வேலூர் சீனிவாசனார்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘சத்யமேவ ஜெயதே (அமீர்கான்)’ புகழ் வேலூர் சீனிவாசன் பேசுகிறார் என்றார்கள். எல்லாத் துறையிலும் கால்பரப்பி நிற்கும் ஒரு பெருநிறுவனம் ஏற்பாடு செய்த விழா என்பதால் கொஞ்சம் சந்தேகத்தோடுதான் போனேன். உள்ளே நுழைந்தபோது யுனிசெஃப் ஆவணப்படுத்திய இந்த குறும்படத்தைக்  காட்டி வேலூரில் எப்படி ‘வீண்பொருள் இல்லா மேலாண்மை’யை வெற்றிகரமாக செயல்படுத்தினார்கள் என்பதை விளக்கிக்கொண்டிருந்தார். பிறகு பவர்பாயிண்ட் காட்சியின் துணைகொண்டு பலவற்றை ஆங்கிலத்தில் விளக்கினார். விஷயமும், வேகமும் இருக்கிற ஒரு உற்சாகம் கொப்பளிக்கும் பேச்சுக்கு இலக்கண சுத்தமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது புரிந்தது.

முழுக்க முழுக்க செயல்பாட்டின்புறத்துப் பிறந்த பட்டறிவு கொண்டு பேசினாலும் அளவைகளும், புள்ளிவிவரங்களுமாய் அறிவியல்ரீதியான விளக்கங்கள் தந்தார். மட்குவது எது மட்காதது எது என்று பட்டியல். ஒவ்வொன்றும் எத்தனை விழுக்காடு என்றொரு பகுப்பாய்வு. எது எவ்வளவு நேரத்தில் சிதையத் தொடங்கும் என்று ஒரு கணக்கு. எந்த ஒரு கட்டுமானமும் எவ்வளவு நீள, அகல, உயரம் இருக்கவேண்டும் என்று ஒரு விளக்கம்.

மேலே குறிப்பிட்டிருந்த ஆவணப்படத்துக்கு ‘Garbage to Gold’ என்று எப்படிப் பெயர் வைத்தார்கள் என்பதை சுவைபட விளக்கினார். பல பெயர்களைப் பரிசீலித்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது அவ்வழியாக இவர்கள் அமைப்பில் பணிபுரியும் ஒரு பெண் கடந்துசென்றிருக்கிறார். அவரது காதுமடலெல்லாம் தங்கம். ஏனென்று கேட்டிருக்கிறார்கள். என் காது ஒரு பாதுகாப்புப் பெட்டகம் மாதிரி. என் கணவர் குடிகாரர் என்பதால் குப்பைசேகரித்து சிறுகச் சிறுக சம்பாதித்த பணத்தை நகையாக்கிக் காதில் மாட்டிவிட்டால் பத்திரமாக இருக்கும். தேவைப்படும்போது அடகு வைத்துக்கொள்வேன். பணம் இருக்கும்போது மீட்டுக்கொள்வேன். வேறெங்காவது வைத்தால் அவர் எடுத்துவிடுவார் என்றாராம். அதிலிருந்தே அப்படியொரு தலைப்பு இவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. 250 குடும்பங்களுள்ள ஒரு பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள இதுமாதிரி நான்கு குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெறும்.

கண்ணைக் கூட இறந்த ஆறுமணி நேரத்துக்குள் எடுத்தால் அடுத்த ஆளுக்குப் பயன்படுத்தமுடியும். அதுபோலத்தான் நமக்கு பயன்பாடு இல்லையென்பதாலேயே ஒரு பொருள் வீணானதாகிவிடாது. அது மக்க / அழுகத் தொடங்க நேரமாகும். அதற்குள் அதை சேகரித்துவிட்டால் வேறெதற்காவது பயன்படும். எடுத்துக்காட்டாக காய்கனிக்கழிவு கால்நடைத் தீவனமாகவும், உறித்த எலுமிச்சை / ஆரஞ்சுத் தோல் சிகைக்காயுடன் சேர்த்து அரைத்தால் பாத்திரம் விளக்கவும் பயன்படும். நாற்றமும் இருக்காது என்பதால் அகற்றுவது இழிவான வேலையாகவும் இருக்காது. எனவே வீட்டிலேயே குப்பைக்கூடை நிரம்பும்வரை வைத்திருந்து பிறகு தொட்டியில் விட்டெறிந்து அதை அவர்கள் இரண்டு நாள் கழித்து எடுத்து எங்காவது கொண்டுபோய் கொட்டுவதற்குப் பதில் உடனுக்குடன் சேகரித்தால் குப்பையில் கொட்டிக்கிடக்கும் செல்வத்தை பயனுள்ள வகையில் நாம் அடையலாம் என்பதை விளக்கினார்.

அம்பு தைக்கிற மாதிரி கருத்து சொல்கிறார். விளக்கேற்றிய பிறகு குப்பை சேகரிப்பது சவாலாக உள்ளது. வீட்டிலுள்ள லெட்சுமி வெளியேறிவிடுவாள் என்று குப்பையைப் போட மறுக்கிறார்கள். ஆனால் பகலில் அதே குப்பையை லெட்சுமி என்றுணராமல் தொட்டியைச் சுற்றி எறிகிறார்கள் என்றார். சொல்லும்போதே திரையில் ஒரு நிழற்படம் காண்பித்தார். அதில் குப்பையில் லெட்சுமி படம் போட்ட நாட்காட்டி அட்டை கிடக்கிறது. பிரிக்கப்படாத குப்பை கொட்டப்பட்டிருப்பதைக் காட்டி திருப்பதி உண்டியலைத் திறக்கும்போதுகூட இப்படித்தான் பலவகை ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், நகைகள், தாலிச்சரடு, கிரீடம் என்று கிடக்கும். பிரித்து அடுக்கினால் அத்தனையும் பணம் என்று சொல்லிவிட்டு அதுபோல பிரிக்கப்பட்ட குப்பைகள் உள்ள படத்தை அடுத்துக்காட்டுகிறார்.

மட்குபவை உரமாகின்றன. மட்காதவை மறுசுழற்சிக்குப் போகின்றன. எந்த ஒரு பொருளும் வீணாவதில்லை. அவருக்காக மண்புழுக்களும், மாடுகளும், வாத்துகளும் வேலைபார்க்கின்றன. வானுக்குக் காக்கை, நிலத்துக்குப் பன்றி என்றால் நீரைத் துப்புரவு செய்ய வாத்துக்கள். மீன் சந்தைக் கழிவுகள் அவற்றுக்கு உணவு. காய்கறிச் சந்தையில் எஞ்சியவை உடனுக்குடன் எடுத்துவரப்பட்டு கொட்டப்படுகின்றன. காத்திருந்த மாடுகள் ‘காலை முகூர்த்தத்தில் கல்யாணம் முடிய பந்திக்குப் பாயும்  உறவினர்கள்’போல விரைகின்றன. ஓரிரு மணிக்குள் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுகின்றன. பிறகு பாலும், சாணமும், கோமியமும் தருகின்றன. இவற்றிலிருந்து பலவகைப் பொருட்கள் கிடைக்கின்றன. சுழற்சி உறுதிசெய்யப்படுவதால் அப்புறப்படுத்தல் என்பது இல்லை.

காட்டுக்குள் கால்நடைகள் இறந்து அழுகிக் கிடக்கின்றன. அவற்றின் வயிற்றைப் புரட்டிப் பார்த்தால் உள்ளே அடுக்கடுக்காக பாலித்தீன் பைகள். வாசம் பார்த்து உண்ணும் அவை காய் வைத்திருந்த பையிலும் அதே வாடை அடிப்பதால் தின்றுவிட்டு மடிகின்றன. பிளாஸ்டிக் ஆர்க்டிக் வரை பரவியிருக்கிறது. ஆச்சி வைத்திருந்த சுருக்குப்பை போல அல்லது பெரிய பூசாரி திருநீறு மடித்துவைத்திருந்த பைபோல ஒரு சிறிய பை ஒன்றைக் காண்பித்தார். அதில் உள்ள கொக்கியைப் பயன்படுத்தி கால்சட்டையில் அடையாள அட்டையைத் தொங்கவிடுவதுபோல மாட்டிக்கொள்ளலாம். தேவைப்படும்போது உள்ளே இருப்பதை இழுத்துவிரித்தால் பெரிய துணிப்பை ஒன்று கிடைக்கிறது. பயன்படுத்திவிட்டு மடித்துச் சுருக்கிவைத்துவிடலாம். இதன்மூலம் வாழ்நாளில் ஒருவர் 22,000 பாலித்தீன் பைகளைத் தவிர்க்கமுடியும். திசுத் தாள் கலாச்சாரத்தில் மூழ்காமல் கைக்குட்டைப் பண்பாட்டைக் கடைப்பிடியுங்கள் என்றார். அவர் கால்சட்டைப்பையில் இரு புறமும் கைக்குட்டைகள் இருந்தன. உணவருந்திவிட்டு கையையும், வாயையும் துடைக்க வலதுபுறம் ஒன்று. மூக்கு சிந்திவிட்டுத் துடைக்க, மூடிக்கொண்டு தும்ம என்று இடதுபுறம் ஒன்று.

அமெரிக்காவில் குப்பை அகற்றுகிறேன் என்ற பெயரில் நகருக்கு வெளியே 350 – 500 கிமீ தொலைவில் கொண்டுபோய் 45 ஹெக்டேர் பரப்புள்ள ‘அறிவியல்பூர்வமான’ கிடங்கில் கொட்டுகிறார்கள். இதுமாதிரி நிலத்துக்குக் கீழே 80 அடியும், மேலே 100 அடியுமாக நிரம்பிக்கிடக்கும் 1800 குப்பை மலைகள் இருக்கின்றனவாம். அதைப் போய் பார்த்துவந்து நம்மாட்கள் காப்பி அடிக்கிறார்கள். நியூயார்க் குப்பை கொட்டப்படும் இடத்துக்குமேலும் நம்மூர் போலவே பறவைகள் வட்டமிடுகின்றன. ஒரே வித்தியாசம் நம்மூரில் 5 ட்ரக்குகளில் எடுத்துச்செல்லப்படும் குப்பையை அவர்கள் ஒரே கண்டெய்னரில் எடுத்துச்செல்கிறார்கள். இல்லாவிட்டால் நடுக்கடலில் கொண்டுபோய் கொட்டுகிறார்கள். அவ்வளவுதான் என்றார். இவர்கள் பயன்படுத்தும் முறைகள் மரபார்ந்தவை, உள்ளூர் தொழில்நுட்பம் கொண்டவை.

கோவை சூலூரில் மாடித்தோட்டம் போடப்பட்டுள்ளதைக் காண்பித்தார். 69 வகையான கீரைகளில் 43 ஐ மாடியிலேயே வளர்க்கமுடியும். 110 வகைப்பட்ட காய்கறிகளில் 75 – 80 வகைகள் வரை மாடித்தோட்டத்திலேயே உற்பத்தி செய்ய முடியும். வீடும் குளிர்சாதனம் பொருத்தாமலேயே குளிர்ச்சியாக இருக்கும்.

நிகழ்ச்சி நடந்தது கட்டுமானத் துறை சார்ந்த இடத்தில். எனவே இறுதியாக நாம் செங்கல், சிமெண்ட், எஃகு கொண்டு என்னதான் கட்டினாலும் அதிகபட்சம் சிலநூறு வருடங்கள் இருக்கும். இயற்கையான நீடிக்கத்தக்க உயிருள்ள கட்டிடக்கலையான மேகாலயாவின் இந்த உயிர்த்திருக்கும் பாலங்களை இதுவரை பார்த்திராதவர்கள் பாருங்கள் என்று இந்தப் படத்தைக் காண்பித்து உரையை நிறைவு செய்தார்.