அறிக! நீ ஒரு ___________.

உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்கிறார்கள். தன்னைத் தானும் அறிந்துகொண்டு ஊருக்கும் சொல்லிவிட்டால் தலைவன் ஆகிவிடலாம் என்கிறார்கள். தெய்வம் நீயென்றுணர் என்று ஒரு ஆள் பட்டையைக் கட்டி ஏத்திவிடுகிறார். இன்னும் ‘நான் யாரு எனக்கேதும் தெரியலியே’ என்று புலம்பக்கூடிய ஆளாகவே இருக்கிறேன். ‘உன்னை நான் அறிவேன்; என்னை அன்றி யாரறிவார்’ என்று உரிமை கொண்டாடத்தக்க ஆட்கள் இல்லாத நிலையில் அடிக்கடி எனது ஆளுமைக்கூறுகளை அறிந்துகொள்ள ஏதாவது பரிசோதனைகள் இலவசமாகக் கிடைக்கிறதா எனப் பார்ப்பது வழக்கம். (உண்மையான நோக்கம் மனநிலை இன்னும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறதா என்று பார்ப்பது). அப்படித் தேடும்போது சிக்கியதுதான் ஆளுமையின் ஐம்பெருங்களங்களைச் சோதித்தறிகிற இந்த ஐபிஐபி-என்ஈஓ 5- காரணி தேர்வு. 

300 கூற்றுக்கள் அடங்கிய நீண்ட வடிவமும் இருக்கிறது. 120 கூற்றுக்களே உள்ள சுருக்கிய வடிவமும் இருக்கிறது. உங்களுக்கு இருக்கும் நேரத்தைப் பொறுத்து ஏதாவதொன்றைத் தெரிவு செய்யலாம். அதிகபட்சம் முக்கால் மணிநேரம் ஆகும். கூற்றுக்கள் இப்படி இருக்கும்: “தேசியகீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்பது எனக்கு விருப்பமானது”. இந்தக் கூற்று ‘மிகவும் துல்லியமற்றது’, ‘ஓரளவு துல்லியமற்றது’, ‘துல்லியமென்றொ, அல்லவென்றோ சொல்லவியலாது’, ‘ஓரளவு துல்லியமானது’, ‘மிகவும் துல்லியமானது’ என்று உங்கள் தெரிவைச் சொடுக்கவேண்டும். சோதனையின் முடிவில் 5 பெரும் ஆளுமைப் பரிமாணங்களில், அவற்றின் 30 துணைக்கூறுபாடுகளில் நீங்கள் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் எப்படிப்பட்டவர் என்பது பற்றிய அறிக்கை கிடைக்கும்.

இதை உளநோய் இருக்கிறதா என்று கண்டறிகிற சோதனையாக எல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தெளிவாக துவக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. கவனிக்கவேண்டும், இதில் சொல்லப்படுவதெல்லாம் உங்கள் பாலினம், வயது உள்ளவர்களோடு ஒப்பிட்டால், ஒரு குறிப்பிட்ட பண்பு உங்களிடம் ஒப்பீட்டளவில் குறைவாக/ சராசரியாக/ அதிகமாக இருக்கிறதா என்பதுதான். எந்த ஒரு பண்பும் குறைவாக அல்லது அதிகமாக இருப்பதுதான் சரி என்று அறுதியிட்டெல்லாம் கூறிவிடமுடியாதாம். பல செயல்களுக்கு அந்த ஒரு குறிப்பிட்ட ஆளுமைக்கூறு தொடர்பேயற்றதாக இருக்கலாம். சில செயல்களுக்கு அதிகம் தேவைப்படலாம். சிலவற்றுக்குக் குறைவாக.

அந்த ஐம்பெருங்களங்களும், அவற்றின் 30 துணைக்களங்களுந்தான் என்னென்ன:

1)   புறநோக்குத்தன்மை (Extraversion):

                     i.        எளிதில் நட்புகொள்ளும் தன்மை (Friendliness)

                    ii.        கூட்டம்நாடும் தன்மை (Gregariousness)

                  iii.        உறுதிபட நிற்கும் தன்மை (Assertiveness)

                   iv.        செயல்பாட்டு அளவு (Activity level)

                    v.        மனவெழுச்சி நாடும் தன்மை (Excitement seeking)

                   vi.        மகிழ்வுபொங்கும் தன்மை (Cheerfulness)

2)   ஏற்றுக்கொள்ளத்தக்கவராகத் திகழ்தல் (Agreeableness):

                     i.        நம்பகம் (Trust)

                    ii.        நன்னெறி (Morality)

                  iii.        பொதுநல நோக்கு (Altruism)

                   iv.        ஒத்துழைத்தல் (Cooperation)

                    v.        தன்னடக்கம் (Modesty)

                   vi.        இரக்கம் (Sympathy)

3)   நெஞ்சங்கோடாமை / விவேகம் (Conscientiousness / Prudence):

                     i.        செயல்முடிக்குந்திறன் (Self – efficacy)

                    ii.        ஒழுங்குமுறை நாடுதல் (Orderliness)

                  iii.        கடமையுணர்ச்சி (Dutifulness)

                   iv.        சாதிக்கும் முனைப்பு (Achievement – striving)

                    v.        சுய கட்டுப்பாடு (Self – discipline)

                   vi.        எச்சரிக்கையுணர்வு(Cautiousness)

4)   எதிர்மறை உளப்பாங்கு (Neuroticism):

                     i.        பதற்றம் (Anxiety)

                    ii.        சினம் (Anger)

                  iii.        உளச்சோர்வு (Depression)

                   iv.        தன்னுணர்வு (Self-consciousness)

                    v.        மட்டுப்படுத்த இயலாமை (Immoderation)

                   vi.        பாதிப்புக்குள்ளாகும் தன்மை (Vulnerability)

5)   திறந்தமனத்தோடு அனுபவம்நாடல் (Openness to Experience):

                     i.        கற்பனை வளம் (Imagination)

                    ii.        கலையார்வம் (Artistic interests)

                  iii.        உணர்ச்சிவயப்படல் (Emotionality)

                   iv.        சாகசம் நாடல் (Adventurousness)

                    v.        மதிநுட்பம் (Intellect)

                   vi.        தாராளவாதம் (Liberalism)

துறைசார்ந்த பயிற்சி உடையவன் அல்லேன் என்பதால் கூறுபாடு, பரிமாணம், களம், நாடல், தன்மை என்றெல்லாம் குண்டக்க மண்டக்க வார்த்தைகளை இறைத்திருக்கிறேன். சற்று எச்சரிக்கையோடு அணுகவும்.

எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான் என்று தோன்றுவதிலிருந்தே இந்த சோதனையின் நம்பகத்தன்மை உறுதியாகிறது. சில தெளிவான சொற்களில், சுருக்கமான விளக்கங்களோடு என்னைப் பற்றிய அறிதலை விரிவாக்கியிருக்கிறது. இப்போது நான் கவனம் செலுத்தவேண்டிய சில கூறுகள் எவ்வெவை என்று சற்று துலக்கமாகிறது.

ஜான் ஏ. ஜான்சனுக்கு நன்றி.