கடந்த ஜூன் 14,15ல் திண்டுக்கல் நொச்சியோடைப்பட்டியில் எஸ்.ரா-வும் டிஸ்கவரி புக்பேலஸும் இணைந்து கதைகள் பேசுவோம் (2): நாவல் இலக்கிய முகாம் நடத்தியதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதில் மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பின் சிக்கல்கள் பற்றிய ரோமானியக் கவிதை ஒன்றிருப்பதாகக் குறிப்பிட்டு அதன் சாரத்தைச் சொன்னார்.
கொஞ்சம் தேடியதில் அது மரீன் சொரெஸ்கு எழுதிய ஒரு கவிதை என்றறிந்ததோடு அதன் இரு ஆங்கில வடிவங்களும் கிடைக்கப்பெற்றேன். எனது தமிழ், ஆங்கிலம், கவிநுகர்திறன் ஆகியவற்றின் போதாமைகளை நன்கு உணர்ந்திருந்தபோதும் அதைத் தமிழில் எழுதிப்பார்க்கத் தயங்கவில்லை. கவிதையே மொழிபெயர்ப்பின் போதாமைகள் பற்றியது என்றுதானே சொன்னார்கள்! அந்தக் கவிதை இங்கே:
மொழிபெயர்ப்பு
நான் தேர்வெழுதிக்கொண்டிருந்தேன்
வழக்கொழிந்த மொழியொன்றில்
என்னையே மொழிபெயர்க்கவேண்டியிருந்தது
ஒரு மனிதனிலிருந்து மந்தியாக
நான் சுற்றிவளைத்துத் தொடங்கினேன்
காட்டிலிருந்து ஒரு பனுவலை
முதலில் மொழிபெயர்த்து
என்றாலும், என்னையே நான் நெருங்கநெருங்க
மொழிபெயர்த்தல் மென்மேலும் கடினமாகியது
கொஞ்சம் முயற்சியெடுத்து
சரிமாற்றுச்சொற்களைக் கண்டுபிடித்தேன்
கால்விரல் நகங்களுக்கும்
பாத ரோமங்களுக்கும்
முழங்காலுக்கு வரும்போது
திக்கித்திணற ஆரம்பித்தேன்
இதயத்தில், எனது கை நடுங்கியது
கதிரவனில் கறைசெய்துவிட்டேன்
சரிசெய்ய முயற்சித்தேன்
நெஞ்சக முடி கொண்டு
கடைசியில் தோற்றுப்போனேன்
ஆன்மாவை அடைந்தபோது
– மரீன் சொரெஸ்கு