கடந்துபின்னும் பள்ளியும் கல்லூரியும் செயலின்மையை விரட்ட இதோ வழிகாட்டுகின்றன. வினையே உயிர்! உன்னதமே நோக்குக!

அதியுயர் மின்னழுத்த அதிர்ச்சி

நைஜீரியாவில் நடந்திருக்கிறது இது. நைஜீரிய மின்திறன் முதன்மை நிறுவனத்துக்காக 2003 முதல் 2007 வரை இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள மின்கருவிகள் உரிய இடங்களுக்கு எடுத்துச்சென்று நிறுவப்படாமல் அபாபா உள்ளிட்ட துறைமுகங்களில் அப்படி அப்படியே கிடந்திருக்கின்றன. இவ்வாறு கிட்டத்தட்ட 248 சரக்குப்பெட்டகங்கள் நிறைய சாதனங்கள் 11 ஆண்டுகள் வரை முடங்கி இருந்திருக்கின்றன. இவை 330கி.வோ வரை அதிஉயர் மின்னழுத்தத்தில் செயல்படக்கூடிய மின்னோட்ட / மின்னழுத்த மாற்றிகள் உள்ளிட்டவை. இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளார்கள்.

மின்துறை தனியார்மயமாக்கப்பட்டு இப்போது நைஜீரிய மின்திறன் முதன்மை நிறுவனம் செயல்பாட்டில் இல்லாத நிலையில் இவையெல்லாம் நைஜீரிய மின்கடத்துகை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உரிய இடங்களில் நிறுவப்படும் என்றிருக்கிறார் கூட்டரசின் மின்துறை அமைச்சர். சுங்கத்துறை பெரிய மனது பண்ணி சுணக்கக் கட்டணம் எல்லாம் எதுவும் இல்லாமல் 248 பெட்டகங்களில் உள்ள கருவிகளை ஒப்படைக்க சம்மதித்துள்ளதாம்.

பல கேள்விகள் எழுகின்றன. இவை குறிப்பிட்ட திட்டங்களுக்காக வாங்கப்பட்டவை. அத்திட்டங்களை செயல்படுத்தப் பொறுப்பானவர்களை யாருமே கேள்வி கேட்கவில்லையா? ஏற்றுமதி செய்தவர்களுக்கான முழுப்பணமும் பொருள் உரிய விதத்தில் நிறுவப்படும் முன்பே போய்ச்சேர்ந்துவிட்டதா? இந்தக் கருவிகள் இத்தனை ஆண்டுகள் இவ்விதம் கேட்பாரற்றுக் கிடந்த நிலையில் இனியும் வேலை செய்யும் நிலையில் இருக்குமா? இவை இயங்குவது பாதுகாப்பானதா? இன்னும் பல.

கடைசியாக ஒரு கேள்வி. இம்மாதிரியெல்லாம் நமது நாட்டில் நடப்பதே இல்லையல்லவா?!

ஒரு வளாகம், இரு தோழர்கள்; ஒரு சிறுநூல், சில நினைவுகள்

அது 2000-இல் என்று நினைக்கிறேன். திருப்பரங்குன்றம் காவல்நிலைய பேருந்து நிறுத்தம் அருகே தியாகராசர் பொறியியற் கல்லூரிக்குச் செல்லும் திருப்பத்தில் ஒரு பெரிய கட்-அவுட் வைத்து முந்தைய ஆண்டொன்றின் அதே நாளில் உயிர்த்தியாகம் செய்த தோழர்கள் செம்பு, சோமுவுக்கு நினைவஞ்சலி செலுத்தியிருந்தார்கள். அவர்கள் யார்? எதற்கு? எப்படி என்று எதுவும் தெரியவில்லை. கேட்டபோது அந்த நாட்களில் அது ஒரு ரவுடி காலேஜ் என்று மட்டும் சொன்னார்கள். நானும் அப்போது தினமலர்தான் உண்மையின் உரைகல் என்றும் துக்ளக்தான் நேர்மையான அரசியல் இதழ் என்றும் நம்பிக்கொண்டிருந்தவன். எனவே வேறு சில தருணங்களில் இந்தப்பெயர்களை வைத்து நண்பர்களைக் கிண்டல் செய்ததோடு சரி.

சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயம் போட்டிருந்த சிறுநூல் ஒன்றைப் பார்த்தேன். ‘ஒரு வளாகமும் சில தோழர்களும்’ என்பது தலைப்பு. ‘சோமு – செம்பு நினைவலைகள்’ என்று உபதலைப்பு. ப.கு.ராஜன் தொகுத்தது. விலை முப்பத்தைந்தே ரூபாய். தோழர்கள் சோமசுந்தரம், செம்புலிங்கம் பற்றித் தெரிந்துகொள்ள பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஒரு வாய்ப்பு.

தியாகராசர் பொறியியற் கல்லூரியில் 1967ல் சேர்ந்தவர் தொடங்கி 1988ல் முடித்த ஒருவர் வரை  இந்திய மாணவர் சங்க உறுப்பினர்களாக இருந்த சிலர் தங்களது நினைவுகளையும் அனுபவங்களையும் சுருக்கமாகப் பகிர்ந்துகொள்வதன்வழி நமக்கு ஒரு சித்திரம் கிடைக்கிறது. அது தி.பொ.கவில் இந்திய மாணவர் சங்க செயல்பாடுகளை மட்டுமின்றி அந்நாட்களில் கல்லூரியில் நிலவிய அரசியல் சூழலையும், சாதியச் சூழலையும், பகடிவதைத் தொந்தரவுகளையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

கல்லூரிக்குள் நிலவிய சாதியச்சூழலில் ஒரு கட்டத்தில்  இந்திய மாணவர் சங்கம் (SFI) தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான அமைப்பாக அறியப்படலாகிறது. அதன் தோழர்கள் ஆதிக்க சாதியினரால் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். இவர்கள் திருப்பி அடிப்பதே சரியென்று முடிவெடுக்கிறார்கள். இவ்வாறு தகராறு கனன்று வந்த நிலையில் 1981 மார்ச் 31ம் நாள் வெளியாட்களுடன் நள்ளிரவில் சாதியச் சக்திகள் புகுந்து நடத்திய தாக்குதலில் செம்புலிங்கம் கொல்லப்படுகிறார். கேள்விப்பட்டு விரைந்து வரும் சோமசுந்தரமும் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழக்கிறார். செம்பு ‘மாற்று சமூக’ப் பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டிருந்தார் என்ற குறிப்பு இருக்கிறது.

நாங்கள் படிக்கிற நாட்களில் வளாகத்தில் அரசியல் வாடையே அற்றுப்போயிருந்தது என்றுதான் சொல்லவேண்டும். தன்னாட்சி அந்தஸ்து பெற்ற நிர்வாகம். பெண்பிள்ளைகளுடன் பேசினால் ஏதாவதொரு ஆய்வகத்தேர்வில் தோல்வியடையச் செய்துவிடும் கலாச்சாரக் காவலர்களான சில பேராசிரியர்கள். வளாக நேர்முகத் தேர்வு மூலமாக மென்பொருள் நிறுவனத்தில் நுழைந்துவிடுவதொன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்ட மாணவர்கள். இளநிலை பயன்பாட்டு அறிவியல் மாணவர்கள் மட்டும் தருமபுரி பேருந்து எரிப்புச் சம்பவத்தின்போது சுவரொட்டி ஒட்டித் தண்டனைக்குள்ளானார்கள்.

இந்நூலில் கருத்துரைத்துள்ள கே.புனிதவேல், இன்றைக்கு மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைகளுக்கும்கூட போராட வருவதில்லை. அரசியலற்ற போக்கு கவலை தருவதாக உள்ளது. ஏனென்றால் கல்லூரிப் பருவத்தில் ஏற்படும் அரசியல் ஈடுபாடு, செயல்பாடு, தலைமைப் பண்புகள் பின்னர் சொந்த வாழ்க்கையிலும் பெரிதும் பயனளிப்பதாக உள்ளது என்பது எங்கள் பலரது அனுபவமாக இருக்கின்றது என்கிறார்.

இந்நூலில் ஒரு கவிதை உள்ளது. முதலாமாண்டு நினைவுநாளில் முத்துக்குமரன் பாடியது. பங்குனி இரவொன்றில் உதிர்ந்த இரு நட்சத்திரங்களை அலகில் சுமந்துகொண்டு இருள் ஜனசமுத்திர நடுவே பறக்கும் இளம்பறவைகளின் பிரகடனம் பற்றிய கவிதை. அதில் திருப்பரங்குன்ற மலை உட்கார்ந்தவாக்கில் பீடி குடித்துக்கொண்டே தூங்கும் இரவுக்காவலாளி போலத் தோற்றமளிக்கிறது.

ஒத்தவாடைத் தெருவும் உயர்பூரிம விழுத்தெருவும்

பெருநகருக்குள் அடங்கிவிட்ட ஒரு மேனாள் கிராமத்தில் ஒத்தவாடை தெரு என்ற பெயரைப் பார்த்தேன். ஒத்தவாடை என்றால் என்னவென்று தெரியவில்லை. நாளிதழ்களில் வரும் குற்றச்செய்திகளைப் படிக்கும்போது இந்தப் பக்கம் நிறைய ஊர்களில் ஒத்தவாடை தெரு இருப்பது தெரிந்தது. வடமாவட்ட கிராமத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர்தான் சொன்னார். மற்ற தெருக்களில் மேலவாடை, கீழவாடை என இருபுறமும் வீடுகள் இருக்கும். ஒத்தவாடை தெருவில் ஒரு பக்கம் பார்த்தே வீடுகள் இருக்கும். அவற்றுக்குப் பின்னால் கழனிதான் இருக்கும். அதாவது வாடை என்றால் வீடுகளின் வரிசை.

 பின்னர் அகரமுதலி, அகராதி பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன். தெருச்சிறகு, கட்டிடங்களின் வரிசை என்று வாடை என்ற சொல்லுக்குப் பொருளுண்டாம்.

நமது அமெரிக்கன் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா விளக்க வடிவு தந்திருந்த மதுரைக்காஞ்சி நூலை சில வாரங்களுக்கு முன்பு படித்தபோது 18வது வரியில் உயர்பூரிம விழுத்தெரு என்ற தொடர் வந்தது. அதற்கு உயர்ந்த வரிசை ஒழுங்குடைய சிறந்த தெரு என்று விளக்கம் தந்திருந்தார். அன்றிலிருந்து பூரிமம் என்ற சொல் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. இப்போது வாடை என்ற சொல்லுக்கும் அதே பொருள் உண்டென்று கண்டுகொண்டதில் மகிழ்ச்சி.

 ‘சே, பெருவாரியாக இன்னும் புழக்கத்தில் உள்ள ஒரு எளிய சொல்லுக்குப் பொருள் தெரியாமல் இருந்திருக்கிறோமே!’ என்று கொஞ்சம் வெட்கம்.

 தமிழுக்கும் அகராதி, நிகண்டு எல்லாம் பயன்படுத்துங்கள் என்று பெரியவர்கள் சொல்லத்தான் செய்கிறார்கள். நாம் எங்கே செய்கிறோம்?

மொழிபெயர்ப்பின் தொடுஎல்லை

கடந்த ஜூன் 14,15ல் திண்டுக்கல் நொச்சியோடைப்பட்டியில் எஸ்.ரா-வும் டிஸ்கவரி புக்பேலஸும் இணைந்து கதைகள் பேசுவோம் (2): நாவல் இலக்கிய முகாம் நடத்தியதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதில் மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பின் சிக்கல்கள் பற்றிய ரோமானியக் கவிதை ஒன்றிருப்பதாகக் குறிப்பிட்டு அதன் சாரத்தைச் சொன்னார்.

கொஞ்சம் தேடியதில் அது மரீன் சொரெஸ்கு எழுதிய ஒரு கவிதை என்றறிந்ததோடு அதன் இரு ஆங்கில வடிவங்களும் கிடைக்கப்பெற்றேன். எனது தமிழ், ஆங்கிலம், கவிநுகர்திறன் ஆகியவற்றின் போதாமைகளை நன்கு உணர்ந்திருந்தபோதும் அதைத் தமிழில் எழுதிப்பார்க்கத் தயங்கவில்லை.  கவிதையே மொழிபெயர்ப்பின் போதாமைகள் பற்றியது என்றுதானே சொன்னார்கள்! அந்தக் கவிதை இங்கே:

 மொழிபெயர்ப்பு

நான் தேர்வெழுதிக்கொண்டிருந்தேன்

வழக்கொழிந்த மொழியொன்றில்

என்னையே மொழிபெயர்க்கவேண்டியிருந்தது

ஒரு மனிதனிலிருந்து மந்தியாக

 

நான் சுற்றிவளைத்துத் தொடங்கினேன்

காட்டிலிருந்து ஒரு பனுவலை

முதலில் மொழிபெயர்த்து

 

என்றாலும், என்னையே நான் நெருங்கநெருங்க

மொழிபெயர்த்தல் மென்மேலும் கடினமாகியது

கொஞ்சம் முயற்சியெடுத்து

சரிமாற்றுச்சொற்களைக் கண்டுபிடித்தேன்

கால்விரல் நகங்களுக்கும்

பாத ரோமங்களுக்கும்

 

முழங்காலுக்கு வரும்போது

திக்கித்திணற ஆரம்பித்தேன்

இதயத்தில், எனது கை நடுங்கியது

கதிரவனில் கறைசெய்துவிட்டேன்

 

சரிசெய்ய முயற்சித்தேன்

நெஞ்சக முடி கொண்டு

கடைசியில் தோற்றுப்போனேன்

ஆன்மாவை அடைந்தபோது

– மரீன் சொரெஸ்கு

கோடைத்திருநாள் அழைப்பு

1942ம் ஆண்டில் நடந்த கள்ளழகர் சித்திரைத் திருவிழா அழைப்பிதழ் (கோடைத்திருநாள் என்னும் சைத்ரோத்ஸவ பத்திரிக்கை) ஒன்றின் ஒளிமேவல் கோப்பு நண்பன் ஒருவன் மூலம் காணக்கிடைத்தது. சற்று கடிதின் முயன்றால் வாசித்துவிடலாம்.

 இந்த அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டது மார்ச் ’42ல். அப்போது இரண்டாம் உலகப்போர் தொடங்கியிருந்தது. எனவே இரவு நேரங்களில் கொண்டாட்டம் எதுவும் திட்டமிடப்படவில்லை. எதிர்சேவை பிற்பகலில் நடந்திருக்கிறது. மூன்றுமாவடியில் 2.30க்குக் கிளம்பி தல்லாகுளத்துக்கு 3.30க்கு வந்துவிட முடிந்திருக்கிறது. மாலை 6.30க்குள்ளாக தல்லாகுளம் பெருமாள் கோயிலில் இராத்தங்கல் தொடங்கியிருக்கிறது. காலை 5மணிக்குப் பிறகுதான் குதிரை கிளம்பியிருக்கும். வைகை ஆற்றில் இறங்க முற்பகல் 11 மணி என்று நேரம் குறித்திருக்கிறார்கள். அதுபோலவே தசாவதாரத்தில் மோகனாவதாரத்தைத் தவிர பிறவற்றைப் பிற்பகலிலேயே முடித்துவிடுமாறு திட்டம் வகுத்திருக்கிறார்கள். இவ்வாறு ‘இராஜீகத்தாலும், தெய்வீகத்தாலும், மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் மாறுதல்களுக்கு தேவஸ்தானம் ஜவாப்தாரியல்ல’ என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள்.

 ‘இடையிலுள்ள இதர மண்டபங்களில் பெருமாள் 3 நிமிஷம் எழுந்தருளு’மளவுக்கு பெருமாளுக்கு அவகாசம் இருந்திருக்கிறது. சீர்பாதந்தாங்கிகளுக்குப் பொறுமை இருந்திருக்கிறது. மண்டபங்கள் குறைவாக இருந்திருக்கின்றன.

 தூங்காநகரின் இயல்பான இரவுவாழ்க்கையை இரண்டாம் உலகப்போர் பாதித்திருந்தாலும் கோடைத்திருவிழாவின் உற்சாகம் மட்டும் குன்றியிருக்காது என்று உறுதியாக ஊகிக்கலாம்.

1942 Invitation Chiththirai Festival