வனவாசத்தின்போது அர்ச்சுனன் காளபைரவ வனத்தில் கடுந்தவம் செய்யத் தொடங்கினான். எழுபதடிக் கம்பம் ஒன்றை நட்டு அதன்மேல் இளநீர் ஏழை வைத்து அவற்றின்மேல் ஏழு விளாம்பழங்களை வைத்தான். விளாம்பழங்களுக்குமேல் ஏழு எலுமிச்சைகளை வைத்து அவற்றின்மேல் ஏழு கொட்டைப்பாக்குகளையும் அதற்குமேல் ஏழு குன்றிமணிகளையும் வைத்தான். குன்றிமணிகளுக்குமேல் ஏழு கடுகுகளை வைத்தான். இவையும் போதாதென்று கடுகுகளுக்குமேல் ஏழு செப்பூசிகளை வைத்து அதன்மேல் ஏறிநின்று செய்த கோரத்தவம் அது. தவத்தின் உக்கிரத்தால் வெப்பம் தகித்தது. பொறுக்க முடியாத தேவர்கள் அவனது தவத்தைக் கலைக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போதுதான் மேகராசன் அவனுக்குத் தன் மகள் மின்னொளியாளை மணமுடித்துக் கொடுத்து, இடி அஸ்திரமும் கொடுத்து, கலியுகத்தில் அர்ச்சுனன் பெயரைச் சொன்னாலே காததூரம் தள்ளிப்போய் இடிவிழும் என்ற வரத்தையும் கொடுத்தான்.
மன்னன் படத்தில் விஜயசாந்தி ஏன் “அர்ஜூனன்தான் அஞ்சுகின்ற அல்லிராணி என் ஜாதகம்” என்று பாடுகிறார்?
அல்லி மதுரைக்காரி. குழந்தையில்லாத பாண்டியனுக்கு அல்லிமலர்ப் பொய்கையில் கிடைத்தவள். நீள்முகனைக் கொன்று ஆட்சியைப் பிடித்த வீரப்பெண். பேரழகி. ஆண்வாடையே ஆகாதவள். அவளிடம் மயங்கிய அர்ச்சுனன் சூழ்ச்சிசெய்து அவளுக்குத் தெரியாமலேயே அவள் கழுத்தில் தாலிகட்டிவிட்டுப் பயந்து ஓடிவிட்டான். அவனுக்குப் பரிந்துவந்த வீமனும், கண்ணனும் வெட்கங்கெட்டுப் புறமுதுகு காட்டி ஓடினர். பிறகு இன்னொரு சூழ்ச்சிமூலந்தான் அவளைச் சிறைப்பிடித்து அர்ச்சுனன் மணந்தான். அவனுக்கு இதுபோக பாஞ்சாலன் மகள் திரௌபதி, நாகராசன் மகள் நாககன்னி, சித்தாயன் தங்கை சுபத்திரை, மேகராசன் மகள் மின்னொளி, அகஸ்தியன் பெண் போகவலி, சேராம்பூ ராசன் மகள் பவளக்கொடி என ஏழு மனைவிகள்.
இதுபோல இன்னும்பல சுவையான கதைகளுக்கு அ.கா.பெருமாள் அவர்கள் அரிதின் முயன்று தொகுத்தளித்துள்ள “அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்” படியுங்கள். காலச்சுவடு வெளியிட்டுள்ளது.
த்ருஷ்ட்த்யும்னன் என்பதுபோல வாயில் நுழையாத பல்லுடைக்கும் பெயர்கள்தானே பாரதக் கதைகளில் பார்த்திருப்பீர்கள்! பல்வரிசை, பொன்னுருவி, பவளக்கொடி, பெருந்திருவாள், நீள்முகன், மின்னொளியாள் போன்ற கதைமாந்தர்களெல்லாம் மகாபாரதங்களில் உண்டு. படித்து மகிழுங்கள்.
புத்தகம் என்றாலே ஒதுங்கி ஓடுபவர்கள்கூட ஒரேமூச்சில் படித்துவிடலாம்.
விளம்பரம்போல இருந்தாலும் இப்படித்தான் இந்த நூலைப்பற்றி என்னால் எழுதமுடியும்.