மொழியின் வளர்சிதைமாற்றம்

கடந்த மாதம். வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்து தாங்கள் போட்டியிடுவது உறுதியான மறுநாள் காலையில் வேட்பாளர்கள் வீதிவீதியாக முழுவீச்சில் பரப்புரை செய்யத் தொடங்கியிருந்தனர். திமுக வேட்பாளர் வந்த வாகன அணிவகுப்பு  பரங்கிமலை – பூவிருந்தவல்லி சாலையில் ஒரு இடத்தில் அப்படியே அரைவட்டமடித்துத் திரும்பவேண்டியிருந்தது. எல்லாரும் வேலைக்கோ வேறு எங்கேயோ விரைந்துகொண்டிருந்த நேரம். அணிவகுப்பின் முன்வரிசையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் நொடிக்குள்ளாக வளைந்து நடுப்பாதையில் நின்றுகொண்டு   பிற வாகனங்களை நிறுத்தி தமது வாகனங்கள் செல்ல வழியமைத்தார். ஒலிவாங்கி தாங்கி திறந்த ஜீப்பில் வந்தவர் உரத்த குரலில் திரும்பத் திரும்ப சொன்னார்: “Thank you very much, sir!”, “Sorry for the disturbance, sir!”. இதுவரையில் நானறிந்த திமுகவினரின் மொழி இதுவல்லவே. எனக்குப் புதியதாக இருந்தது. குறிப்பாக இன்றைய திமுக பற்றியும்  இன்றைய சென்னை பற்றியும், பொதுவாக பெரிய கட்சிகள் பற்றியும், பெரிய நகரங்கள் பற்றியும் எதையோ உணர்த்துவதாகப்பட்டது.

நமது மொழி வளர்சிதைமாற்றத்துக்கு உள்ளாவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. வளர்மாற்றத்தைவிட சிதைமாற்றத்தை? ஆச்சி அழகர் இறங்குவது பற்றி இயல்பாகச்  சொல்லிக்கொண்டிருந்தது: “சீர் கொண்டுவந்த அழகர்கிட்ட தல்லாகுளத்தை மீனாட்சி கேட்கும். மதுரையில பாதி தந்துருக்கேன். மானாமதுரையை முழுசாத் தந்திருக்கேன். தல்லாகுளத்தையும் கேட்டா தரமுடியுமான்றுவாரு. வாங்காமக் கோவிச்சுட்டுப் போயிருச்சேன்னு வப்பாட்டி வீட்டுக்குப் போய்ருவாரு” என்று. மோனையறியுமா? மொழிநயம் கருதுமா? ஆச்சியிடம் வளமான மொழியிருக்கிறது. மழை பெய்ததா என்று அம்மாவிடம் கேட்டால் “பேஞ்ச பாடுமில்லை, ஓஞ்ச பாடுமில்லை. புனுபுனுன்னு விழுந்துக்கிட்டே இருக்கு” என்கிறது. “என்னம்மா, மே மாசம். அப்படியே ஒரு டூர் அடிக்க வேண்டியதுதானே?” என்று கேட்டால் “பெறந்து வளந்து பேரன் பேத்தி எடுத்தாச்சு. ஒருநா ஒருபொளுது இந்தாருக்க மகாலுக்குப் போனதில்ல”  என்று பதில்சொல்ல முடிகிற அளவுக்கு அம்மாவின் தலைமுறைவரை வளமான மொழி மிச்சமிருக்கிறது. இதே கேள்விகளுக்கு நாம் என்ன வார்த்தைகளில் பதில் சொல்லியிருப்போம்?

 அதுநிற்க. அலுவலக நண்பர் சொந்தஊர் பக்கம் மாற்றலாகி உத்திரப்பிரதேசம் செல்கிறார். அது இந்த அலுவலகத்தில் அவருக்குக் கடைசி நாள். ஒரு கோடுபோட்ட அரைகுயர் நோட்டுப் புத்தகத்தை நீட்டி தமிழில் இருப்பதை ஆங்கிலத்தில் எழுதித்தரச்சொன்னார். பார்த்தால் அது ஒரு நாடிஜோதிட ஏடு. காண்டம் அது இது என்று ஓரிரு வார்த்தைகள்தான் புரிந்தன. இதற்குமுன் நண்பன் ஒருவன் சொல்லக்கேட்டிருக்கிறேன். அவங்கப்பா பெயர் சுந்தரராஜன் என்பதை ‘அழகுக்கே அரசனான’ போன்ற தொடர்மூலமும் இதுபோலவே இன்னபிற தகவல்களையும் ஏடெடுத்து எழுதிப் பாடிக்காட்டினார்கள் என்று. இவர் போனபோது என்ன சொன்னார்களோ, இவருக்கு என்ன புரிந்ததோ. ஓடுகிற கையெழுத்து. பாடுவதற்கான நடை. பூடகமான மொழி. இயல்வது யாதுளது? கையை விரித்துவிட்டேன்.