ஒரு காலத்தில் கோபக்கார முனிவன் ஒருவன் காட்டில் தனது மனைவி, ஐந்து பிள்ளைகளுடன் வசித்துவந்தான். வயது ஏறியதே தவிர மனைவியை முழுமையாக நம்பினானில்லை. அவளது நன்னடத்தையை உறுதிசெய்து கொள்ள ஒரு வழி கண்டுபிடித்து வைத்திருந்தான். அவள் தினமும் ஆற்றிற்கு தண்ணீர் எடுக்க வெறுங்கையோடு செல்லவேண்டும். கரையில் இருக்கும் பச்சை மண் எடுத்துக் குடம் செய்து அதில் தண்ணீர் மொண்டு வரவேண்டும். அவள் கற்புநெறி தவறாமல் இருந்தால் குடம் கரையாமல் நிற்கும். அப்படித்தான் ரொம்ப நாளாய் நின்றது.
சோதனையாக ஒரு நாள் அவள் தண்ணீர் கோர குனியும்போது அப்போது பார்த்து வானில் பறந்துசென்ற அழகர்கள் நீரில் தெரிய இமைப்பொழுது அசந்துவிட்டாள். அதுதான் சாக்கு என்று குடம் கரைந்துவிட்டது. பயந்துபோன கிழவி கிழவனுக்குப் பயந்து காட்டிலேயே பொழுதுபோக்கினாள். அவள் திரும்பிவரக் காணாத முனிவன் தனது தவவலிமையை இந்த தலைபோகிற காரியத்துக்குப் பயன்படுத்தி என்ன நடந்தது என்று கண்டுபிடித்துவிட்டான். மூத்த பிள்ளைகளை ஒவ்வொன்றாக அழைத்து தாயைத் தேடி தலையைக் கொய்யச் சொல்ல அவர்கள் ஒவ்வொருவரும் மறுத்து கல்லாய்ச் சபிக்கப்பட்டார்கள். அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த கடைசிப்பிள்ளை கல்லாகப் பயந்தோ என்னவோ தாயைக் கொல்ல கோடரி கொண்டு ஓடியது.
அங்கு அவளோ ஆவாரங்குலை சேகரிக்க வந்த நம்மன்னை பின் சென்று ஒளிந்தாள். அடைக்கலம் நாடி வந்தவருக்கு அபயம் அளிக்கும் நம்மன்னை என்னைக் கொன்றுவிட்டுப் பின் உன் அன்னையைக் கொள் என்றார். அந்த மூடனும் இருவரையும் வெட்டிச் சாய்த்ததோடு நில்லாமல் அப்பன் நம்பமாட்டானே என்று தாயின் தலையைக் கையோடு எடுத்துச் சென்றான்.
சொன்னதைச் செய்துவிட்டானே சொட்டைவால் குட்டி என்று மகிழ்ந்த அப்பன்காரன் இரண்டு வரம் தருவேன், என்ன வேண்டும் கேள் என்றான். தான் ஆடாவிட்டாலும் தன் சதையாட முதல் வரமாக அண்ணன்களை உயிர்ப்பிக்கவேண்டும் என்றான். அவ்வாறே செய்தான். இரண்டாவது வரமாக தனது அம்மையை உயிர்ப்பிக்க வேண்டும் என்றான். தலையைக் கொண்டுபோய் உடலோடு ஒட்டு, உயிர்த்துக்கொள்ளும் என்றான். இவனும் தலையைத் தூக்கிகொண்டு தலைதெறிக்க ஓடினான். எவளென்று தெரியாவிட்டாலும் அவளைக் காப்பாற்ற உயிர்விட்டாரே நம்மன்னை. அவரைப்பற்றி அப்போதும் நினைத்தானில்லை. ஆனால் இயற்கை நினைத்தது. அவசரத்தில் நம்மன்னை உடலில் அவன் அன்னை தலையைவைத்து உயிர்ப்பித்துவிட்டான்.
அறியாத ஒருத்திக்காக முதலில் சிரசு தந்தார், பிறகு உடலும் தந்தார் நம்மன்னை. அது அந்த யுகத்தின் தர்மம்.