‘ஜேக்கே’ என்று சுருக்கமாகவும், அப்பா பெயரையும் சேர்த்து ‘ஜெகதீசன் கார்த்திகேயன்’ என்று நீளமாகவும் அழைக்கப்படும் கார்த்திக் அப்போது முக்கியமான முடிவொன்றை எடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான். கிளம்புமுன் இங்கேயே இரண்டுக்குப் போய்விட்டுப் போகலாமா அல்லது வீட்டுக்குப்போய் பார்த்துக்கொள்ளலாமா என்பது பற்றித்தான் முடிவெடுக்க வேண்டியிருந்தது.
வீச்சமெடுக்கும் காலுறையைக் கழற்றுவது, ஈரக்காலுடன் மறுபடியும் அணிவது அல்லது நடுவழியில் பேருந்தில் பதற்றம் நடுக்க வியர்த்திருப்பது எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான். “சரி, முதலில் சிறுநீர் கழித்துவிட்டு வந்துவிடலாம்” என்று ‘ஓய்வறை’ என்று எழுதப்பட்டிருந்த கழிப்பறைக்குள் நுழைந்தான். வீட்டுக்குப் போகுமுன் முகம்கழுவி, தலைமுடி, மீசையெல்லாம் சீவிமுடித்துச் சிங்காரித்துக் கிளம்புகிற தமிழ் ஆளான ராதாகிருஷ்ணன் உள்ளே வந்தார். அவருக்கு அது ஒப்பனை அறை.
வந்தவர் சும்மாயில்லாமல், பேசி ஓரிரு நாட்களாகிவிட்ட அக்கறையில் “என்னப்பா, எப்படிப் போயிக்கிட்ருக்கு?” என்றார். மூத்தவர்தான் என்றாலும் கொஞ்சம் இயல்பாக அவரிடம் பேசலாம். “தண்ணி வேற நெறையாக் குடிச்சனா, நல்லா பன்னீர் மாதிரி வெள்ளையாப் போகுது சார்” என்றான். மென்னகை அணிந்து தன்னை மேலும் அழகாக்கிக்கொண்டார்.
திரும்பிவந்து பார்த்தால் மும்பையிலுள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து சுடச்சுட அப்போதுதான் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. நாளை காலை நடுவண் அமைச்சரை சந்திக்க நிறுவனத்தின் செயல் தலைவருக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. பேசவேண்டிய விஷயங்கள் பற்றி ஒவ்வொரு அலகும் இரவுக்குள் குறிப்பு அனுப்பவேண்டும். “இவன்ய்ங்களுக்கு இதெல்லாம் ஆறரை மணிக்குத்தான் தெரியும்” என்று திட்டும்போதே மேலதிகாரி அலைபேசியுடன் இவனது அமர்விடத் தடுப்புக்கு ஓடிவந்தார்.
“நல்ல வேளை, கெளம்பிட்டேன்னு நெனைச்சேன். நல்லதா நாலு பாய்ண்ட் போட்டு சீக்கிரம் கொடுப்பா. நான் ஒரு தடவை பார்த்ததும் அனுப்பிச்சிரலாம்” என்று நயந்தார். நாமாக அப்படி எதையும் செய்துவிடமுடியாது. நாளை இதை ஏன் போடவில்லை, அதை ஏன் போடவில்லை என்று துணை அலகுகளிலிருந்து போட்டுக்கொடுப்பார்கள். அவர்களுக்கு அதே அஞ்சலை முன்னனுப்பி, நியதிப்படி அலைபேசியிலும் அழைத்து ஏழரை மணிக்குள் அனுப்பிவிடும்படி வேண்டுகோள் விடுத்தான். ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மொழி பேசுபவன். அவனவனது பண்பாட்டுச் சூழலுக்கிணங்க அவனவன் வண்ணமயமான வசவுகளை உதிர்த்திருப்பான்கள். அப்படியும் சொல்லமுடியாது. இந்தக்கால இளைஞர்களுக்கு “சாலா, ச்சூத்தியா”வை விட்டால் என்ன தெரிகிறது?
எப்படியும் பத்துமணி ஆகிவிடும். மேலதிகாரி தமிழ் ஆள்தான். எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டில்போய் தயிர் சாதம் சாப்பிடுகிறவர். நாம் அப்படியிருக்க முடியாது. ஒப்பந்தப்புள்ளி தயாரிக்கும் குழு தினமும் ஒன்பது மணி வரையாவது உட்கார்ந்து இருக்கும். ஏனெனில் அவர்களது தலைவர் உட்கார்ந்திருப்பார். ஏனெனில் அவரது குடும்பம் மும்பையில் இருக்கிறது. அந்தக் குழுவிடம் சொல்லிவிட்டால் நமக்கும் சேர்த்து பீஸ்ஸாவும், பழச்சாறும் தருவிப்பார்கள்.
பத்துமணிக்கு மேல் நேருப்ளேசிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரமேயுள்ள முனிர்க்காவுக்குப் போவது ஒரு பெருநாட்டின் தலைநகரத்தில் சிரமமாக இருக்கக்கூடாதுதான். ஆனால் பொதுப்போக்குவரத்தை நம்பி இருப்பவனுக்கு, குறிப்பாக அந்த தனியார் நகரப்பேருந்துகளை நம்பி இருப்பவனுக்கு பொருட்படுத்தத்தக்க சிரமந்தான்.
கார் வாங்கச்சொல்லி வீட்டில் ஒரே தொந்தரவு. “உங்களுக்குப் பரவாயில்லை. எங்க பிள்ளைகளையும் ஏன் சிரமப்படுத்திறீங்க?” என்று மாமனாரின் நண்பர் கேட்டார். நண்பரின் மாமனாரும்கூட அப்படித்தான் கேட்டார். இவர்களுக்கு எவனாக இருந்தாலும் முதலில் வீடு வாங்கவேண்டும். அப்புறம் கார் வாங்கவேண்டும். “அனுபவத்தில சொல்றேன். அன்னைக்கே சுதாரிச்சு அந்த எடத்தை எட்டு லட்ச ரூபாய்க்கு நான் முடிச்சிருந்தா இன்னைக்கு அதோட மதிப்பு பத்து கோடி” என்று அவர்கள் சொல்வதை நாம் சிரத்தையுடன் கவனிப்பதாக நடிக்கவேண்டும்.
அழுத்தம் வீட்டிலிருந்து மட்டும் இல்லை. வேலைசெய்யும் நிறுவனத்திலும் சம்பளத்தின் ஒரு பகுதியை சலுகையாக வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பணிநிலைப் பிரிவை எய்தியதும் கார் வாங்க இரண்டரை லட்சம் ரூபாய் தருவார்கள். வாங்கினால் உண்டு. இல்லாவிட்டால் இல்லை. எப்படி விடமுடியும்? கண்டது கடியதைப் படித்து பொதுப்போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தும் ஒரு சமூக அக்கறையாளனாகத் தன்னை நம்புபவனுக்கு தர்ம சங்கடமான நிலைதான். இப்படித்தான் ஏற்கனவே சம்பளத்தில் கணிசமான பகுதியை நிறுவனப் பங்குகளாக கொடுத்தார்கள். இத்தகைய சூதாட்டத்தில் ஈடுபடவே கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தவனை இழக்கவிருந்த தொகையின் மதிப்பு மசியவைத்தது.
காலையிலேயே எதிர்ப்பட்ட பக்கத்துவீட்டு பர்ன்வால் கார்வாங்கிக் கொள்ளலாமே என்று கேட்டார். மத்திய பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் துவக்கநிலை பொறியாளர் வேலை பார்க்கிறார். அவரது அலுவலகம் மூன்றே கி.மீ தூரத்தில் கட்வாரியா சராயில்தான் இருக்கிறது. பொடிநடையாகவே போய்விடலாம். ஆனால் காரில்தான் போகிறார். ‘தில்லியில் கார் இல்லாதவனை எவன் மதிப்பான்’ என்பவர். கொஞ்சம் சென்டிமென்டும் பார்க்கிறவர். இவனைப் பார்த்துவிட்டுப்போன ஒரு நாளில் ஏதோ நல்லது நடந்துவிட்டது என்று சந்தோசமாகச் சொன்னதிலிருந்து எப்போது எதிர்ப்பட்டாலும் அன்று அவருக்கு நல்லது நடக்கவேண்டுமே என்று பதற்றமாக இருக்கிறது. இன்றைய நாள் அவருக்காவது இனிய நாளா தெரியவில்லை.
**********
இரவுப்பணியில் பர்ன்வால் இருந்தார். இரவு பத்தே முக்காலாக இரண்டு நிமிடம் இருந்தது. மின் தொகுப்பில் இணைந்துள்ள பளு அளவை தேசிய அளவில் ஒழுங்குபடுத்தும் வேலை. இந்த மின்சாரத்தை சேமித்துவைத்து பிறகு பயன்படுத்துகிற தொழில்நுட்பம் எல்லாம் வீட்டளவுக்குத்தான் வந்திருக்கிறது. இன்னும் நாட்டளவுக்கு அதிகம் வரவில்லை. உற்பத்திக்குத் தகுந்த நுகர்வு இல்லையென்றால் வேறு பக்கம் திருப்பிவிடவேண்டும். இல்லையென்றால் உற்பத்தியை நிறுத்திவிடவேண்டும். இங்கு தேவை இல்லாமல் இல்லை. எல்லாருக்கும் கொண்டுபோய் சேர்க்கிற உள்கட்டமைப்புதான் இல்லை.
கிழக்கு மண்டலத்திலிருந்து அபயக்குரல் ஒலித்தது.
“இந்த அஞ்சு லைனும் ஓவர்லோடா இருக்கு. ஏதாவது ஒண்ணு ட்ரிப் ஆனாலும் பெரிய சிக்கலாகிரும்”
பர்னவால் “அச்சா, அச்சா” என்றார்.
“அதுனால நீங்க மேற்கு மண்டலத்துல சொல்லி – கண்டிப்பா அவங்ககிட்ட சொல்லி – கொஞ்சம் உடனடியா அவங்களோட உற்பத்தியைக் குறைக்கச் சொல்லுங்க”
“அச்சா, அச்சா”
“இல்லைன்னா, முடிஞ்சா நம்ம வடக்கு மண்டலம் வழியா பவரை பாஸ் ஆன் பண்ணச் சொல்லுங்க”
“வடக்கு வழியா முடியாது. குவாலியர் – ஆக்ரா லைன் ஒண்ணு அவுட்டு”
“ஆங். அப்ப முடியாதுன்னா மேற்கு மண்டலம் உற்பத்தியை நிறுத்தணும்”
“அச்சா, சரி, சரி”
“சரிதானே?”
“ஓகே. ஓகே”
“அப்படி இல்லைன்னா இன்னைக்கு கண்டிப்பா சிஸ்டம் போயிரும்”
“சரி சார். செய்றேன்.”
“இதை சீரியஸா எடுத்துக்குங்க”
வாங்கிய மின்சாரத்துக்கு காசு கொடுக்க முடியாமல் திணறும் மாநிலங்கள் ஊரகப் பகுதிகளில் மின்சாரத்தை அணைத்துப் போட்டுவிட்டு சொன்ன அளவு மின்சாரத்தை எடுத்துக்கொள்ளாமல் திணற அடிக்கிறார்கள். தேர்தல் நேரம் அது இதுவென்று சொன்ன அளவைவிட அதிகமாக இழுத்து சில மாநிலங்கள் திணறடிக்கின்றன. உற்பத்தி செய்வது ஓரிடம். நுகர்வு குவிந்திருப்பது வேறிடம். சமநிலை இல்லாவிட்டால் நாடே இருளில் மூழ்கிவிடும். இடையில் ஓரிரு இணைப்புகளை வைத்து ஒப்பேற்றுகிறார்கள். கோடிகோடியாய் கொள்ளை அடிக்கிறவர்கள் எல்லாம் சேர்ந்து செய்கிற கூட்டுச்சதிகளுக்கு எங்களை மாதிரி ஆட்களைப் பாடாய்ப்படுத்துகிறார்கள் என்று நொந்துகொண்டார்.
மேற்கு மண்டலத்தில் பணியில் இருப்பவர் மூத்த அதிகாரி. பர்னவால் பெரிய அளவில் வலியுறுத்தமுடியாது. அவர் இந்த அலுவலகம் வந்து பொதுமேலாளராக, செயல் இயக்குனராக உட்காரும் நாளில் இவருக்கு சிக்கலாகிவிடும்.
சரியாக முக்கால் மணிநேரம் கழித்து மறுபடியும் கிழக்கு மண்டலத்தில் பணியில் இருப்பவர்.
“ஜனாப், மேற்கே இருந்து ஒரு வித்தியாசமும் இல்லை. பேசினீங்களா..”
“மேற்கு மண்டலம் ஒரு..”
“நீங்க கொஞ்சம் அவங்க என்ன பண்றாங்கன்னு விசாரிங்க”
“சார். அவங்ககிட்ட…”
“அப்படியெல்லாம் விட்டா நடக்காது சார். அவங்களுக்குத் திரும்பத் திரும்ப மெசேஜ் கொடுங்க”
“சரி, சரி, நான் பேசுறேன்”
“இல்லை, இல்லை. பேசினா ஒண்ணும் நடக்காது. திரும்பத் திரும்ப மெசேஜ் கொடுங்க”
“கொடுக்கிறேன், கொடுக்கிறேன்”
“எங்கெல்லாம் குறைவா இழுக்கிறாங்களோ அங்கெல்லாம் குறைக்கச் சொல்லுங்க”
“சரி, சரி”
தயங்கித் தயங்கி பர்ன்வால் மேற்கு மண்டலத்தில் இருப்பவரைக் கூப்பிட்டார்.
“சார். வந்து உங்களோட இந்த அண்டர்டிராயல் கொஞ்சம் குறைக்கமுடியுமா, சார்”
“ம்ம்”
“ஏன்னா சார். குவாலியர் ஆக்ரா ஒண்ணு ஷட்-டவுன்ல இருக்கு. அதுல ஓவர்லோடு ஆகுது. இந்த கிழக்கு மண்டலத்துல எல்லா லைனும் ஓவர்லோடுல இருக்கு சார்”
“உங்க ஃப்ரீக்வென்சியும்தான் கம்மியா இருக்கு”
“அது ஒரு பக்கம் சார். கொஞ்சம் சிஸ்டம் கன்ஸ்ட்ரைன்ட் ..என்ன பண்றது சார் இந்த கிழக்கு லைன் எல்லாம்..”
“வடக்கை ஓவர்ட்ராயல் பண்ணவேணாம்னு சொல்லவேண்டியதுதான”
“அவருக்கும் மெசேஜ் கொடுத்துருக்கேன் சார். நீங்களும் கொஞ்சம் முடியுமான்னு பாருங்க சார்”
அவர் ஒன்றும் செய்யவில்லை. சொன்னமாதிரியே இரவு வடக்கு மண்டலம் முழுமையும் பிடுங்கிக்கொண்டது. மறுநாள் தொகுப்பில் முழுமையாக இணைக்கப்படாத தெற்கு மண்டலம் தவிர்த்து நாடே மின்சாரம் இன்றித் ‘தவித்தது’ (என்று தில்லியில் இருப்பவர்கள் சொன்னார்கள்). வல்லரசுக் கனவுகளில் மிதந்தவர்கள் மின்சாரம் தாக்கியதுபோல குதித்தார்கள். குய்யோ முறையோ என்று கொந்தளித்தார்கள்.
பர்னவால் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
********************************
ஒன்பதுமணி வரை துணை அலகுகளில் இருந்து பதில் வராமல் போகவே கார்த்திக் ஒவ்வொருவராகக் கூப்பிட ஆரம்பித்தான். துணை அலகு ஒன்றில் வேலையில் இருப்பவன் நேரடியாக தலைமை அலுவலகத்தில் இருந்த தமது ‘நம்பத் தகுந்த வட்டாரத்தில்’ பேசியிருக்கிறான். உண்மையில் நாளை மறுநாள்தான் செயல் தலைவர் அமைச்சரைச் சந்திக்கப்போகிறாராம். எங்கே தாமதம் செய்துவிடுவார்கள் என்றுதான் மறுநாள் என்று பொய்சொல்லி இரவோடு இரவாக நம்மிடம் கேட்டிருக்கிறார்கள். இந்த தகவலைக் கார்த்திக் ஓடோடி மேலதிகாரியிடம் சொன்னான். அவர் தலைமை அலுவலகத்தில் உள்ள ‘தமது நம்பத்தகுந்த வட்டாரத்தை’ விசாரித்து உறுதிப்படுத்திக்கொண்டார். ‘சரி, கிளம்புவோம். நாளைக் காலை முதல் வேலையாக அனுப்பிக்கொள்ளலாம். இந்த விஷயத்தை நீ மற்ற துணை அலகுகளில் சொல்லவேண்டாம். அவர்கள் இரவே அனுப்பட்டும்.’ என்றார்.
மறுநாள் உற்சாகமாக இருந்தார். வலுவான ‘பாய்ண்ட்’ ஒன்று கிடைத்துவிட்டது. வேறெதுவும் விஷயமே தேவையில்லை. மின் தொகுப்பு மொத்தமாக செயலிழந்த இந்த ஒன்றே போதும். இப்படி எல்லாம் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அறுபதாயிரம் கோடி முதலீடு வேண்டும். அதில் எங்களுக்கு சில ஒப்பந்தங்கள் வேண்டும் என்று சொன்னாலே போதும்.
*************************
பர்ன்வால் பெரிதாகக் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. அவருக்கு விசாரணை அறிக்கைகள் மீது ஏதோ நம்பிக்கை இருந்தது. “மின்சாரம் இல்லாம ரெண்டு நாளா ரொம்ப சிரமாப் போச்சுல்ல” என்று கார்த்திக் பொதுவாகச் சொன்னபோது “எங்க சொந்த ஊரு உ.பி- யில ஆசம்கர் மாவட்டத்துல. ஒருநாளைக்கு ஆறு மணிநேரம் மின்சாரம் கிடைச்சா அதுவே பெருசு. இன்னைக்குவரைக்கு அப்படித்தான். இந்தியாவில முப்பது கோடிப் பேருக்கு இன்னும் மின்சாரமே போய்ச்சேரல” என்று சற்று எரிச்சலாகச் சொன்னார். “அதுதானே, ஏன் இந்த ஆங்கில ஊடகங்களும் மேலை நாட்டு ஊடகங்களும் இப்படிக் குதித்தன” என்று கார்த்திக் ஆச்சரியப்பட்டான்.
பேச்சு மறுபடியும் காருக்கு வந்தது. இவன் ‘பொதுப்போக்குவரத்தா? சொந்தக் காரா?’ குழப்பத்தை சொன்னான். “எதுக்கு கவலைப் படுற? கார் பூலிங் பண்ணிக்க. கூட வேலை செய்ற யாரையாவது கூட்டிக்கிட்டுச் சேர்ந்துபோங்க’ என்றார். சரிதான். கொஞ்சம் மனச்சான்றுக்கு மருந்திட்ட மாதிரி இருக்கும். ஃபெர்னாண்டோ சோரன்டினோவின் கதையில் வரும், கதைசொல்லியை சதா தலையில் குடையால் அடித்துக்கொண்டேயிருக்கும் ஒருவனை சற்று அமைதிப்படுத்தியதைப் போலிருந்தது.