ஒரு வளாகம், இரு தோழர்கள்; ஒரு சிறுநூல், சில நினைவுகள்

அது 2000-இல் என்று நினைக்கிறேன். திருப்பரங்குன்றம் காவல்நிலைய பேருந்து நிறுத்தம் அருகே தியாகராசர் பொறியியற் கல்லூரிக்குச் செல்லும் திருப்பத்தில் ஒரு பெரிய கட்-அவுட் வைத்து முந்தைய ஆண்டொன்றின் அதே நாளில் உயிர்த்தியாகம் செய்த தோழர்கள் செம்பு, சோமுவுக்கு நினைவஞ்சலி செலுத்தியிருந்தார்கள். அவர்கள் யார்? எதற்கு? எப்படி என்று எதுவும் தெரியவில்லை. கேட்டபோது அந்த நாட்களில் அது ஒரு ரவுடி காலேஜ் என்று மட்டும் சொன்னார்கள். நானும் அப்போது தினமலர்தான் உண்மையின் உரைகல் என்றும் துக்ளக்தான் நேர்மையான அரசியல் இதழ் என்றும் நம்பிக்கொண்டிருந்தவன். எனவே வேறு சில தருணங்களில் இந்தப்பெயர்களை வைத்து நண்பர்களைக் கிண்டல் செய்ததோடு சரி.

சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயம் போட்டிருந்த சிறுநூல் ஒன்றைப் பார்த்தேன். ‘ஒரு வளாகமும் சில தோழர்களும்’ என்பது தலைப்பு. ‘சோமு – செம்பு நினைவலைகள்’ என்று உபதலைப்பு. ப.கு.ராஜன் தொகுத்தது. விலை முப்பத்தைந்தே ரூபாய். தோழர்கள் சோமசுந்தரம், செம்புலிங்கம் பற்றித் தெரிந்துகொள்ள பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஒரு வாய்ப்பு.

தியாகராசர் பொறியியற் கல்லூரியில் 1967ல் சேர்ந்தவர் தொடங்கி 1988ல் முடித்த ஒருவர் வரை  இந்திய மாணவர் சங்க உறுப்பினர்களாக இருந்த சிலர் தங்களது நினைவுகளையும் அனுபவங்களையும் சுருக்கமாகப் பகிர்ந்துகொள்வதன்வழி நமக்கு ஒரு சித்திரம் கிடைக்கிறது. அது தி.பொ.கவில் இந்திய மாணவர் சங்க செயல்பாடுகளை மட்டுமின்றி அந்நாட்களில் கல்லூரியில் நிலவிய அரசியல் சூழலையும், சாதியச் சூழலையும், பகடிவதைத் தொந்தரவுகளையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

கல்லூரிக்குள் நிலவிய சாதியச்சூழலில் ஒரு கட்டத்தில்  இந்திய மாணவர் சங்கம் (SFI) தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான அமைப்பாக அறியப்படலாகிறது. அதன் தோழர்கள் ஆதிக்க சாதியினரால் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். இவர்கள் திருப்பி அடிப்பதே சரியென்று முடிவெடுக்கிறார்கள். இவ்வாறு தகராறு கனன்று வந்த நிலையில் 1981 மார்ச் 31ம் நாள் வெளியாட்களுடன் நள்ளிரவில் சாதியச் சக்திகள் புகுந்து நடத்திய தாக்குதலில் செம்புலிங்கம் கொல்லப்படுகிறார். கேள்விப்பட்டு விரைந்து வரும் சோமசுந்தரமும் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழக்கிறார். செம்பு ‘மாற்று சமூக’ப் பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டிருந்தார் என்ற குறிப்பு இருக்கிறது.

நாங்கள் படிக்கிற நாட்களில் வளாகத்தில் அரசியல் வாடையே அற்றுப்போயிருந்தது என்றுதான் சொல்லவேண்டும். தன்னாட்சி அந்தஸ்து பெற்ற நிர்வாகம். பெண்பிள்ளைகளுடன் பேசினால் ஏதாவதொரு ஆய்வகத்தேர்வில் தோல்வியடையச் செய்துவிடும் கலாச்சாரக் காவலர்களான சில பேராசிரியர்கள். வளாக நேர்முகத் தேர்வு மூலமாக மென்பொருள் நிறுவனத்தில் நுழைந்துவிடுவதொன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்ட மாணவர்கள். இளநிலை பயன்பாட்டு அறிவியல் மாணவர்கள் மட்டும் தருமபுரி பேருந்து எரிப்புச் சம்பவத்தின்போது சுவரொட்டி ஒட்டித் தண்டனைக்குள்ளானார்கள்.

இந்நூலில் கருத்துரைத்துள்ள கே.புனிதவேல், இன்றைக்கு மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைகளுக்கும்கூட போராட வருவதில்லை. அரசியலற்ற போக்கு கவலை தருவதாக உள்ளது. ஏனென்றால் கல்லூரிப் பருவத்தில் ஏற்படும் அரசியல் ஈடுபாடு, செயல்பாடு, தலைமைப் பண்புகள் பின்னர் சொந்த வாழ்க்கையிலும் பெரிதும் பயனளிப்பதாக உள்ளது என்பது எங்கள் பலரது அனுபவமாக இருக்கின்றது என்கிறார்.

இந்நூலில் ஒரு கவிதை உள்ளது. முதலாமாண்டு நினைவுநாளில் முத்துக்குமரன் பாடியது. பங்குனி இரவொன்றில் உதிர்ந்த இரு நட்சத்திரங்களை அலகில் சுமந்துகொண்டு இருள் ஜனசமுத்திர நடுவே பறக்கும் இளம்பறவைகளின் பிரகடனம் பற்றிய கவிதை. அதில் திருப்பரங்குன்ற மலை உட்கார்ந்தவாக்கில் பீடி குடித்துக்கொண்டே தூங்கும் இரவுக்காவலாளி போலத் தோற்றமளிக்கிறது.

ஒத்தவாடைத் தெருவும் உயர்பூரிம விழுத்தெருவும்

பெருநகருக்குள் அடங்கிவிட்ட ஒரு மேனாள் கிராமத்தில் ஒத்தவாடை தெரு என்ற பெயரைப் பார்த்தேன். ஒத்தவாடை என்றால் என்னவென்று தெரியவில்லை. நாளிதழ்களில் வரும் குற்றச்செய்திகளைப் படிக்கும்போது இந்தப் பக்கம் நிறைய ஊர்களில் ஒத்தவாடை தெரு இருப்பது தெரிந்தது. வடமாவட்ட கிராமத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர்தான் சொன்னார். மற்ற தெருக்களில் மேலவாடை, கீழவாடை என இருபுறமும் வீடுகள் இருக்கும். ஒத்தவாடை தெருவில் ஒரு பக்கம் பார்த்தே வீடுகள் இருக்கும். அவற்றுக்குப் பின்னால் கழனிதான் இருக்கும். அதாவது வாடை என்றால் வீடுகளின் வரிசை.

 பின்னர் அகரமுதலி, அகராதி பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன். தெருச்சிறகு, கட்டிடங்களின் வரிசை என்று வாடை என்ற சொல்லுக்குப் பொருளுண்டாம்.

நமது அமெரிக்கன் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா விளக்க வடிவு தந்திருந்த மதுரைக்காஞ்சி நூலை சில வாரங்களுக்கு முன்பு படித்தபோது 18வது வரியில் உயர்பூரிம விழுத்தெரு என்ற தொடர் வந்தது. அதற்கு உயர்ந்த வரிசை ஒழுங்குடைய சிறந்த தெரு என்று விளக்கம் தந்திருந்தார். அன்றிலிருந்து பூரிமம் என்ற சொல் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. இப்போது வாடை என்ற சொல்லுக்கும் அதே பொருள் உண்டென்று கண்டுகொண்டதில் மகிழ்ச்சி.

 ‘சே, பெருவாரியாக இன்னும் புழக்கத்தில் உள்ள ஒரு எளிய சொல்லுக்குப் பொருள் தெரியாமல் இருந்திருக்கிறோமே!’ என்று கொஞ்சம் வெட்கம்.

 தமிழுக்கும் அகராதி, நிகண்டு எல்லாம் பயன்படுத்துங்கள் என்று பெரியவர்கள் சொல்லத்தான் செய்கிறார்கள். நாம் எங்கே செய்கிறோம்?