நமது சமூக வழக்கப்படி தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவை ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புவரை எனக்கும் தெரியாது. அ.முத்துக்கிருஷ்ணன் ஒருங்கிணைக்கும் ‘பசுமை நடை’யொன்றில் பாறைப்பள்ளியில் அவரிடம் பாடம் கேட்டேன்.
அறுபது ஆனபின்னும் இன்னும் இளைஞர். மலைக்காது மலை ஏறுகிறார். மலைகள் என்றால் மரங்களடர் சோலைகள் அல்ல. வழுக்கும் மொட்டைப்பாறைகள். அலுவலராக ஓய்வு பெற்றுவிட்டாலும் அறிஞராகத் தொடர்ந்து செயலாற்றுகிறார். ‘கல்’வர்களிடமிருந்து யானைமலையைக் காப்பாற்றியதில் அவருக்கும் பெரும்பங்கு உண்டு. ‘பாண்டிய நாட்டு வரலாற்றுப் பேரவை’ மூலமும் ‘பசுமை நடை’ மூலமும் அடுத்த தலைமுறைக்கு நமது அறிவுச்சொத்துகளை எடுத்துச்செல்கிறார்.
வலிக்காத கிண்டலும் வாய்திறக்காச் சிரிப்புமாய் இளைஞர்களை ‘ஓட்டுவதிலும்’ வல்லவர். உதாரணத்திற்கு ஒன்று. மூன்று தன்னார்வலர்கள் நிகழ்வொன்றில் கையைக் கட்டிக்கொண்டு தீவிர முகபாவத்துடன் நிற்கிறார்கள். இதை ஒருவர் நிழற்படம் எடுத்து முகநூல் பக்கத்தில் இடுகிறார். மற்றவர்கள் ‘வாவ்’ ‘நைஸ்’ ‘சூப்பர்’ என்று கருத்துரைக்கிறார்கள். இவர் தனக்கேயுரிய பாணியில் ‘இந்த மூணு பேருக்கும் 28ம் தேதி வாய்தா’ என்று கமெண்ட் போடுகிறார். (திரும்ப அந்த படத்தைப் பார்க்கையில் அவர்கள் காவலர்களிடம் அகப்பட்ட குற்றவாளிகள் போலவே இருந்தார்கள். 28ம் தேதிக்கும் முக்கியத்துவம் உண்டு. அன்று இன்னொரு நிகழ்வு இருந்தது).
இப்போது நாம் பேசவந்தது அவர் எழுதியுள்ள ‘மதுரையில் சமணம்’ நூல் குறித்து. மதுரை சமணப் பண்பாட்டு மன்றத்தின் சார்பில் ஜனவரி 2013ல் இந்நூல் முதலில் வெளிவந்தது. அதன் இரண்டாம் பதிப்பை இப்போது கருத்து=பட்டறை வெளியிட்டுள்ளது. வாசிக்க வசதியான நல்ல வடிவமைப்பு. ஓரிரு எழுத்துப்பிழைகளே உள்ளன. புராதன தோற்றமோ பொடிப்பொடியாகும் தாளோ இல்லை. வழுவழு தாளில் வண்ணப்படங்கள் பதினெட்டு இறுதியில் தரப்பட்டுள்ளன (கீழவளவு சமணர் படுக்கையில் ஆறுமுகமும் சந்திரலேகாவும் சிவப்புப் பெயிண்டில் படுத்திருக்கின்றனர்). இறுதியில் ஒருபடத்தில் மதுரையில் சமணச்சிற்பங்களும் படுக்கைகளும் உள்ள இடங்கள் கூகல் வரைபடத்தில் குறித்துக்காட்டப்பட்டுள்ளன.
சாந்தலிங்கம் இதை சமணப் பண்பாட்டு மன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு வழிகாட்டி நூலாக ஆக்கியுள்ளதால் அடிக்குறிப்புகளோ, குறிப்புதவி நூல் பட்டியலோ இல்லை. பயங்கொள்ளற்க. மூன்று இயல்கள் உள்ளன. சமண சமயத்தின் தோற்றமும் தென்னகப் பரவலும் பற்றிய அறிமுகம் முதலில். மதுரையைச் சுற்றியுள்ள சமணச் சின்னங்களின் விளக்கமான வழிகாட்டுதல் அடுத்த இயலில். இயல் மூன்றில் இக்குகைகள் ஆசிவகத்தைச் சார்ந்தவையா என்ற விவாதத்தைப் பரிசீலித்து சமணச் சின்னங்களே என்று நிறுவுதல். பின்னிணைப்பாக பாண்டி நாட்டு (தென் தமிழகத்தின்) சமணத் தலங்களின் பட்டியலும், அயிரைமலை, உத்தமபாளையம், கோவிலாங்குளம், தொப்பலாக்கரையில் உள்ள சமணச்சின்னங்கள் பற்றிய விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
இதை சமணம் என்றொரு சமயம் சார்ந்த நூலாகக் கருதி எளிதில் புறந்தள்ளக்கூடாது. சமணத்தின் சாதிபாராட்டாமை, அகிம்சை, அன்ன தானம், அறிவு தானம், அடைக்கல தானம், ஔசத தானம் என்ற விழுமியங்களின் இன்றைய தேவை ஒருபுறம் இருந்தாலும் இச்சின்னங்கள் உள்ள இடங்களுக்கு வேறொரு இன்றியமையாப் பண்பு உண்டு. அது தமிழி எழுத்துக்களைத் தன்னகத்தே கொண்டு நம் தொன்மைக்கு சான்று பகர்வதே அது. மேலும் இவ்விடங்களின் மிச்சங்கள் கனிமச்சுரண்டலின் கொடுங்கரங்களுக்கு இரையாகாமல் இருக்க இவைபற்றிய விழிப்புணர்வும் தொடர்ந்து இவ்விடங்களில் மக்கட் புழக்கமும் அவசியம். தமிழிக் கல்வெட்டுகள் பற்றிய விரிவான தகவல்களை இந்நூலில் தந்துள்ளார்.
எழுத்தில் இருந்தால்தான் எதையும் வரலாறு என்று ஏற்றுக்கொள்ளும் சிலர் இருக்கலாம். சில நாட்டார் வழக்காற்றியல்காரர்கள் முற்றாக தொல்லியலாளர்களைப் புறக்கணிக்கலாம். அரச வரலாறுகள் என்று கல்வெட்டுக்களைச் சிலர் புறக்கணிக்கலாம். தொல்லியலாளர் சிலர் இலக்கியப் பரிச்சயமே இல்லாதிருக்கலாம். சாந்தலிங்கம் இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறவராகவே தெரிகிறார். பழந்தமிழ் இலக்கியங்களையும், சிற்றிலக்கியங்களையும் மேற்கோள்காட்டி இணைப்புக் கண்ணிகளால் வரலாற்றை நெய்ய அவருக்கு முடிகிறது. அறிவுலகின் சமகாலப் போக்குகளுக்கு முகம்கொடுக்கிறார். ஆசிவகமா என நடக்கும் விவாதத்தில் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து தனது முடிவுகளை உறுதிபட உரைக்கிறார். சமணர் கழுவேற்றத்துக்கான சமகாலத் தொல்லியல் ஆதாரங்கள் இல்லை என்பதைத் தெளிவுபடச் சொல்லுகிறார். பெண்மணிகள் சிற்பங்கள் செய்துவித்திருப்பதையும், மாணாக்கர் முன்னொட்டு (இனிஷியல்)போல தங்கள் ஆசிரியர்கள் பெயர்களை பெருமையாகப் பொறித்திருப்பதையும் சுட்டுகிறார். நமது அண்டை மாநிலங்களில் வரலாறு எழுதுவோர் பிறமொழியில் (குறிப்பாக தமிழில்) ஒரு கல்வெட்டு தங்கள் பகுதியில் இருந்தால் கல்வெட்டுச் செய்தியை மட்டும் வசதிப்படி சொல்லி அதன் மொழியை மறைத்துவிடுவர். அய்யா அத்தகைய சாய்வுகளுக்கு உட்படாதவர். கன்னடக் கல்வெட்டோ வடசொல்லோ அதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
வடதமிழகத்திலும் ஜைன இளைஞர் மன்றத்தினர் அகிம்சை நடை செல்கின்றனர் என அறிகின்றேன். அவர்களுக்கும் வழிகாட்ட அய்யாவோ, அறிஞர் பிறரோ இன்னொரு நூல் எழுதட்டும்.
மதுரையில் சமணம் – முனைவர் சொ.சாந்தலிங்கம், விலை ரூ. 100/-
கருத்து = பட்டறை,
2, முதல் தளம், மிதேஸ் வளாகம், 4வது நிறுத்தம், திருநகர், மதுரை – 6. பேசி: 9842265884
சாந்தலிங்கம் அய்யாவுடன் மதுரையிலுள்ள சமணப்பள்ளிகளில் பாடம் கற்கத் தொடங்கி நான் இப்போதுதான் நாலாம் வகுப்பு நிறைவுறும் தருவாயில் இருக்கிறேன். அன்பான ஆசிரியர் நம்ம சாந்தலிங்கம் அய்யா! மதுரையில் சமணம், தொல்லியல், தமிழிக் கல்வெட்டுகள் குறித்து அதிகமாக அறிந்தது சாந்தலிங்கம் அய்யாவால்தான். நல்ல பதிவு.